ஒரு கூட்டுக் கிளியாக


நன்றி: திணமணி.காம்

சேரனின் முத்தையாவும் என் முத்துவும்:


இந்த பதிவு என் அம்மா அப்பாவிற்காக.......




நச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ‘’தவமாய் தவமிருந்து’’. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து விட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.

சேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. நூறு விழுக்காடு சரியே. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப்போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். அவைகளும் ஏற்றுக்கொள்ள கூடியவைகளே. சேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப்படத்தில் சேரன் சரியாக கையாளத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.



ஒரு நடுத்தரவர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார்ராஜ்கிரன். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதை வெளிப்படுத்தும் வகையில் அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்ல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.

என்னை கரைத்த காட்சிகள் சில..

தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...

சுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...

படிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி
...

கல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி
இந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம்( அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.

ஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந்தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது. படத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்பிச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும்.தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழைந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்??

அதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத்துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத்தெரியாமல் தடுமாறுவது உண்டு.இதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லைததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்ச்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.

சரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி.பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே.கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்கவைத்தைருந்தது அற்புதமான காட்சி.

சேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரன் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை(7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்தவகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு தெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.

படம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி.. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.



படத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.

படத்தின் சின்ன சின்ன குறைகள் கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்ச்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.

தர்மபுரி பேருந்து எரிப்பு - என் எண்ணங்கள்

உயிர்கள் கருக்கப்பட்டு
ஆண்டுகளாகிவிட்டது
ஆறு
கர்ப்பப்பைகளின் ரணங்களோ
இன்னும்
ஆறாததாய்த்தான் இருக்கிறது
*

கோவை வேளாண்கல்லூரி மாணவிகள் தர்மபுரி இலக்கியம்பட்டியில் எரித்து கொள்ளப்பட்ட அந்த தருணத்தில் நான் தர்மபுரியில்தான் கல்லூரியில்(சப்தகிரி பொறியியல் கல்லூரி) படித்து வந்தேன். பெரும்பாலும் ஒரு நேரத்தோடு கல்லூரி முடிந்துவிடும். அன்றும் அதே போலத்தான் அன்றும் மதியமே கல்லூரி முடிந்துவிட்டது. நான்கு ரோட்டுக்கருகில் அந்த கல்லூரி பேருந்துகள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மதிய உணவுக்கு சென்றீருந்தார்கள். நாங்களும் அந்த பேருந்தின் வண்ணத்தை கிண்டலடித்து கொண்டு சென்றோம். அப்போது யாருக்கும் தெரியாது, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கொடுர சம்பவம் நடக்கபோகிறதென்றுநாங்கள் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை நான்கு மணி அளவில்தான் விசயம் தெரிந்தது. உடனே எல்லோரும் இலக்கியம்பட்டிக்கு சென்றோம். விவசாயக் கல்லூரி மாணவர்கள் மிகவும் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் இருந்தனர். அங்கிருந்த போலிஸாரும் வெளி மாணவர்கள் யாரையும் அவர்களோடு பேச அனுமதிக்கவில்லை. எப்படியோ ஒரு கட்டத்தில் தர்மபுரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களை நெருங்கிவிட்டோம். பிறகு மாணவர்கள் எல்லோரையும் போலிஸார் அனுமதித்து விட்டனர். யாரும் அறிந்திருக்கவில்லை நாலாபுறமும் காவல்துறை குவிக்கப்பட்டிருப்பது. இருபது நண்பர்கள் மனிதச் சங்கலிபோல எரிக்கப்பட்ட அந்த பேருந்தைச் சுற்றி போலிஸார் நெருங்காவண்ணம் நின்று கொண்டோம்.நேரமாக ஆக பதட்டம் கூடிக்கொண்டே போனது. எல்லோரின் மனதில் அடங்காத கோபம் மட்டும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேண்டும், அப்போதைய முதல்வர்கலைஞர் வரவேண்டும்( அது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இப்போது உணர முடிகிறது), குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்தார், மாணவர்களோடு பேசினார். யாரோ ஒரு மாணவன் ஆட்சித்தலைவரின் மேல் விழ காவல்துறையினர் உடனே மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். எல்லோரும் நாலாபுறமும் சிதறி ஓடினாலும் அவர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. பேருந்தைச் சுற்றி நின்ற நாங்கள் எங்கள் கைகளை இறுகபிடித்துகொண்டுஎன்ன நடந்தாலும் கலையக்கூடாது என்று நின்றோம். ஆனால் ஓடி வருபவர்கள் எங்கள் மீதும் விழ ஆரம்பிக்க அச்சம் வந்துவிட்டது. நாங்கள் தப்பிக்க வேண்டுமானால் அருகிலிருந்த சாக்கடையில் குதித்துதான் தப்ப வேண்டும் என்ற நிலை. போலிசாரும் வேகமாக தாக்கவேறுவழியின்றி குதித்தோடி தப்பினோம். சிலர் மேல் ரப்பர்குண்டுகள் உரசிச் சென்றன. அன்று மாலை அந்தப்பகுதியே போர்க்களம் போல இருந்தது. அரசு மருத்துவமனையை ஒட்டியிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. ஒரு சில தொலைபேசி கடைகளை வலிய திறக்கச் செய்துவீட்டிற்கு தகவல் சொன்னோம். அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் விவாதித்தோம். மறுநாள் நான்கு ரோடு சந்திப்பில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கூடினோம். ஏறத்தாழ நூறு பேருக்கு மேல், மாணவிகளும் இதில் அடக்கம். அப்பொது அரசியல்வாதிகள் பலரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று வந்தார்கள். இதை மாணவர்களே பார்த்து கொள்கிறோம், அரசியல்வாதிகள் யாரும் தலையிடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்ல அவர்கள் திரும்பி போய்விட்டார்கள். அப்போதுஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் மீதும் கோபம் வந்தது. இவர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆத்திரம். வருவாய்துறை அதிகாரி ஒருவர் தொழிலதிபர் என்று சொல்லிக்கொண்டு மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மாணவர்கள் கேட்டது நேற்று நடந்த சம்பவம் போன்று எங்கள் மீதும் நடக்காது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்கவும் அவர் நகர்ந்து விட்டார். மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டன. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு பெரிய கல் ஒன்று பேருந்து ஒன்றின் கண்ணாடியை பதம் பார்த்தது. எங்களுக்கும் பதட்டம் கூடிப்போனது. மாணவிகள் வேறு எங்களோடு இருந்தது அதை இன்னும் அதிகப்படுத்தியது. காவல்துறை உயரதிகாரி, தயவு செய்து கலைந்து விடுங்கள், சமூக விரோதிகள் மாணவர்கள் போர்வையில் ஏதேனும் செய்து விடக்கூடும் பின்பு நாங்கள் கடுமையான நடவடிக்கைகள்எடுக்க வேண்டியிருக்கும், தேவையில்லாமல் பிரச்சனையை சிக்கலாக்காதீர்கள் என்று மென்மையாக சொன்னார். எங்களுக்கும் வேறு வழி இல்லை. கலைவதுதான் சரியானதாக இருக்கும் என்றுணர்ந்து கலைந்தோம்.

