துவக்கு கவிதைப் போட்டி

புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை இலக்கியமாக பதியப்பட வேண்டும் என்னும் நோக்கில் துவக்கு இலக்கிய அமைப்பு, மாற்று கவிதை இதழ் மற்றும் கூடல்.காம் தமிழ் இணையதளம் ஆகியவற்றுடன் உலகளாவிய கவிதைப் போட்டியினை நடத்துகிறது. இக்கவிதைப் போட்டி குறித்தான அறிவுப்புகள் வார்ப்பு.காம், கீற்று.காம், திசைகள்.காம், அம்பலம்.காம், திண்ணை. காம், பதிவுகள்.காம் போன்ற இணையதளங்களிலும், கணையாழி, இந்தியா டுடே,புதிய காற்று, இனிய நந்தவனம், நடவு, கவிதை உறவு, ஒடுக்கப்பட்டோர் குரல் மற்றும் 60க்கும் மேற்பட்ட சிற்றதழ்களிலும் வந்திருக்கிறது. போட்டிக்கான கவிதைகள் தமிழக முகவரிக்கும் துபாய் முகவரிக்கும் வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் மூலமாக வரும் கவிதைகள், பதிவுத் தபால்களில் வரும் கவிதைகள் என யாவும் முறையாகவும் தொகுக்கப்பட்டு வருகிறது..

வலைப்பூ நண்பர்கள் அறியும் பொருட்டு போட்டி குறித்தான அறிவிப்பை இங்கே பதிகிறேன்.

துவக்கு கவிதைப் போட்டி - புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப் பதிவு

துவக்கு இலக்கிய அமைப்பு, மாற்று கவிதையிதழ், கூடல்.காம் தமிழ் இணைய தளம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி.

முதல் பரிசு: உருபா. 10,000
இரண்டாம் பரிசு: உருபா. 7500
மூன்றாம் பரிசு: உருபா. 5000
பாராட்டு பரிசு: உருபா. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்பவேண்டிய முகவரிகள்.
இ. இசாக்
P.O.Box : 88256
Dubai, U.A.E.

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு.

மின்னஞ்சலில் அனுப்ப thuvakku@yahoo.com, thuvakku@gmail.com

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15.திசம்பர்.2005

விதிமுறைகள்:
1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.
2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.
3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.
4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.
6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.

மேலும் விரிவான விபரங்கள் அறிய:
மாற்று கவிதையிதழ் http://www.thuvakku.com/, http://www.koodal.com/, பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 503418943.
கவிமதி- 00971 505823764
நண்பன்- 00971 50 8497285.
சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653,
முத்துகுமரன்-00971506243115,

சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254.

அன்புடன்

முத்துகுமரன்

விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்

விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்.........

விசிலடிச்சான் குஞ்சுகளும், கருத்து சுதந்திரமும்........
கருத்துச் சுதந்திரம் பற்றியும், அதன் தேவை பற்றியும் இன்று தமிழகம் தழுவிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது..இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தந்த திருமதி குஷ்புசுந்தருக்கும், திருமதி சுகாசினிமணிரத்னம் அவர்களுக்கு நன்றிகள்...

முதலில் சில அடிப்படையான கூறுகளை பார்த்துவிடுவோம்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு பொது தேசம். இங்கு காலசூழல்களிலும் சரி, சமூக அமைப்புகளிலும் சரிபன்முக கலாச்சாரத் தன்மை உடையது. விவசாயத்தை முதுகெலும்பாக நம்பியிருக்கிற நாடு. கிராமங்கள் நிறைந்த நாடு.

இந்தியாவின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு. - தமிழ் மொழி - தமிழர்கள்.
தமிழர்கள் ஒரு தனி இனம். தமிழர்களுக்கென தனி மொழி இருக்கிறது. தனிக் கலாச்சாரமிருக்கிறது. தமிழினம் மிகப்பெரிய தேசிய இனமாகஇருந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் இந்த இனம் விரவிக் கிடக்கிறது. இன்று இந்திய தேசிய கட்டமைப்புக்குள் இந்த இனத்தின் பெரும்பகுதி இருக்கிறது. மற்றும் சில பகுதிகள் பல் வேறு தேசங்களாக சிதறிக் கிடக்கின்றன.
சரி விசயத்திற்கு வருவோம்.

