டோண்டுவின் பால்ய விவாக எண்ணங்களுக்கான சில பதில்கள்

திரு டோண்டு அவர்களின் ஆண்-பெண் கற்புநிலை-3 என்ற பதிவை எதேச்சையாக பார்த்த போது ஒரு பின்னூட்டமிட்ட நண்பருக்கு இந்த விளக்கத்தை சொல்லியிருக்கிறர்.

''பால்ய விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''

ஆண்-பெண் கற்புநிலை என்ற பெயரில் அவர் அவர் எழுதிய மேலும் 2 பதிவுகளையும் வாசித்த போது அவர் பேசுவது கற்பு நிலையை பற்றி அல்ல. காமமும் அதுசார்ந்த இச்சைகளும் அதை பற்றியதான செய்திகளுமாக மட்டுமே இருந்தது. காமம் என்பது இயற்கையாகவே மனிதனுக்கு இருக்கும் ஒரு அடிப்படையான உணர்வு. இதற்கு ஆண் பெண் பேதமில்லை. ஆனால் அதை ஆண்கள் எளிதாக தீர்த்து கொள்கிறார்கள் என்றும் பெண்களுக்கு அது போன்றதொரு சுதந்திரமான நிலை இல்லை என்றும் கூறியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரை இழிவுபடுத்தும் கருத்து இது. இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் settle ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் பழம் தலைமுறையினாரான அவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.

கல்வி நிறுவன வாசல்களளிலும், TOEFL, GRE மதிப்பெண்களை வைத்துக்கொண்டு தூதரக வாசல்களில் காத்து கிடக்கும் எண்ணற்றோரே - மாறி வரும் இளைய தலைமுறையின் நோக்கங்கள் எதன் மீது திரும்பி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவி செய்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான கலப்பு என்பது இயந்திரக் கலப்பல்ல. அது உயிர்ப்போடு இயங்கும் இரண்டு உள்ளங்கள் சேர்ந்து நடத்தும் ஒரு நிகழ்வு. அப்படி நிகழும் உறவுகளில்தான் முழுமை இருக்கிறது. இளம் வயதில் இருபாலருக்கும் தோன்றும் பாலியியல் உணர்வுகள் எதார்த்தமானது இயற்கையானது. காமம் பற்றிய புரிதல்கள் ஏதுமில்லாமல் சுரப்பிகளின் தூண்டல்களினால் அவர்கள் மனதில் ஏற்படும் மாற்றங்கள் பல பல. அதன் அர்த்தம் தேடி பயணிக்க தூண்டுவதும் அந்த காலங்களில் நடைபெறும் வழமையான ஒன்றே. ஆனால் காமம் பற்றிய புரிதல்கள் வரத்தொடங்கியவுடன் அந்த உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதிலும் தெளிவு மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பிக்கிறது.

என்னை இந்த கட்டுரை எழுத தூண்டியதே பால்ய விவாகங்கள் பற்றியான அவரது மதிப்பிடுகளே.....

அவரின் கூற்றுப்படி ''பாலியியல் விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையைத் தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''

எவ்வளவு தவறான சிந்தனை!?

நம் நாட்டில் பால்ய விவாகங்கள் எத்தனை வயது பெண்களுக்கு - இல்லை, பெண் குழந்தைக்கு நடத்தப்பட்டது?. ஐந்து வயது கொண்ட பெண் குழந்தைக்கும் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. எட்டு வயது சிறுமிக்கும் நடைபெற்றிருக்கின்றன. இந்த வயதில் எந்த சுரப்பிகள் அவர்களது உடலில் அந்த இச்சையைத் தூண்டிவிட்டது என்பதும் அதை அவர்களால் தீர்க்க முடியாத சிரமத்தை களையவே கொண்டுவரப்பட்டதுதான் இந்த விவாகங்கள் என்பதும் சிறுவனான எனக்குத் தெரியவில்லை. பால்ய விவாகங்களில் எந்த நிலையிலும் பெண்ணுக்கு முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. அந்த திருமணங்கள் தனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதைச் சொல்லக்கூடிய உரிமையும் இல்லை. அது குறித்தான அறிவும் அந்த வயதில் குழந்தைகளுக்கு இருக்காது என்பதும் முக்கியமான விசயம். இப்படி ஒரு அப்பட்டமான ஆணாதிக்கச் சிந்தனையைப் பூசி மெழுகி பெண்களின் குணநலன் மீதான அவநம்பிக்கையாக்கி அதிலிருந்து அவளை காப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சித்தரிக்க முனைந்திருக்கிறார். பால்ய விவாகங்களின் பெரும் சோகம் பால்ய விதவைகள். என்ன நடப்பதென்றே உணர்ந்து கொள்ள முடியாத வயதில் அவள் மனைவியும் ஆகி விதவையும் ஆகி விடுகிறாள். போதாக் கொடுமைக்கு சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் வேறு..... ஆனால், இந்த விதவைகளுக்கு சரியான வயதில் வரும் சரியான காமத்தைத் தீர்த்துக் கொள்ள என்ன வழி? யாரும் பேசமாட்டார்களே அதைப் பற்றி?

மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் ஒன்பது, ஆண், பெண்கள் அறம் - 94=

''முப்பது வயதுள்ள ஆணுக்கு பனிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தி நான்கு வயதுள்ளவன் எட்டு வயது பெண்ணையும் மணக்கலாம். இதற்கு முன்பே விவாகம் புரிய அவசரப்பட்டால், வேதம் ஓதுதல் போன்ற அறச் செயல்கள் தடைப்படுதலும், அதனால் பின்னர் துயறுறுதலும் நேரும்''.

இதில் எங்கிருந்து இச்சை தீர்க்கும் புத்தி வந்தது. மநுவின் கூற்று எட்டு வயதிற்கு முன் குழந்தையை, சொல்லி ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது என்பதால் அவசரப்படாதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். ஆனால் மனிதர்களோ குழந்தைகளை இறுகப் பிடித்து மடியில் தூக்கி வைத்து தாலி கட்டச் செய்தனர் - அம்முறைக்கு கன்னிகாதானம் என்று பெயரும் வைத்தனர். இந்த விளையாட்டு தனம் நிறைந்த குழைந்தை(களு)க்கு எங்கிருந்து காம இச்சை வருகிறது?

மேலும் பால்ய விவாகத்தினால் இல்லாத காம இச்சையை தீர்க்க முனைந்து பருவத்தே கலவி இன்பம் உச்சத்தை தொடும் வயதில் செயல்பட இயலாத கணவன்களாகி இருப்பர் இந்த மாப்பிள்ளைகள். இப்போது தான் இச்சை தீர்த்தல் பிரச்சனையே எழுகிறது. எங்கே போவது இச்சைகளைத் தீர்க்க, ஆக பால்ய விவாகம் காம இச்சையை தீர்க்க எந்த விதத்திலும் தீர்வு ஆகாது! ஆகாது!! ஆகாது!!!

வயதிற்கே வராத பெண்களுக்குக் இச்சைகள் இருக்கும் எனும் அவரின் எண்ணம் பிரதிலிப்பது காலங்காலமாக அவர் பின்பற்றும் நம்பிக்கைகளே காரணம் என்பதும் இதன் மூலம் எளிதில் உணர முடிகிறது. மேலும் இது உலகெங்கும் ஈனத்தனமான குற்றமாகக் கருதப்படும் pedophilia என்னும் நோய்வகையைச் சார்ந்தது. இந்த ஈனத்தை ஆதரிப்பது மனித தர்மமே ஆகாது.

பால்ய விவாக சிந்தனை இப்படியாக குறுகிய சிந்தனையாக இருக்கையிலே, அவருடைய ஆண்-பெண் கற்பு நிலை- 2 அவர் கூறியிருக்கும் சில வரிகளளில், அவர் தனக்கு இருக்கும் பெண்ணடிமைச் சிந்தனையை மேலும் உறுதி செய்கிறார் - கீழ்க்கண்டவாறு:-//"இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா?''//

விதவை என்பவளுக்கு காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் உடலுறவுத் தேவை மட்டும்தானா இருக்கும்?அல்லது இருக்க வேண்டும்? அவளுக்கு இயற்கையான ஆசாபாசங்கள் இருக்காதா? இருக்கக்கூடாதா? தன்னை, தன் மனதையும் ஒருவன் விரும்ப வேண்டும் என்று ஒரு விதவை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. மாறாக உடல் இன்பம் துய்த்தல் மட்டுமே வாழ்க்கை என்று இறங்குவதுதான் அவசியமானதா? ஏன் பெண்கள் தங்களுக்கென்று எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்து கொள்ளக்கூடாது. இந்த கேலிப்பார்வை அவருடைய பெண்கள் மீதான மதிப்பீட்டிற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு.

