அதிகார உரையாடல்களை உடைப்போம்

அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால். உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான மொழியை, உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழி என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைக்கலாம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தியிருக்கிறது, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னுறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கியதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை மட்டும் வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.

ஆகையால் இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.

20 மறுமொழிகள்:

SnackDragon said...

அழகாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துகளோடு பெரும்பாலும் ஒத்துப்போக முடிகிறது. நன்றி.

Sivabalan said...

நல்ல பதிவு!!

மிகுந்த பாராட்டுக்கள்!!

Muthu said...

முத்துகுமரன்,

அருமையாக எழுதி உள்ளீர்கள். மனதை திறந்து வைத்துக்கொண்டு படிக்கவேண்டும்.

இருமுறை படித்து மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய படைப்பு.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.


Nehru opposed reservation.
Ambedkar talked about limits to
reservation.Not all social
scientists are for reservations.
So where will you place them.

முத்துகுமரன் said...

ரவி,

இடதுசாரி சமூக அறிஞரான உங்களுக்கு இந்த வரிகளின் அர்த்தம் விளங்காமல் போனதுதான் ஆச்சர்யமாக
இருக்கிறது.
என் பதிவுக்குள்ளே அதற்கான பதிலும் இருக்கிறது.
//அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக
நுணுக்கமாக கையாள்கிறது.//.

இன்று இட ஒதுக்கீடு சம்பந்தமாக அதிகாரத்தின் உரையாடல்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றன பெரும்பான்மை மக்களின் குரல் பிரதிநிதித்துவபடுத்தப்படவில்லை என்றுதான்
சொல்லியிருக்கிறேன். அம்பேத்காரை நுட்பமாக இங்கு துணைக்கழைக்கும் நீங்கள் அவரது சமூகம் சார்ந்த அவரது அனைத்து கருத்துக்க்களையும் ஏற்கிறீர்களா?

முத்துகுமரன் said...

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கார்த்திக் ரமாஸ், சிவபாலன், முத்து தமிழினி...

Pot"tea" kadai said...

முத்துக்குமரன்,

உரத்த சிந்தனையோடு எழுதியிருக்கிறீர்.
நன்று!

//இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.//

சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க அதிகார வர்க்கமே தரகு வர்க்கமாக மாறியிருப்பது தான் சுதந்திர, (எதிர்கால) வல்லரசு?! இந்தியாவின் பலம்! வெட்கக்கேடு.

சந்திப்பு said...

முத்துக்குமரன் தத்துவார்த்த அணுகுமுறையுடன் எழுதியுள்ளீர்கள். நம் சமூகத்தில் மேல் கட்டுமானம், அடிக்கட்டுமானம் இரண்டு உள்ளது. பொதுவாக மேல் கட்டுமானம்தான் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைப்பதாக உள்ளது. இந்த மேல்கட்டுமானத்தை உருவாக்குபவர்கள் ஆளும் வர்க்கத்தினர். இந்த சமூகத்தில் நிலவும் கலை, கலாச்சார வடிவங்கள், பிம்பம்பங்கள், வெளிப்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்க கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாவே அமைந்துள்ளது. எனவே கோட்டைச் சுற்றியுள்ள பாதுகாவலானக இந்த கட்டுமானம் செயல்படுகிறது. இடஒதுக்கீட்டை மையமாக வைத்தும், தமிழ் வலைப்பதிவுகளில் நிகழ்த்தப்பட்ட ஆதிக்கவாதிகளின் பதிவினை முன்வைத்தும் உங்களது கருத்து பதியப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே சமயம் குறிப்பிட்ட சமூகத்தை தரகு சமூகம் என்று அழைப்பது பொருந்துமா என்று புரியவில்லை! இந்திய சமூகத்தை வர்க்க அடிப்படையாக பார்ப்பவர்களுக்கு இது குழப்பதை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன். நன்றி முத்துக்குமரன்

முத்துகுமரன் said...

சந்திப்பு, நான் தரகு சமூகம் என்று குறிப்பிட்டதும் ஒரு வர்க்கத்தினரைதான். அது குறிப்பிட்ட எந்த ஒரு இனத்தையும் குறிப்பதல்ல. தன்களின் நலன்களுக்காக பெரும்பான்மைமக்களின் நலன்களை சுரண்டுபவர்களை, சுரண்டலுக்கு துணை போகின்றவர்களைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன். நிச்சயம் குழப்பம் வராது என்றுதான் கருதுகிறேன்.

குழலி / Kuzhali said...

//தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.
//
எத்தனை சத்தியமான வார்த்தைகள்.....

