Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

அதிகார உரையாடல்களை உடைப்போம்

அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால். உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான மொழியை, உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழி என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைக்கலாம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தியிருக்கிறது, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னுறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கியதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை மட்டும் வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.

ஆகையால் இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.
Related Posts with Thumbnails