கருத்துச் சுதந்திரம். ஊரெங்கும் ஒரே கூப்பாடு. கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது, மக்கள் இதைத்தான் பேச வேண்டும் என்று ஒரு கும்பல் (வன்முறைக் கும்பல்) என்று திரிகிறது. அதனால் அவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று பெருமூளைக்காரர்கள் கூக்குரலிடுகின்றனர். குஷ்புவையும், சுகாசினியையும் அப்புறம் கவனித்து கொள்வோம். முதலில் இந்த பெருமூளைக்காரர்கள் கட்டமைக்க நினைக்கும் சமூகம்எத்தகைய ஆதிக்க உணர்வுடையது?.

பாட புத்தகங்களில் தான் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஆறு கோடிக்கு மேல்.ஆனால் ஆறுகோடி பேரின் உணர்வுகளும் இதுதான் என்றுதீர்மானிக்க ஒரு கூட்டம். அந்த கூட்டத்தில் வீற்றிருப்பவர்கள் என்ன அரிதாரம் போட்டிருக்கிறார்களோ அதையே எல்லோருடய முகமென்று சொல்வதுதான் கருத்துச் சுதந்திரம்.

நவீன முன்னேற்றம் என்ற பெயரில் மறு காலணியாதிக்க அடிமைகளாக வாழ்ந்துவரும் இந்த மாநகர வாழ்க்கைதான் இந்த மாநிலத்தின்மொத்த வாழ்க்கை என்றெரு மாயபிம்பத்தை உண்டு பண்ணி, அதுதான் மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் உயர்நிலை வாழ்வு என்றும் சித்தரிக்கும் முனைப்புடன் இயங்குகிறார்கள். ஆனால் மண்ணின் தன்மையோடு வாழும் வாழ்க்கை முறை என்பது பழமையானது, மூடத்தனமானதுநாகரீகமற்றது என்று நம்மண்ணின் அத்தனை சுகங்களையும் சுகித்துக்கொண்டு அறிவிப்பு செய்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல்அவர்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் தங்கள் நாகரீக வெளிப்பாட்டின் உச்சம் என்பவர்கள்தான் கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று வீர முழக்கம் செய்கின்றனர்.

ஊடகங்கள் ( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள்...) இந்த நாகரீக கணவான்களின் வலுவான ஆயுதம். அதைக்கொண்டு மக்களின் மீதுதிட்டமிட்டு கத்திகள் துப்பாக்கிகள் இன்றி காயங்கள் ஏற்படாத ஆரோக்கியமான வன்முறைகளை தொடுக்கிறார்கள். சமுதாய சீரழிவுகளை அரங்கேற்றி அதற்கொரு புனிதப்பூச்சளித்து எல்லோரும் சீரழியலாம் வாருங்கள் என்ற அழைப்புகள். எடுத்துகாட்டுகள் சொல்ல எத்தனையோ இருக்கிறது. தற்போது எல்லோராலும் பேசப்படும் பிரச்சனைகளிலிருந்து பார்ப்போம்.

இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பு....

இந்த இதழ்களின் கருத்துகணிப்புகளின் நோக்கம் என்ன? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? எத்தகையான விழிப்புணர்வு அது? அடிப்படை நேர்மைகூட இல்லாமல் ஒரு குறுகிய எண்ணிக்கைகயிலான பெண்களிடம் கருத்து கேட்டு? அதற்கு மெருகேற்றும் வகையில் அழகு பெண்களின் அவையங்கள் தெரியுமாதிரியான வண்ணப்புகைப்படங்கள் இட்டு இது தான் தமிழ்பெண்களின் எண்ணங்கள் என்றுசொல்வது எத்தனை அயோக்கியதனம். கருத்து கணிப்பில் கலந்து கொண்ட பெண்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எந்த வகையில் அவர்கள் அனைத்து பெண்களின் சார்பாகவும் பேசும் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.ஏதோ நகரங்களில் வசிக்கும்பெண்கள்தான் பெண்கள் அவர்களுக்கு இருக்கிற சிந்தனை, அவர்களிக்கிருக்கிற தேவை, அவர்களிக்கிருக்கிற பிரச்சனைகள்தான்எல்லா பெண்களுக்குமானது என்று எந்த அளவீடுகளீல் பொருத்துகிறார்கள்.... எல்லாவற்றிற்கும் பதில்- சபலப்புத்தி கொண்ட வாசகர்களின்உணர்ச்சி நரம்புகளை தூண்டிவிட்டு பணம் பண்ணிய ஒரு வக்கிர வியாபார சாணக்கியத்தனம்.