வரலாறு நேர்மையாக எழுதப்படவேண்டும் இன்றைய செய்திகள் நாளைய வரலாறு ஆனால் இன்றைய செய்திகளை செய்திகளாக பதிவு செய்யாமல் கேவலமான உத்திகளை பயன்படுத்தி திரித்து தான் பதிவு செய்கின்றனர், மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக நிகழ்ந்த வாதங்களில் சிலர் எழுதியதை படித்தபோது இவர்கள் எந்த உலகத்தில் உள்ளனர், நான் பார்க்கமுடிந்த விடயங்கள் எப்படி இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது, என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தெரியாமல் நிகழ்காலத்தில் உள்ளவர்களே இருக்கும்போது வருங்கால சந்ததிக்கு எப்படி பட்ட வரலாற்றை நாம் தெரிவிக்க போகின்றோம்.....

மிக அருமையான கட்டுரை....

நன்றி

முத்துகுமரன் said...

//மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக நிகழ்ந்த வாதங்களில் சிலர் எழுதியதை படித்தபோது இவர்கள் எந்த உலகத்தில் உள்ளனர், நான் பார்க்கமுடிந்த விடயங்கள் எப்படி இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது, என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தெரியாமல் நிகழ்காலத்தில் உள்ளவர்களே இருக்கும்போது//

குழலி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

''அவர்கள்'' இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்த அனைத்து விடயங்களையும் அவர்களும் பார்க்கிறார்கள். அவர்கள் கண்ணிற்கு நம்மைவிட அது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது. ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாதது போன்று மிகத் தத்ரூபமாக நடிக்கிறார்கள். அம்புட்டுத்தேன்

முத்துகுமரன் said...

கருத்திற்கு நன்றி வழவழா கொழகொழா(சொந்தப் பேர்ல வரக்கூடாதா அய்யா??)

Amar said...

//இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர்.//

முத்துக்குமரன்,

நமக்கு வேன்டியது கிடைக்கவில்லை என்பதால் ஒரு சிலர் பேரனாய்ட் மனநிலைக்கு செல்வது உன்டு.

நீதிமன்றங்கள் சட்டத்தை தாங்கிபிடிப்பவையே.நீங்கள் சட்டபுத்தகத்தை மாற்றிவிடுங்கள், நீதிமன்றங்களும் அந்த சட்டம் சொல்வதை தான் ஏற்றுகொள்ளவேன்டும்.பாராளமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் அதிக உரிமைகள்.சில மத விஷ்யங்களில் நீதிமன்றங்களை பாராளமன்றம் எதிர்த்து தங்களை நிலையை வெற்றி அடைய செய்யவில்லை? அதே போல தான்.

தவறான கொள்கைகளை மறைக்க பழிபோட ஒரு இடம் தேவைபடுகிறது.

எல்லா "தாழ்த்தபட்ட" மக்களுக்காகவும் எழுதுபவர்களை நான் கேட்கும் கெள்வி.உங்களையும் கேட்டு விடுகிறேன்.தாழ்த்தபட்ட மக்கள் தரமான ஆரம்ப கல்வி பெற வேன்டும் என்பது மட்டும் எந்த எழுத்தாளனுக்கும் தோன்றாமல் போனது ஏன்? அதை பற்றி மட்டும் ஏன் யாருமே பேசுவது இல்லை? அந்த ஒரே தவறை திருத்தி விட்டால் இங்கு எத்தனை பிரச்சனைகள் கானாமல் போகும் என்பது உங்களின் மனசாட்சிக்கு தெரியும்.

தாழ்த்தபட்டவர்களின் முன்னேற்றம் தரமான ஆரம்ப கல்வியில்லாமல் வெறும் இட-ஒதுக்கீடுகள் மூலமாக மட்டுமே நடந்து விடுமா?

உங்களுக்கு சொல்லி கொடுக்கும் சிந்தனைவாதிகளும் அதை பற்றி பேசபோவது இல்லை.

I'd like to learn more now, but time is of premium.

முத்துகுமரன் said...

//தவறான கொள்கைகளை மறைக்க பழிபோட ஒரு இடம் தேவைபடுகிறது.//

அப்டீங்களா!! என்ன சாமி பண்றது... பழி ஓரிடம் பாவம் ஓரிடம்தானே.

இன்றைக்கு கூட நீதிமன்ற பாசிசத்திற்கு உதாரணம் காட்ட முடியும். காவரி நடுவர் மன்றத்தின் தற்போதய தீர்ப்பு


//தாழ்த்தபட்டவர்களின் முன்னேற்றம் தரமான ஆரம்ப கல்வியில்லாமல் வெறும் இட-ஒதுக்கீடுகள் மூலமாக
மட்டுமே நடந்து விடுமா?