கல்லூரி காலத்தில் எங்கள் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்ட சம்பவம் அது. கைது செய்யப்பட்ட பலரும் ஜாமினில் வெளிவந்த போது எங்களுக்கு நீதித்துறையே இவ்வளவுதானா, குற்றவாளிகளைச் தண்டிக்கமுடியாத நீதித்துறையின் மீதே வெறுப்பு வந்தது.ஆட்சி மாற்றத்திற்கு பின் நீதி கிடைக்கலாம் என்றிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இழுத்து கொண்டிருப்பது இன்னும் வேதனைக்குரிய ஒன்றே. தங்கள் மகள்களை இழந்த அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு பெறுவதை விட வேறெதையும் செய்ய முடியாத கையறுநிலைதான் எல்லோருக்கும்

*
இந்த சம்பவத்தை என் நட்சத்திர வாரத்திலே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாகவும், அவசரகதியில் எழுதக்கூடாது என்பதாலுமே தள்ளிப் போட்டிருந்தேன். மேலே இருப்பது முகமூடியின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம்( சில திருத்தங்களுடன்) .

அரசியல் மரணங்களுக்கும் அரசியலக்கான மரணங்களும் நம் ஜனநாயகத்தில் இரண்டற கலந்துவிட்டன. கொள்கையை வைத்து அரசியல் நடப்பது எல்லாம் தேர்தல் அரசியலில் காலாவதியாகிவிடுகின்றன. தேர்தல்களில் வெற்றி மட்டுமே பிரதானம் என்னும் முடிவுக்கு ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளிம் வந்து விட்டன. அதனால் ஒரு சில கட்சிகளுக்கு வன்முறைச் சாயம் பூசுவதும், சில கட்சிகளுக்கு புனித பூச்சுகள் பூசுவதும் அவரவர் மனதிருப்திக்காக செய்யப்படும் விசயங்களே.

