சிதம்பர ரகசியம்

*கோயில் எப்படி ''Private Property'' ஆகும்.??

கோயிஞ்சாமித்தனமா கேள்வி எல்லாம் கேட்கப்புடாது.
ஆண்டவனே அவங்களோட ''Private Property''யாத்தான் இருந்திருக்கிறார்.


இது புரியாம தீடிர்னு இப்படி குதிச்சா என்ன பண்றது. ஏதோ ஆறுமுகம் புண்ணியத்தில சிவனும் இப்ப லைம்லைட்ல வந்துவிட்டார். ஆனா இந்த கூத்துகளை எல்லாம் அவரின் திருவிளையாடலில் ஒன்றாகவேப் பார்க்கிறேன். சிவனின் இருப்பை தமிழகத்தில் யாரும் மறுதலித்து பேச முடியாது. மரபு ரீதியாக, இறையியல் நம்பிக்கை ரீதியாக, வரலாறு ரீதியாக என்று எந்த வகையில் பார்த்தாலும் தொடர்புடையவன். வெல்ல முடியதாததால் அவனும் அவனது தத்துவமும் உட்செரிக்கப்பட்வை. ஆரியமய(மா)க்கப்பட்டவன்.

ஆனால் அவன் சிவன் ஒரு தமிழன். நாகன். திராவிடன். எப்படி என்னான்னு சந்தேகம் வந்தா தமிழ்க்கடவுள் முருகனுக்கு அப்பனவன். கூடுதல் அத்தாட்சிக்காகத்தான் இதைச் சொன்னேன்.முருகன் அவன் பிள்ளை இல்லைனு சொன்னீங்கனாலும் எனக்கு வசதிதான். மொத்த ஆரியம் & வகையறாக்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு கிடையாதுனு எளிதா முடிச்சுகிடலாம்.

ஓடியாங்க ஓடியாங்க.

என்னை மொத்துவதற்கு. இறைவன் எங்கும் இருப்பவன். மொழி இன நில எல்லைகளை கடந்தவன் என ஒரு ஆன்மீகச் சொற்பொழிவும் நிகழ்த்திவிட்டுப் போங்கள். எல்லோரும் காதுகுளிர கேட்டு பக்திப் பரவசபிரவாகம் எடுக்கலாம். சரின்னு திருந்தி கோயிலுக்கு போறேன்னு சொன்னா மட்டும் உன் மனசுல அவன் இருக்கான் அங்கேயே கும்பிட்டுக்கனு சொல்லுவீங்க. ஆயிரமாண்டுகளாய் பக்திரசத்தில் நனைந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு முறை கேட்பதால் குடி மூழ்கிப்போய்விடப்போவதில்லை.

''சே சே இந்த இந்துமத விரோதிகளே இப்படித்தான்..''

கேள்வி எதுவும் கேட்டுவிட்டால் அவன் இந்து மத விரோதியாகிவிடுவான். உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று வியாக்கானங்கள் வேறு. என் மீது திணிக்கப்பட்டிருப்பதை நான் தான் கேட்கமுடியும். கடவுள் உண்டு. நீ நம்பிக்கை வைத்திருப்பவனே உன் இறைவன். ஆனால் அவன் மீது உனக்கெந்த உரிமையும் இல்ல. அவன் வேதங்களுக்கு கட்டுப்பட்டவன், வேதங்களைச் சொல்லும் எங்களுக்கு கட்டுப்பட்டவன் என்று சொல்பவனுக்கு பேர் இங்கு புனிதன்கள். மனம் புண்பட வேண்டுமென்றால் இந்த அவலத்தை கண்டுதான் புண்பட வேண்டும்.

ஆண்டவனும் சரி அவன் மொழியும் சரி அவர்களிடத்தில் சிறைப்பட்டு கிடக்கிறது. இதற்கெல்லாம் வருந்தாது மறத்துப்போயிருக்கும் மனிதர்களுக்கு கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் மனம் ரணப்பட்டு போகிறதாம். போகட்டுமே! அடிமைகளுக்கு இதனால் என்ன குறைச்சல் வந்துவிடுகிறது.

மக்களை அவர்கள் நம்பிக்கைகள் கொண்டே அடிமைத்தனம் செய்திருக்கிறான். தன் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஆயுதமாக மக்களின் இறை நம்பிக்கைகளையே பிரயோகிக்கிறான் அவனுடைய சம்பிரதாயங்கள் என்னும் ச(க)தி பூசி. அதை உடைக்க வேண்டுமானால் அந்த ஆயுதத்தை முதலில் பிடுங்கி எறிய வேண்டும்.ஈரோட்டுக்கிழவன் செய்ததும் அதைத்தான்

ஆனால் நாமெல்லாம் அவர்களிடத்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. குறிப்பாக அரசு அதிகாரம். இந்த பாடத்தை நிச்சயம் அவர்களிடமிருந்து பயின்றே ஆக வேண்டும். நாட்டுக்கரசன் வேந்தன். வேந்தனுக்கரசன் இறைவன். இறைவன் இவர்களளின் சிறைப்பறவை.
அரசன், அவன்குடி மக்கள் எல்லாம் சிறைப்பறவைகள். சுருக்கமா சொன்னா அடிமைகள். ஆனால் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால் இதை எப்படிச் சாதித்தான். நம் நம்பிக்கைகள் பெயரலேயே. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் மூலம் எதையும் செய்யலாம். அது சட்டப்படியானதாகி விடுகிறது. நீதி ஒன்றுதான். அநியாயங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய். ஆனால் சட்டப்படி செய். தண்டனை கிடையாது.மறைந்திருக்கும் மாய நூலினால் நம்மை கட்டி வைத்திருப்பான்.


