என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் - 1

தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தில் வந்திருக்கிறது. கடந்த நூறாண்டுகால வரலாற்றில் தமிழக மக்கள் பல்வேறு வித்தியாசமான அரசியல் தீர்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிகஅற்புதமான ஒரு தீர்ப்பாக இதைப் பார்க்கிறேன். தனிக்கட்சி ஆட்சி என்ற நிலையிலிருந்து கூட்டணி தயவிலான ஆட்சி என்று மாறியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளை கொஞ்சம் நிதானமாக ஆராயாலாம் எனும் பேராவல் எனக்குள் எழுந்திருப்பதாலே இந்தப்பதிவு..

அதனால் கொஞ்சம் பழையவைகளைப்பற்றி பேசிவிட்டு பிறகு இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைப் பற்றியும்பேசலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியதின் காரணமாக காங்கிரஸ் ஆரம்பத்தில் தமிழகத்தில் வலுவாக இருந்ததும், திரு.காமராஜர் போன்றதொரு மக்கள்தலைவர் ஆட்சி செய்ததன் பயனாக சுதந்திரத்திற்கு பிறகான முதல் 20ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. காங்கிரஸிற்கு வலுவான மாற்று இல்லை என்று எக்களித்து கொண்டிருந்த வேளையில் பேரறிஞர் அண்ணாத்துரை தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் தனக்கேற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் பயின்று இழந்ததை ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக இலகுவான கூட்டணிச் சவாரியை தேர்ந்தெடுதது. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிய மக்களின் விருப்பமும் தேர்வும் திமுக, எம்ஜிஆர் என மாறியது. மாநிலத்தில் காங்கிரஸின் ஆளுமையும் தகர்ந்து போனது. ஆனால் தங்களுக்கிருந்த குறிப்பிடத்தக்க அளவிலான பாரம்பரிய மக்கள் செல்வாக்கை மிகச்சரியாக பயன்படுத்தி கூட்டணிகள் அமைத்து சவாரி செய்தனர். மத்தியில் ஆட்சியில் இருந்தாலே போதும் என்ற மனோபாவமும், காமராஜருக்கு பின் சுயபுத்தி உள்ளவர் எவரும் தமிழக காங்கிரஸிற்கு வாய்க்காமலே போனதாலும் மத்தியில் அரசாண்டால் போதும் என்று தேசியப்பற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்திய தேசியத்தில் ஒன்றினைந்திருந்தாலும் தொடக்கத்திலிருந்தே தமிழகம் அதற்குரிய மரியாதையையோ, அங்கீகாரத்தையோ பெறவில்லை.மாற்றந்தாய் மனப்பான்மையுடனே நடத்தப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான எதிர்வினைகளை தமிழகம் பதிவு செய்திருந்த போதிலும் முற்றிலுமாக எதிர்த்துவிட முடியவில்லை. தேர்தல் அரசியலில் அது முடியாது என்பதும் எதார்த்தமான உண்மை. யாராக இருப்பினும் ஜனநாயக ரீதியில் தேர்தல் அரசியலில் பங்கு பெறும் போது விரும்பியோ விரும்பாமலே சிலவகையான சமரசங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. தேர்தல் அரசியல் என்பது இருமுனைக் கத்தி. குறிப்பாக கொள்கை சமரசங்களுக்கு வெற்றியை பரிசாக தரும் விநோத கத்தி.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்திருந்த பின்பு மக்களுக்கான அரசியல், அவர்கள் பிரச்சனைகள் அதற்குண்டான தீர்வுகள் என்னும் தளத்தை விட்டு தனிமனித ஆதரவு/எதிர்ப்பு அரசியலாக உருமாறிவிட்டது. இதன் பலன் தனிநபர்களுக்கு. இழப்பு மக்களுக்கு! தொடர்ந்து பலகாலமாக ஏமாற்றமடைந்த மக்கள், தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை உணரத் துவங்கிய போதுதான் மாற்று இயக்கங்களுக்கான விதை தூவப்பட்டது. தாங்கள் வஞ்சிக்கபடுகிறோம் என்பதை பலர் மிகத்தாமதமாகவே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்தது. அதைப் பெற அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதும் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய அரசு அதிகாரச் சமூக அமைப்பில் ஒரு அரசியல் சக்தியாக, அதிகார சக்தியாக உருவெடுக்காமல் தங்களுக்குத் தேவையான எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை புரிந்து கொண்டு அரசியல் தடத்தில் கால்பதிக்க முனைகிறார்கள். பல்வேறு போராட்டங்கள், அடக்குமுறைகளுக்காட்படுதல், இழப்புகள், தோல்விகளுக்கு பின்னரே அவர்களால் கால்பதிக்கவே முடிகிறது. அரசியல் சக்தியாக உருவெடுத்த பின்பும் ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடிவதில்லை. அதற்கும் பல இன்னல்கள் வருகிறது தேர்தல் அரசியலினால். ஆனால் விந்தை அதிகாரம் பெற தேர்தல் அரசியலைத் தவிர வேறு வழியும் இல்லை.
**

தொடரும்

14 மறுமொழிகள்:

Muthu said...

நல்ல துவக்கம்...ஆவலை தூண்டுகிறது

ஜோ/Joe said...

முத்துக்குமரன்,
நன்றாக தொடங்கியிருக்கிறீர்கள்..தொடருங்கள்!

Gurusamy Thangavel said...