அதிலும் இந்த பத்திரிக்கைகளின் நோக்கம் எந்த அளவில் இருக்கிறது? மாறிவரும் சூழல்களுக்கேற்ப வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்என்ற ஒற்றைச் சிந்தனையிலையிலே பத்திரிக்கை என்னும் மிகப்பெரிய சக்தியை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தாமல் மலினப்படுத்தி மாசுபடுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பெண்கள் என்றால் கண்ணுக்கு தெரிபவர்கள் நடிகைகள். நடிகையின் நகவிரல் நீளம்எவ்வளவு என்பதிலிருந்து இடுப்பில் எத்தனை கிராம் சதை கூடியிருக்கிறது என்பதுதான் அத்தியாவசியமாகிறது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான இந்த நடிகைகளை ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதிகளாக்கும் சிந்தனை வன்முறைகளை அரங்கேற்றுகிறார்கள். அது எல்லாம் ஆரோக்கியமான வன்முறைகள்தொலைக்காட்சிகள் நாங்கள் பத்திரிக்கைகளுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டி ஒரு போலி வாழ்வியல் முறையைமக்கள் மீது திணிக்கிறது. இவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். இது குறித்தான சமூக விழிப்புணர்வு வரவேண்டும்.
பெண்ணியவாதிகள் எத்தனை பேர் இந்த ஆரோக்கிய வன்முறைகளை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

பெண்ணியம் என்பது சமூகத்தில் பெண்களுக்கு உரிய அனைத்து உரிமைகளை வழங்குவதாகவும். தன் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய உரிமை உடையவளாகவுனம்அவர்களின் சுயமரியாதை காக்கப்படுவதாகவும் யாரையும் எதிர்பார்த்து வாழ்ந்திடா பொருளாதார சுயசார்பை அடைவததாகவும், தனக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடக்கூடியதுணிவைத் தரக்கூடியதாக அமைய வேண்டுமே தவிர ஒழுக்கமின்மைதான் சுதந்திரம் என்பது அல்ல. இதைச் சொல்பவர்களை ஆணாதிக்கவாதிகள்என்று தூற்றுவது அறிவார்ந்த செயலாகாது.

இந்த போலி பெண்ணியவாதிகள் முன் வைக்கும் தத்துவம் அடிமை மாற்றமாக இருக்குமே தவிர உண்மையான விடுதலையாக இருக்காது.
பாமர மக்கள்தான் இந்த திரை மாயையில் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கிறார்கள் என்று நினைத்தை பொய்த்து காட்டி இருக்கிறார்கள் இன்றைய நம் முற்போக்கு சிந்தனைச் சிங்கங்கள். அதிலும் இந்த ரசிக போதையின் உச்சத்தில் அவர்களின் சிந்தனைகள் மழுங்கிப் போய் ஒழுக்க கேட்டிற்கு வால்பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டது. குஷ்பு இந்தியா டுடேவில் அளித்த பேட்டி- பாதுகாப்பான உடலுறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள அவசியமான ஒன்று என்று. ஆனால் ஒன்றை மறந்து விட்டார் ஒழுக்கம்தான் எய்ட்ஸ் வராமல் காக்கும் நிரந்திரத் தீர்வென்பதை. அதை ஏன் வலியுறுத்தவில்லை . அந்த அளவோடு அவர் நிறுத்தி இருக்கலாம்.

ஆனால் தமிழர்கள் எத்தனை பேர் திருமணத்திற்குமுன் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்று கேட்டது உண்மையிலேயே ஒழுக்கமாக வாழும் தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் இல்லையா?அவர் முன் வைத்த கருத்துகளில் என்ன வகையான பெண் சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான கருத்துகள் என்ன இருக்கிறதுதப்பு செய்யுங்கள், தப்பாக இல்லாமல் சரியாக தப்பு செய்யுங்கள். விழிப்புணர்வு என்பது என்ன தவறை எப்படிச் சரியாக செய்வது என்பதா?

தமிழ்பெண்களை கேவலப்படுத்திய குஷ்புவை காப்பாற்ற இந்த வி.கு க்கள் சரணடைந்தது தந்தை பெரியாரிடம்......
இத்தனை நாட்கள் வெறுத்தொதுக்கப்பட்ட பெரியார் அவர்களை காக்க வந்த ஆபந்பாந்தனாக, கடவுள் அவதாரமாகவே தெரிகிறார். எந்த இடத்திலும் ஒழுங்கீனத்தை அணு அளவும் அங்கீகரிக்காத அவரின் சிந்தனைகளை கொச்சைப்படுத்தி, ஒழுங்கீனத்தை வலியுறித்ததாக திரித்து சொல்லும் போதுதான் அவர்களின் குறுக்கு புத்தி வெளிப்பட்டு விட்டது. இது தமிழர்களுக்கெதிராகான ஒரு போரை தமிழர்களை கொண்டே, தமிழகத்திற்குள் நடத்தத்துடிக்கும் அரிசியல் அரிப்புதான் என்று. அதை அறியாத சில பெரியாரிய சிந்தனையாளர்கள்சிலரும் விட்டில் பூச்சிகளானதுதான் வருத்தத்திற்குரியது.


