இசை, இளையராஜா, பெரியார்.

சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.

முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.

பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.

தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.

இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.


இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

திரு.கா.காளிமுத்து மரணம்.



தமிழக முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், சிறந்த தமிழ்ப்பேச்சாளருமான திரு.கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணம்டைந்தார். திராவிட இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.



இதுகுறித்த தட்ஸ் தமிழ்.காம் செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/11/08/kalimuthu.html

தமிழகம்''50

இன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிறது. தமிழகம் மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு. நிலவியல் அடிப்படையில் சில நகரங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்த போதிலும்பெரும்பாலான பகுதிகளை தன்னிடமே வைத்திருக்கிறது. அதற்காக உழைத்த அத்துணை பெரியோர்களையும் நன்றியோடு இந்த தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

மொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம். வேறுபட்ட அதே சமயம் தனித்துவமிக்க தேசங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு துணை கண்டம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் கூட்டமைப்பின் அடிப்படையாக கொண்டிருக்கிறோம்.

இந்திய தேசியம் ஒற்றைத்தன்மை உடையது என்று நாம் சொல்லுவோமாயின் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும்.
பல தேசியங்களை கொண்ட பன்மைத் தன்மை வாய்ந்தது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் இந்த ஒற்றைத் தன்மையை திணித்துவிட முயற்சிகள் நடந்து கொண்டே வருகின்றது. அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இன உணர்வு என்பது சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நமது நிலையை நோக்கும் போது அது நெருடலாகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் மாநிலம் சார்ந்த தேசிய உணர்வுகளை கொண்டிருக்கிறது. அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம் அவர்களிடம் தம் மொழி சார்ந்த, நிலம் சார்ந்த தேசிய உணர்வு மிகுந்திருக்கிறது.

ஆனால் அதே உணர்வை தமிழகத்தில் கொண்டிருந்தால்???

உங்கள் பெயர்??

பிரிவினைவாதி!

ஏனிந்த நிலமை. தனக்கென தனிக்கொடியை வைத்திருக்கும் கர்நாடகத்தினரை யாரும் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. இந்திய தேசியத்தைவிட கர்நாடக தேசியத்தை அவன் பெரிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போதும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அவன் தன்னை கர்நாடகத்தானாகவே அடையாளப்படுத்துகிறான். கர்நாடகத்தானகவே இருக்கிறான். எந்த மத, சாதியினராக இருந்தாலும் அவனிடம் கர்நாடக தேசிய உனர்வே மேலோங்கி இருக்கிறது. தன்னை முதலில் கர்நாடகனாகவும் பிறகே இந்தியனாக அவன் உணர்கிறான். தன்னை இந்தியனாக உணர்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பானா?

சொன்ன போதும் அவனை பிரிவினை வாதி என்று எவனும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழனாக அல்லாமல் இந்தியனாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மீதுமட்டும் ஏனிந்த திணிப்பு. மற்ற மாநிலங்களைப் போலத்தான இந்தியாவில் இணைந்திருக்கிறது. தேசிய உணர்வை அளக்க ஏன் இந்த வேறுபட்ட அளவீடுகள். தமிழனின் தேசிய உணர்வு மட்டும் ஏன் சோதனைகளுக்குட்படுத்தப்ப்டுகிறது. ஏன் இந்த சமத்துவமற்ற நிலை. சிந்தித்துப்பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,
அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.

வாழ்க தமிழ்!! வாழ்க தமிழ்நாடு!!


Link: Siva murugan blog :நிகழ்வுகள்: தமிழ்நாட்டுக்கு வயது 50
Related Posts with Thumbnails