மறுவாழ்வு என்ற போர்வையில் தமிழர்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள்: ஐநா மாநாட்டில் திருமாவளவன் பேச்சு

நன்றி - நக்கீரன்



ஜெனீவாவில் நடந்த சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த ஐநா மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன்,

தமிழ்நாட்டிலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் நான். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கோடு இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை கூட்டியமைக்காக இந்தியாவில் இருக்கும் தலித் மக்களின் சார்பிலும், சிறுபான்மையினர் மக்களின் சார்பிலும் உங்களையும் திருமதி கே. மெக்துகால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.

இந்தியாவில் தலித்துகள், மதச்சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் தடைகளைப் பற்றிய விவரங்களை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். கல்வி, பொருளாதார மற்றும் அனைத்துவிதமான வளங்களிலிருந்தும் இவர்கள் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், பாலின ரீதியாகவும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் இவர்களின் அரசியல் பங்கேற்பு தடைபடுகிறது. தொழில் மற்றும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளை களைவதற்கு ஐநா மன்றம் வகுத்துள்ள கோட்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஓரளவு இந்த தடைகளை நீக்கியிருக்கிறது. இந்த மாமன்றம் தீர்வுகாணவேண்டிய சில பிரச்சினைகளை நான் இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

சாதியம் என்பது ஆசியாவிலும், ஆப்பிரிகாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிற ஒரு விஷயமாகும். அது மதம், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம் என வாழ்வின் எல்லா தளங்களிலும் ஊருடுவி நாட்டின் வளர்ச்சியையே பாழாக்கி வருகிறது. தலித்துகளும், சிறுபான்மையினரும், பெண்களும் சமூக பொருளாதார நிறுவனங்களில் தலைமை பாத்திரத்தை வகிக்கமுடியாதபடி இந்த சாதியம் ஒரு மனோபாவத்தை உருவாக்கிவிடுகிறது. இது ஆராயப்படவேண்டும். இதை களைவதற்கான வழிவகைகள் காணப்படவேண்டும்.

ஆசிய நாடுகள் சிலவற்றில் தலித்துகளுக்கு அரசியல் ரீதியான இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் தழுவிய தலித்துகளுக்கு இந்த உரிமை அடிபட்டுவிடுகின்றது. இது ஒரு மோசமான மனித உரிமை மீறலாகும். இந்த பாகுபாட்டை இம்மாமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தலித் பெண்கள் அரசியல் தளத்தில் பங்கேற்கும்போது அவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தும்போதும் அவர்கள் மீது வன்முறை ஏவப்படாமலும் அவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகாமலும் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். பெண்களுக்கு சொத்துரிமையை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் அரசியல் பங்கேற்பை உத்தரவாதப்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.



ஒரு நாட்டில் சிறுபாண்மையின மக்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அந்த நாட்டை உலகம் மதிப்பீடு செய்யும். இலங்கையில் உள்ள தமிழ்ச்சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஐநா மாமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக ராணுவ ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறியது மட்டுமின்றி எண்ணற்ற தமிழர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிவிட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெறும் வாய்ப்பை நான் பெற்றேன். அங்கு ராணுவத்தால் நிர்வகிகக்கப்படும் இடைத்தங்கல் முகாம்களில் தமிழ்ச்சிறுபான்மை மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை நான் பார்த்தேன். அந்த முகாம்களில் இன்னும் இரண்டு லட்சம்பேர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் அவர்கள் ராணுவத்தால் சித்தரவதை செய்யப்படுகிறார்கள். அங்கே வதை முகாம்களில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படும் தமிழர்கள் குறித்து சர்வதேச சமூகம் இன்னும் போதுமான அளவில் விழிப்புணர்வை பெறவில்லை. மனித குலத்திற்கு எதிரான இந்த வன்முறையை அது கண்டிக்கவும் இல்லை. அங்கு வாழும் சிறுபான்மை தமிழர்களும், இஸ்லாமியர்களும் இன ரீதியான சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுக்கு அரசியல் ரீதியான சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும்.

தலைவர் அவர்களே, தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வார்த்தைகளை கூறி என் உரையை முடிக்க விரும்புகிறேன். "இந்த ஜனநாயகத்தில் நாம் அரசியல் சமத்துவத்தை அடைந்திருக்கிறோம். ஆனால் தீண்டாமை என்னும் கொடுமை தொடர்வதால் சமூக பொருளாதார தளங்களில் ஏற்றத்தாழ்வும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த முரண்பாட்டை விரைவில் நாம் தீர்த்தாகவேண்டும் என்றார

0 மறுமொழிகள்:

Related Posts with Thumbnails