திரு டோண்டு அவர்களின் ஆண்-பெண் கற்புநிலை-3 என்ற பதிவை எதேச்சையாக பார்த்த போது ஒரு பின்னூட்டமிட்ட நண்பருக்கு இந்த விளக்கத்தை சொல்லியிருக்கிறர்.
''பால்ய விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''
ஆண்-பெண் கற்புநிலை என்ற பெயரில் அவர் அவர் எழுதிய மேலும் 2 பதிவுகளையும் வாசித்த போது அவர் பேசுவது கற்பு நிலையை பற்றி அல்ல. காமமும் அதுசார்ந்த இச்சைகளும் அதை பற்றியதான செய்திகளுமாக மட்டுமே இருந்தது. காமம் என்பது இயற்கையாகவே மனிதனுக்கு இருக்கும் ஒரு அடிப்படையான உணர்வு. இதற்கு ஆண் பெண் பேதமில்லை. ஆனால் அதை ஆண்கள் எளிதாக தீர்த்து கொள்கிறார்கள் என்றும் பெண்களுக்கு அது போன்றதொரு சுதந்திரமான நிலை இல்லை என்றும் கூறியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரை இழிவுபடுத்தும் கருத்து இது. இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் settle ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் பழம் தலைமுறையினாரான அவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
கல்வி நிறுவன வாசல்களளிலும், TOEFL, GRE மதிப்பெண்களை வைத்துக்கொண்டு தூதரக வாசல்களில் காத்து கிடக்கும் எண்ணற்றோரே - மாறி வரும் இளைய தலைமுறையின் நோக்கங்கள் எதன் மீது திரும்பி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவி செய்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான கலப்பு என்பது இயந்திரக் கலப்பல்ல. அது உயிர்ப்போடு இயங்கும் இரண்டு உள்ளங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு நிகழ்வு. அப்படி நிகழும் உறவுகளில்தான் முழுமை இருக்கிறது. இளம் வயதில் இருபாலருக்கும் தோன்றும் பாலியியல் உணர்வுகள் எதார்த்தமானது இயற்கையானது. காமம் பற்றிய புரிதல்கள் ஏதுமில்லாமல் சுரப்பிகளின் தூண்டல்களினால் அவர்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள் பல பல. அதன் அர்த்தம் தேடி பயணிக்க தூண்டுவதும் அந்த காலங்களில் நடைபெறும் வழமையான ஒன்றே. ஆனால் காமம் பற்றிய புரிதல்கள் வரத்தொடங்கியவுடன் அந்த உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதிலும் தெளிவு மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பிக்கிறது.
என்னை இந்த கட்டுரை எழுத தூண்டியதே பால்ய விவாகங்கள் பற்றியான அவரது மதிப்பிடுகளே.....
அவரின் கூற்றுப்படி ''பாலியியல் விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையைத் தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''
எவ்வளவு தவறான சிந்தனை!?
நம் நாட்டில் பால்ய விவாகங்கள் எத்தனை வயது பெண்களுக்கு - இல்லை, பெண் குழந்தைக்கு நடத்தப்பட்டது?. ஐந்து வயது கொண்ட பெண் குழந்தைக்கும் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. எட்டு வயது சிறுமிக்கும் நடைபெற்றிருக்கின்றன. இந்த வயதில் எந்த சுரப்பிகள் அவர்களது உடலில் அந்த இச்சையைத் தூண்டிவிட்டது என்பதும் அதை அவர்களால் தீர்க்க முடியாத சிரமத்தை களையவே கொண்டுவரப்பட்டதுதான் இந்த விவாகங்கள் என்பதும் சிறுவனான எனக்குத் தெரியவில்லை. பால்ய விவாகங்களில் எந்த நிலையிலும் பெண்ணுக்கு முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. அந்த திருமணங்கள் தனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதைச் சொல்லக்கூடிய உரிமையும் இல்லை. அது குறித்தான அறிவும் அந்த வயதில் குழந்தைகளுக்கு இருக்காது என்பதும் முக்கியமான விசயம். இப்படி ஒரு அப்பட்டமான ஆணாதிக்கச் சிந்தனையைப் பூசி மெழுகி பெண்களின் குணநலன் மீதான அவநம்பிக்கையாக்கி அதிலிருந்து அவளை காப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சித்தரிக்க முனைந்திருக்கிறார். பால்ய விவாகங்களின் பெரும் சோகம் பால்ய விதவைகள். என்ன நடப்பதென்றே உணர்ந்து கொள்ள முடியாத வயதில் அவள் மனைவியும் ஆகி விதவையும் ஆகி விடுகிறாள். போதாக் கொடுமைக்கு சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் வேறு..... ஆனால், இந்த விதவைகளுக்கு சரியான வயதில் வரும் சரியான காமத்தைத் தீர்த்துக் கொள்ள என்ன வழி? யாரும் பேசமாட்டார்களே அதைப் பற்றி?
மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் ஒன்பது, ஆண், பெண்கள் அறம் - 94=
''முப்பது வயதுள்ள ஆணுக்கு பனிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தி நான்கு வயதுள்ளவன் எட்டு வயது பெண்ணையும் மணக்கலாம். இதற்கு முன்பே விவாகம் புரிய அவசரப்பட்டால், வேதம் ஓதுதல் போன்ற அறச் செயல்கள் தடைப்படுதலும், அதனால் பின்னர் துயறுறுதலும் நேரும்''.