உங்களுக்கு சொல்லி கொடுக்கும் சிந்தனைவாதிகளும் அதை பற்றி பேசபோவது இல்லை.//

யுரேகா!! யுரேகா!!



ஆனால் ஒன்று... இப்போதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரமான ஆரம்ப கல்வி வேண்டும் என்று குரல் கொடுக்கிறீர்களே.. நிச்சயம் அடுத்த தலைமுறையில் அவர்களுக்கு ''தரமான''கல்லூரி மேற்படிப்புகளும் கிடைக்க குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சமுத்ரா

முத்துகுமரன் said...

*கணினி கோளறினால் அப்படிப்போடு அக்காவின் இந்த பின்னூட்டத்தை பிரசுரிக்க முடியவில்லை. எனவே அதை அப்படியே வெளியிடுகிறேன்.
*

தம்பி,

//இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது//

இது ஒரே நாளிலா நடக்கிறது., எத்தனை வேஷம் போட்டு முழு நேர வேலையாக கொள்ளப்பட்டு செய்யப்படுகிறது?. வாழ்வாதாரம் தேடவே மற்ற சமூகத்திற்கு நேரம் போதவில்லை., தேடியவை கிட்டிய சமூகமும்., அதிகரவர்க்கத்தின் ஒரு அங்கமாகவே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.

//ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது//

இதை எடுத்துச் சொன்னால் அது பாகுபாட்டை விதைப்பதாகும். அதிகார வர்க்கம் எதையும் காக்கலாம்., கக்கலாம்.

//ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது//

என்றைக்கு நம் மொழி பேசுவதை கேவலம் என நாம் நினைப்பது ஒழியுமோ., நம் கலைகளை, பண்பாட்டை கேவலப்படுத்தும் போது பொறுத்துப் போவதை விடுகிறோமோ., அதிகார வர்க்கத்தை இன்றும் முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு நமது முன்னேற்றம் பற்றிப் பேசுகிறோமோ அன்று அழியும் அத்தனை போலியும். ஒவ்வாத ஒன்றின் இருப்பை ஒத்துக்கொண்டு குறைகளை அறிந்தாயிற்று. இனி, ஒதுக்கி விட்டு முன்னேறுவதே உண்மையான சமூக மாற்றத்தின் முதல் படி.

//இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர்.//

மாற்றம் அரசு மற்றும் ஊடகத்தில் வர வேண்டும். விழிப்பிருந்தால் எல்லாம் வரும்.

//இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.//

இனியாவது இது நடைபெறாவிடில்., //அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று.// இப்படியே நாம் தலைமுறைகள் தோறும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்./////////////////

பரஞ்சோதி said...

முத்துகுமரன்,

கை கொடுங்க. பாராட்டுகள்.

சமுதாய கண்ணோட்டத்தில் நீங்க எழுதிய இக்கட்டுரை மிகவும் அருமை.

மிகவும் ஆழமாக சிந்தித்து எழுதியிருக்கீங்க. இது போன்ற பல கட்டுரைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

இதை விட்டு விட்டு, பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பு சொன்ன மந்திரங்களை ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு, அதுக்கு விளக்கமும் சொல்லி, சமுதாயத்தை திருத்துவது என்பது பயனளிக்காது ஆமாம் :)

முத்துகுமரன் said...

கருத்திற்கு நன்றி பரஞ்சோதி...
//இதை விட்டு விட்டு, பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பு சொன்ன மந்திரங்களை ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு, அதுக்கு விளக்கமும் சொல்லி, சமுதாயத்தை திருத்துவது என்பது பயனளிக்காது ஆமாம் :)//

பதிவை சரியாக வாசித்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்:-))). மந்திரங்களும் அதிகார உரையாடலின் ஓர் அங்கம்தான். ஆகையால் அவைகளை உடைப்பதும் அத்தியாவசியமாகியிருக்கிறது.

முத்துகுமரன் said...

கீற்று மின்னிதழில் இக்கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.
http://www.keetru.com/literature/essays/muthukumaran_1.html
*கீற்று ஆசிரியருக்கு நன்றி*

Pot"tea" kadai said...

my best wishes!

cheers

Muthu said...

//''அவர்கள்'' இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். நீங்கள் பார்த்த அனைத்து விடயங்களையும் அவர்களும் பார்க்கிறார்கள். அவர்கள் கண்ணிற்கு நம்மைவிட அது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது. ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாதது போன்று மிகத் தத்ரூபமாக நடிக்கிறார்கள். அம்புட்டுத்தேன்//


ஆமாங்க...

Related Posts with Thumbnails