Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

இசை, இளையராஜா, பெரியார்.

சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.

முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.

பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.

தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.

இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.


இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ''குடிஅரசில்'' அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே..

''எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை...

நான் சுயநலவாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாக', இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

''--- கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல - ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்''
*
இதுதான் பெரியார்... வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
''ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்''- என்.ராமகிருஷ்ணன்
Related Posts with Thumbnails