அரசன் தம்மை ஆண்டு கொண்டிருப்பதாக மக்கள் நினைத்திருக்க அரசனை அந்தணன் ஆண்டு கொண்டிருக்கும் அவலம் மறைக்கப்பட்டிருக்கும். அவனது தேவைகள் ஆண்டவன் பெயரால் அரசுச் சட்டங்களாகப்பட்டன. மக்களுக்கெதிராக இருப்பினும் போராட முடியாது. ஏனென்றால் நீங்கள் சட்டத்தை மீறுகிறவராகிவிடுகிறீர்கள். தண்டனைக்குரியவராகி விடுவீர்கள். அத்தனையும் முறைப்படி நிகழும். சட்டம் என்பதும் விதிகள் என்பதும் மக்களுக்கானதாக இருப்ப்பதற்குபதில் ஒரு குழுவின் விருப்புகளின் பால் அமைந்ததுவிட்டது.

இவர்களுக்குள் மறைந்திருக்கும் நியாய உணர்வு வ்வப்போது வெளிவரும். சமீபத்திய உதாரணம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பெருக்கெடுத்து வரும் பார்ப்பனியத்தின் கரிசனம்.பாய்ந்தோடிவரும் பாச உணர்ச்சி. பிற்படுத்தப்பட்டவர்களால் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை மறக்கவியலாகாது. ஆனால் இதினல் பார்ப்பனியத்தின் பங்கை மறைத்துவிட்டு பேசமுடியாது. பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட இனங்கள் என்பவைகளே வர்ணாசிரமத்தின் விளைபொருட்கள்தானே. அடுக்குமுறை சொல்லும் தத்துவ விச விதையை எடுத்தெறியாமல் களைகளை மட்டும் களைந்து என்ன பயன். விச விதைகள்தான் களைகளை நீக்குவதற்கு உதவுவதாக வேடங்கட்டிக் கொண்டு வருகிறது.

ஒரு பழமொழி உண்டு.

யோக்கியர் வர்றார். செம்பை எடுத்து உள்ளே வை என்று.

நேர்மையையும், நியாயத்தையும் தர்மத்தையும் பற்றி பேச இந்த சகுனிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களின் பொதுக்குரல் என்பதையே தன எண்ணத்தின் பிரதிவடிவங்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு .

சிதம்பரம் கோயிலில் நடைபெற்றது ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. இவ்வளவு நாள் வாய்மூடி இருந்த சமூகம் இன்று கேள்வி கேட்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.
**
அப்புறம் ''சட்டப்படி''

இந்த வார்த்தைகளின் பின்னிருக்கும் அரசியலைத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் முழுமூச்சாக இறங்கக்காரணமும் இந்திய மக்களின் மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்த சட்டப்படியான உரிமத்தைப் பெற வேண்டும் என்ன ஆவல் என்பதை மறுக்கமுடியாது. தங்களது அதிகாரத்தை ஒரு திரண்ட நிலப்பரப்பின் மீது செலுத்த வாய்ப்பு வரவிருப்பதை உணர்ந்தபோது அதற்காக அவர்கள் உழைத்தது எதார்த்தமானது. சுதந்திரத்தின் பெயரால் கிடைக்கவிருக்கும் அந்த அதிகாரத்தின் மூலம் தங்களது தேவைகளை, சட்டங்களாகிவிட்டால் எந்த நாளும் கவலை இல்லை. ஏனென்றால் அதை எதிர்ப்பவன் அரசியல் சட்டத்தை எதிர்ப்பவனாகிவிடுவான் அல்லவா. ஆனால் என்ன செய்ய அவர்களின் துர் அதிர்ஷ்டம் அம்பேத்கார் என்னும் வடிவில். அம்பேத்கார் இல்லாவிட்டால் இந்தியச் சட்டம் என்பது மனுதர்ம சட்டமாகாத்தான் ஆகியிருக்கும். இவர்களின் அயோக்கியத்தனங்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட ஜமுக்காளத்தால் போர்த்தப்பட்டன. இந்த உண்மைகளை உணர்ந்து எதிர்த்தவர்களுக்கு சுதந்திர போராட்டத்தின் எதிரிகள், அந்நிய அரசின் நாட்டின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதே அரசாங்கத்தின் எல்லா சுகங்களையும் பெரும்பகுதி இவர்கள் அனுபவித்ததும் மட்டும் மறைக்கப்பட்டது. அதே உத்திதான் இன்று இவர்கள் எல்லாம் தேசபக்த புனிதர்களாகவும் இவர்களின் அதிகார அரசியலை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று பட்டம் கட்டப்டுவதைப் போல.

நீதிமன்றங்கள்...

மன்னுச்சுக்குங்க! அது மனுநீதிமன்றங்களாத்தான் இருக்கு.

ஏதோ பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் வந்தால் சாதிப்பாசத்தில் நீதியை வழுவ விட்டுவிடுவார்களாம். இவர்கள்தான் எல்லாவற்றையும் காக்க வந்திருப்பவர்கள். சுப்பனும் குப்பனும் நீதிகேட்டு வந்தால் இறுகிய மனதோடும் கடுமையாக நீதியை நிலைநாட்டும் இந்த கோமகன்கள் ஜெயலலிதா, வேணுகோபால் போன்றவர்களுக்கு மனசாட்சிப்படி பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் இளகிய மனதோடு பிரசாதம் வழங்குவது எல்லாம் எந்த பாசவகையில் வருகிறது என்பதை நாமேதான் புரிஞ்சுக்கணும்.
இருக்கிறவனுக்கொரு நீதி இல்லாதவனுக்கொரு நீதின்னு பல்லிளிச்ச பின்னாடி என்ன மரியாதை வேண்டி கிடக்கு.


பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவிட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசியம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
Related Posts with Thumbnails