இப்போது கருத்து சுதந்திரத்தை தூக்கி நிறுத்த கனிமொழி மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆரம்பத்திருக்கும் இயக்கம் கருத்து.... அனைவரும் தயக்கமின்றிகருத்துகளை வெளியிட தங்களது இணையதளம் வாய்ப்பாக இருக்கும் என்றதொரு அறிவிப்பு வேறு. படிக்கும் போது எழும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களின் புரிதல்கள் ஆரம்ப நிலையிலே தெளிவில்லாத ஒன்றாக இருக்கிறது. குஷ்பு பிரச்சனையையும்சுகாசினியின் பிரச்சனையையும் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறார் கனிமொழி. கனிமொழியை பொறுத்தவரைகுஷ்புவும், சுகாசினியும்தான் பெண்ணினம். என்ன ஒரு போலித்தனம். அடித்தட்டு மக்களுக்களை உணர்ந்து கொள்ளாத அல்லது அவர்களின் வாழ்வியலையோபிரச்சனைகளுக்காகவோ குரல் கொடுக்காத இவர் ஒழுங்கினத்தை முன்னிறித்தியவர்களுக்காக கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்.இது அவரது ஆதிக்க மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.கார்த்திக் சிதம்பரம்.... கருத்து சுதந்திரம் பற்றி பேச இவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தமிழர்களின் சார்பாக பேசுகிறேன்என்று சொன்னால் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. தமிழ்வழிக் கல்வி தொடர்பான வழக்கில் இவரது தாயார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம்நீதி மன்றத்திலே ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் எனது குழந்தைக்கு தாய்மொழி தமிழ் கிடையாது என்று. அவரது தாய்மொழி தமிழ் இல்லைஎன்ற பின்பு அவர் எந்த வகையில் தமிழர் ஆக முடியும். இவர் சொல்கிறார் காலத்திற்கேற்ற கலாச்சாரம் மாற வேண்டாமா? தமிழ் கலாச்சாரத்தில் ஜீன்ஸ் போடும் பழக்கம் இருந்ததா, பீசா சாப்பிட்டமா?உடைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் ஒழுக்க அளவீடுகளிலும் மாற்றம் வேண்டும் என்பதா? எதோடு எதைப் பொறுத்துவது.....

தமிழ் மக்கள் கருத்து சுதந்திரத்திற்காக நிறுவியிருக்கிற இவர்களின் கருத்து இயக்கத்தின் இணைய தளம் தணிக்கைக்குட்பட்டது. குறிப்பாக எவரும் தமிழில் கருத்து சொல்ல முடியாது. அவர்கள் பேசுகிறார்கள் கருத்துச் சுதந்திரம் பற்றி...

தொடரும்........

பொது மன்னிப்பு - குடியரசு தலைவருக்கே முழு உரிமை

(அண்மையில், மரண தண்டனை குறித்த ஒரு மறுசிந்தனையை, இந்தியாவின் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டுள்ள சூழலில், அது தொடர்பான பல்வேறு விவாதங்கள் நாடெங்கிலும் எழுந்துள்ளன. 5.11.05ஆம் நாளிட்ட டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டில், முன்னாள் இந்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.)

பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பான, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவு பற்றி அண்மையில் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கூற்றும், நாடாளுமன்றத்தில் அதற்கான விவாதத்தை அவர் வரவேற்றிருப்பதும், அவருடைய போற்றத்தகுந்த அறிவுத் தேடலையும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளைக் கட்டுக்கு கொண்டுவரும் அவருடைய விருப்பத்தையும் தெளிவாக விளக்குகின்றன. நாடாளுமன்ற விவாதம் என்பது நடைமுறை நெறிமுறைகளை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த வழி இல்லை என்றாலும், பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தின் வரம்புகளையும் உள்ளடக்கங்களையும் தெளிவு படுத்துவதாக அமையும்.