ஆரம்பமே ஜோராகயிருக்கிறது முத்துக்குமரன்

G.Ragavan said...

தொடங்கீட்டீங்களா முத்துக்குமரன்...நடக்கட்டும் நடக்கட்டும்.

முத்துகுமரன் said...

நன்றி முத்து தமிழினி, ஜோ, தங்கவேல், ராகவன்....

எல்லாம் ரெம்பவே எதிர்பாக்குறீங்க போல இருக்கே:-((. என்னால முடிஞ்ச வரைக்கும் நல்ல எழுத முயற்ச்சிக்கிறேன். நல்லா இல்லாட்டி வந்து குத்து விட்டுட்டு போங்க...

பரஞ்சோதி said...

ஆகா, முத்துகுமரன்,

அருமையாக எழுதியிருக்கீங்க, பல விசயங்களை அலசி சொல்லியிருக்கீங்க, படிக்க ஆவல் கூடுது, அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க.

ஜெயக்குமார் said...

//திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்திருந்த பின்பு மக்களுக்கான அரசியல், அவர்கள் பிரச்சனைகள் அதற்குண்டான தீர்வுகள் என்னும் தளத்தை விட்டு தனிமனித ஆதரவு/எதிர்ப்பு அரசியலாக உருமாறிவிட்டது.//

இது திராவிடக்கட்சிகள், குறிப்பாக கருனாநிதி ஆட்சிக்கு வந்த உடனேயே ஆரம்பமாயிற்று.

முத்துகுமரன் said...

//இது திராவிடக்கட்சிகள், குறிப்பாக கருனாநிதி ஆட்சிக்கு வந்த உடனேயே ஆரம்பமாயிற்று.//

ஜெயகுமார் நானும் அதைத்தான் சொல்லி இருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

முத்துகுமரன் said...

//அருமையாக எழுதியிருக்கீங்க, //
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான உடம்ப புண்ணாக்க வைக்குறது :-)

பிரதீப் said...

புண்ணாக்கினாலும் உசுப்பேத்திருவம்ல...

நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீருய்யா... நல்ல தொடக்கம், காத்திருக்கம். நல்லா எழுதலைன்னா வந்து குத்துவம் :)

நானும் என் பதிவுல (அட இப்பத்தானே எழுத ஆரம்பிச்சிருக்கம்) இன்றைய நிலையைக் கொஞ்சம் அலசி இருக்கேன். வந்து பாருங்க. http://pradeepkt.blogspot.com

குமரன் (Kumaran) said...

முத்துக்குமரன். நான் பிறந்ததற்கு முன்பான தமிழக அரசியல் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அதனால் உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் ஒரு கேள்வி எழுந்தது. எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்றபின் தனிமனித விருப்பு/வெறுப்பு அரசியலாகத் தமிழக அரசியல் மாறியது என்று எழுதியிருக்கிறீர்களே. அதற்கு முன்னரும் நிலைமை அப்படித் தானே இருந்தது? காமராசரினால் தானே தமிழகத்தில் காங்கிரஸ் இருபது ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது? பெரியார், பேரறிஞர், கலைஞர் போன்றவர்களின் பேச்சுக்களும் தனிமனித ஆதரவும் தானே தழைத்தோங்கி இருந்தது? ஒரு திரைப்பட நடிகர் அமோக ஆதரவு பெற்றது வேண்டுமானால் எம்.ஜி.ஆருக்குப் பின்னால் நடந்திருக்கலாம். ஆனால் தனிமனித ஆதரவு/வெறுப்பின் மீதான அரசியல் தமிழகத்தில் என்றும் இருந்தது என்று தான் நான் எண்ணுகிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டவும்.

supersubra said...

மிகவும் சரி குமரன் சார்
ஒரு தேர்தலில் ராஜாஜி அவர்கள் ப்ராமணர்களை பார்த்து பூணுலை பிடித்துக்கொண்டு திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்றார். ஆனால் அந்த தேர்தலின் போது அவருக்கும் காம்ராசருக்கும் உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பே அப்ப்டி பேச வைத்தது.

முத்துகுமரன் said...

//அதற்கு முன்னரும் நிலைமை அப்படித் தானே இருந்தது? //
//ஆனால் தனிமனித ஆதரவு/வெறுப்பின் மீதான அரசியல் தமிழகத்தில் என்றும் இருந்தது என்று தான் நான் எண்ணுகிறேன்//

நன்றி குமரன். என் தவறைச் சுட்டிகாட்டியமைக்காக.நான் ஒரே திராவிட மயக்கத்தில இருக்கிறனா அதான் இந்த விசயத்தை கோட்டை விட்டுட்டேன்:-)

//ஆனால் அந்த தேர்தலின் போது அவருக்கும் காம்ராசருக்கும் உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பே அப்ப்டி பேச வைத்தது.//
சுப்ரா இந்த கழிசடை அரசியலுக்கு அச்சாரம் போட்டவர் ராஜாஜி என்பது வருத்ததிற்குரிய விசயமே...
அப்போதுதான் பெரியார் பச்சைத் தமிழன் காமராஜர் என்று ஆதரித்தார் என்றும் நினைக்கிறேன்

பிரதீப் said...

என்னய்யா, தொடரும்னு போட்டவரு, அடுத்த தேர்தலுக்குத்தான் தொடரப் போறீகளா?

Related Posts with Thumbnails