மாணவர் சக்தி உலகில் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கிறது. பிரச்சனைகளின் வீரியத்தை பொறுத்தும் ஒட்டு மொத்தமாக எழக்கூடிய புரிந்துணர்வுகளும் அவ்வகையான போராட்டங்களை வெற்றி கொள்ளச் செய்கின்றன.தமிழகத்தில் மிக முக்கியமான அரசியல் மாற்றத்திற்கு மாணவர் சமுதாயம் காரணமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் எனது இன்றைய புரிந்துணர்வுகள். இது பற்றிய எந்த தெளிவும் இல்லாத மாணவ பருவத்தில் நடந்த நிகழ்வுதான் அந்த துயரச்சம்பவம். இந்த மாணவிகளின் மரணம் மாணவ சமுதாயத்திடைய பெரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் எதிர்ப்புகுரல்கள் அரசு இயந்திரங்களால் நீர்க்கச் செய்யப்பட்டன. மேடைகளில் எதிர்த்து வீராவேசமாகபேசும் அரசியல்வாதிகள் பலர் தொழில்ரீதியாக அனுசரணையான நிலையை மேற்கொண்டிருப்பார்கள். இது எதார்த்தம். அரசியல்வாதிகளை நம்பி நாம் அணி திரண்டால் அவர்கள் மொத்தமாக அழைத்து கொண்டு எதிரியிடமே அடிமைப்படுத்தி விடுவார்கள்.

தலைவர்களுக்கு தொண்டர்களாக இருப்பது ஒரு ரகம். சொரணையற்ற கொத்தடிமைகளாக இருப்பது மற்றொரு ரகம். தலைமைகளை குளிர்விப்பது ஒன்றே அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் என்று இந்த அறிவீலித் தொண்டரவுடிகள் இருக்கும் வரை இது போன்ற துயரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எண்ணிக்கைகளும் நடைபெறும் முறைகளும் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கும். ( குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னாளில் கல்வி மந்திரியாகக்கூட வரலாம்- அரசியலின் மிகக்கோரமான அவலம் அது)

இந்த அரசியல் அக்கிரமங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்தூணான நீதித்துறைக்கு சவாலாகவே அமைகின்ரன. அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கதான் நீதிமன்றங்கள் இருக்கிறதே தவிர காசு இருப்பவனுக்குதான் நீதி என்றால் அது கண்டிக்கப்பட வேண்டும். நீதித்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட துறையாக இருக்கக்கூடாது. தங்கள் அமைப்பு உயர்வானது என்றால் அதன் நேர்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய நீதிமன்றங்கள் சர்க்கஸ் கூடாரம் போன்றுதான் இருக்கிறது. பல எடுத்துகாட்டுகள் நம் கண்முன்னே கிடக்கின்றன.

ஒவ்வொரு வழக்கையும் வேறு மாநிலத்தில் நடத்த வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள்? நீதித்துறை சுதந்திரமாக இயங்க உறுதி செய்ய வேண்டும். தவறிழைக்கும் நீதிபதிகளுக்கும் மிகக்கடுமையயன தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். நீதிபரிபாலனைக்கு அரசுகளால் இன்னல்கள் வரும் போது அவை மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு மாநிலங்கள் வழக்கு நடத்துவது சீமான்களுக்கு வேண்டுமானலால் இலகுவாக இருக்கலாம். சாமான்யனுக்கு? எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இழந்தவனை மேலும் மேலும் அலைக்கழிப்பது மாதிரியான துயரம் வேறெதுவுமிருக்காது. வேறு மாநிலங்கள் என்றாலும் சாட்சியை மிரட்டுவது போன்ற எல்லா அக்கிரமங்களையும் செய்ய அரசியல்வாதிகளினால் முடியும். ஒன்றுமில்லாத சாமன்யனுக்கு எல்லாமே ஒன்றுதான். ஜெயலலிதா வழக்காகட்டும், ஜெயந்திரர் வழக்காகட்டும் அவர்களிம் கோரிக்கைகள் வேறு மாநிலத்து மாற்றவது மட்டுமா கோரிக்கை. மாற்றுமிடம் தங்களுக்கு சாதகமான இடமாக இருக்க வேண்டும் என்ற அரிப்பு வேறு.


இது போன்ற வழக்குகள் எல்லாம் விரைவு நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால எல்லைக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும், உடனடியாக, கடுமையாக. அதற்கேற்ப சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதற்குண்டான செயல்முறைகளைத்தான் முன்வைக்க வேண்டும். வழக்கமான அரசியல்தனமான முயற்சிகள் சாமான்யனுக்கு எந்த வகையிலும் பயன் தராது. நீதி விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும், விரைவுபடுத்த வேண்டிய , நிர்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இது குறித்தான எந்த ஒரு முயற்ச்சிக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். *
Related Posts with Thumbnails