இதில் எங்கிருந்து இச்சை தீர்க்கும் புத்தி வந்தது. மநுவின் கூற்று எட்டு வயதிற்கு முன் குழந்தையை, சொல்லி ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது என்பதால் அவசரப்படாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். ஆனால் மனிதர்களோ குழந்தைகளை இறுகப் பிடித்து மடியில் தூக்கி வைத்து தாலி கட்டச் செய்தனர் - அம்முறைக்கு கன்னிகாதானம் என்று பெயரும் வைத்தனர். இந்த விளையாட்டு தனம் நிறைந்த குழைந்தை(களு)க்கு எங்கிருந்து காம இச்சை வருகிறது?
மேலும் பால்ய விவாகத்தினால் இல்லாத காம இச்சையை தீர்க்க முனைந்து பருவத்தே கலவி இன்பம் உச்சத்தை தொடும் வயதில் செயல்பட இயலாத கணவன்களாகி இருப்பர் இந்த மாப்பிள்ளைகள். இப்போது தான் இச்சை தீர்த்தல் பிரச்சனையே எழுகிறது. எங்கே போவது இச்சைகளைத் தீர்க்க, ஆக பால்ய விவாகம் காம இச்சையை தீர்க்க எந்த விதத்திலும் தீர்வு ஆகாது! ஆகாது!! ஆகாது!!!
வயதிற்கே வராத பெண்களுக்குக் இச்சைகள் இருக்கும் எனும் அவரின் எண்ணம் பிரதிலிப்பது காலங்காலமாக அவர் பின்பற்றும் நம்பிக்கைகளே காரணம் என்பதும் இதன் மூலம் எளிதில் உணர முடிகிறது. மேலும் இது உலகெங்கும் ஈனத்தனமான குற்றமாகக் கருதப்படும் pedophilia என்னும் நோய்வகையைச் சார்ந்தது. இந்த ஈனத்தை ஆதரிப்பது மனித தர்மமே ஆகாது.
பால்ய விவாக சிந்தனை இப்படியாக குறுகிய சிந்தனையாக இருக்கையிலே, அவருடைய ஆண்-பெண் கற்பு நிலை- 2 அவர் கூறியிருக்கும் சில வரிகளளில், அவர் தனக்கு இருக்கும் பெண்ணடிமைச் சிந்தனையை மேலும் உறுதி செய்கிறார் - கீழ்க்கண்டவாறு:-//"இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா?''//
விதவை என்பவளுக்கு காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் உடலுறவுத் தேவை மட்டும்தானா இருக்கும்?அல்லது இருக்க வேண்டும்? அவளுக்கு இயற்கையான ஆசாபாசங்கள் இருக்காதா? இருக்கக்கூடாதா? தன்னை, தன் மனதையும் ஒருவன் விரும்ப வேண்டும் என்று ஒரு விதவை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. மாறாக உடல் இன்பம் துய்த்தல் மட்டுமே வாழ்க்கை என்று இறங்குவதுதான் அவசியமானதா? ஏன் பெண்கள் தங்களுக்கென்று எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்து கொள்ளக்கூடாது. இந்த கேலிப்பார்வை அவருடைய பெண்கள் மீதான மதிப்பீட்டிற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு.
இந்த நவீன அவதார புருஷர்களின் பெண் விடுதலை சித்தாந்தமே - உடலுறவு எனும் போலித் தளத்தில் மட்டுமே இயங்குகிறது - மாறாக, பெண்ணின் மனதில் எழும் விருப்பு வெறுப்புகளை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவரின் இந்த பெண்ணடிமை எண்ணங்களின் மூலங்கள் - சிந்தானா ஓட்டத்தின் மூலங்கள் இதோ...'
மனுதர்ம சாஸ்திரம், ஒன்பதாவது அத்தியாயம் ஆண், பெண்கள் அறம் - 15 =''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்ப்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை''''
மனுதர்ம சாஸ்திரம், ஒன்பதாவது அத்தியாயம் ஆண், பெண்கள் அறம் - 16 = ''இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதற் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது''.
xxxxxxxx
பெண் சுதந்திரம் என்பது என்பது வெறும் இச்சைத் தீர்வில் சுருங்கிப் போய்விடவில்லை. இச்சையைத் தணித்து கொள்ள முறையற்று ஒரு ஆணுடன் சேரும் போதே அவளின் சுயமரியாதையும், தன்மானமும் அடிபட்டு போய்விடுகிறது. அங்கு நடை பெறுவது அடிமைத் தனமே அன்றி வேறொன்றுமில்லை.
பெண்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. பொருளாதார ரீதியாக, கல்வியியல் ரிதியாக, தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமை என எவ்வளவோ இருக்கிறது. பாலியியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும், வேண்டும் என்று கூப்பாடு போடும் ஆண்களின் கோரிக்கை பக்கத்து இலைக்கு பாயசம் கொடுங்க என்று கேட்கும் கதைதான். இதில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க வக்கிரத்தையும், அடிமைபடுத்த நினைக்கும் கயமைத்தனத்தையும் பெண்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
Showing posts with label டோண்டு. Show all posts
Showing posts with label டோண்டு. Show all posts
Subscribe to:
Posts (Atom)