இந்திரா காந்தி கொலைவழக்கு தொடர்பான ஒரு நிகழ்வை இங்கு நாம் நினைவுகூரலாம். அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றிருந்தவர்களில் ஒருவரான கேகர்சிங், தில்லி நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1988 ஆகஸ்ட்டில், தில்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தன. அதன் மீதான ரிட் மனு ஒன்றும், மறு ஆய்வு கோரும் மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வாறு நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்றபின், அவருடைய மகன் அவருக்கான கருணை மனு ஒன்றை இந்தியக் குடியரசு தலைவரிடம் முன்வைத்தார். அந்த மனு, எந்தச் சாட்சியங்களின் அடிப்படையில், ­அன்று நீதிமன்றங்களாலும் தண்டனை வழங்கப்பட்டதோ, அந்தச் சாட்சியங்களின் நம்பகத்தன்மை பற்றிப் பகுத்தாய்வு செய்திருந்தது. வேறு பிற காரணங்களைத் தாண்டி, உச்சநீதிமன்றம் வழக்கை ஆராய்வதில் தவறு செய்துவிட்டதென்றும், அத்தவற்றை குடியரசு தலைவர் களையவேண்டும் என்றும் அம்மனு வெளிப்படையாகவே கோரியது.

அம்மனுவை நிராகரித்த குடியரசு தலைவர், ""நாட்டின் மிக உயர்ந்ததான ஒரு நீதிமன்றம் தீர்மானித்த முடிவில் தலையிடவோ, வழக்கின் தன்மைகளை ஆராயவோ தன்னால் இயலாது என்று கருது'வதாகக் கூறிவிட்டார்.

ஆனால் அதே சிக்கல் மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. இம்முறை, அவருடைய மகன், குடியரசு தலைவரின் அதிகார வீச்சு குறித்த மிக முதன்மையான செய்திகளைத் தன் மனுவில் எழுப்பியிருந்தார். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்குக் குடியரசுத்தலைவர் கட்டுப்பட்டவர் இல்லை என்பதோடு, ஒரு வழக்கின் தன்மையை ஆய்ந்தறிந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவுக்கு வரவேண்டிய கடமையும் உரிமையும் உடையவர் அவர் என்று அம்மனு கூறியது.

மனுவை எதிர்த்து அரசாங்கத்தின் தலைமை வழக்குரைஞர் அளித்த விளக்கத்தை மறுதலித்த உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவரின்
அதிகாரம் குறித்து மனுதாரர் கொடுத்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.

தலைமை நீதிபதி பாதக் ­மூலமாக, அந்நீதிமன்றம், அரசின் நிடவடிக்கையால் தனிமனித சுதந்திரமோ, உயிர்வாழும் உரிமையோ மறுக்கப் படுமானால், அது நாகரீகம் மிக்க சமூகத்தில் மிகுந்த கவலையோடு எதிர்கொள்ளப்படும். தனிமனித உரிமையும், வாழும் உரிமையும் மறுக்கப்படும் வேளைகளில், அது மிகத் தேர்ந்த, மிகுந்த அனுபவம் உள்ள ­மூளையிலிருந்து வெளிப்பட்ட தீர்ப்பாக இருந்தபோதிலும், அதனை மறு ஆய்வுக்காக, கூடுதல் அதிகார மையத்திடம் ஒப்படைத்தல் ஏற்றதே. அவ்வாறு ஒப்படைக்கப்படும் அதிகாரம், மக்களின் சார்பான, தேசத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவரிடம் அளிக்கப்பட வேண்டும்'' என்று தீர்ப்பெழுதியது.

இத்தகைய முடிவுக்கு வருவதற்கு, அமெரிக்க அய்க்கிய நாடுகள் அவையின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றைத் தனக்கு அரணாக அமைத்துக் கொண்டது. எனவே, நியாயமற்ற முறையில் தான் தண்டிக்கப்பட்டதாக மனுதாரர் கருது மிடங்களில், கவனமாகவும் சாய்வுகள் ஏதுமின்றியும் மனுதாரரின் கோரிக்கையை ஆராயவும், நீதிபதிகள் தவறு செய்துள்ளனர் என்று கருதுமிடங்களில் தண்டிக்கப்பட்டவருக்கு சலுகை வழங்கவும் குடியரசு தலைவருக்கு உரிமை உள்ளது. இந்நிடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பாகவோ, நீதிமன்ற நடைமுறைகளில் குறுக்கிடுவதாகவோ ஆகாது.

தமிழில்: சுபவீ.

நன்றி: தென்செய்தி
Related Posts with Thumbnails