இந்த நவீன அவதார புருஷர்களின் பெண் விடுதலை சித்தாந்தமே - உடலுறவு எனும் போலித் தளத்தில் மட்டுமே இயங்குகிறது - மாறாக, பெண்ணின் மனதில் எழும் விருப்பு வெறுப்புகளை எவரும் கண்டுகொள்ளவில்லை. அவரின் இந்த பெண்ணடிமை எண்ணங்களின் மூலங்கள் - சிந்தானா ஓட்டத்தின் மூலங்கள் இதோ...'

மனுதர்ம சாஸ்திரம், ஒன்பதாவது அத்தியாயம் ஆண், பெண்கள் அறம் - 15 =''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்ப்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை''''
மனுதர்ம சாஸ்திரம், ஒன்பதாவது அத்தியாயம் ஆண், பெண்கள் அறம் - 16 = ''இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதற் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது''.
xxxxxxxx

பெண் சுதந்திரம் என்பது என்பது வெறும் இச்சைத் தீர்வில் சுருங்கிப் போய்விடவில்லை. இச்சையைத் தணித்து கொள்ள முறையற்று ஒரு ஆணுடன் சேரும் போதே அவளின் சுயமரியாதையும், தன்மானமும் அடிபட்டு போய்விடுகிறது. அங்கு நடை பெறுவது அடிமைத் தனமே அன்றி வேறொன்றுமில்லை.

பெண்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. பொருளாதார ரீதியாக, கல்வியியல் ரிதியாக, தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமை என எவ்வளவோ இருக்கிறது. பாலியியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும், வேண்டும் என்று கூப்பாடு போடும் ஆண்களின் கோரிக்கை பக்கத்து இலைக்கு பாயசம் கொடுங்க என்று கேட்கும் கதைதான். இதில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க வக்கிரத்தையும், அடிமைபடுத்த நினைக்கும் கயமைத்தனத்தையும் பெண்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

32 மறுமொழிகள்:

gulf-tamilan said...

don'do is a brahmin !! so he will write always like this only.!!dont expect more than this from him and all other brahmin bloggers

dondu(#11168674346665545885) said...

நான் என்ன எழுதினேன் என்பதை ஒழுங்காகப் படித்து எழுத வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்ததாகத் தெரியவில்லை.
நீங்கள் இப்பதிவில் எழுதியது:
"திரு டோண்டு அவர்களின் ஆண்-பெண் கற்புநிலை-3 என்ற பதிவை எதேச்சையாக பார்த்த போது ஒரு பின்னூட்டமிட்ட நண்பருக்கு இந்த விளக்கத்தை சொல்லியிருக்கிறர்.
''பால்ய விவாகங்கள் பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது''
என்னுடைய அந்தப் பதிவில் நான் எழுதியது:
"பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்."
பின்னூட்டத்தை மட்டும் மேற்கோள் காட்டி பதிவில் எழுதியதை விட்டு விட்டீர்கள்.
மேலும் என் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டமும் அதற்கான என் பதிலும் இதோ:
"எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது
பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.
இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்.."
நான் இட்ட பதில்:
"நான் கூறியது யதார்த்தம். மனித இனத்தில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் எதிர்க்கொள்ளும் சங்கடங்களையே இங்கு கூறப் புகுந்தேன். பால்ய விவாகங்கள் நடந்ததற்கு முக்கியக் காரணமே நான் கூறியதுதான். பெண் ருதுவாவதற்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் முடிக்காது இருந்தால் அவளே தனக்கேற்ற வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அன்று மனு சாஸ்திரத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கா பெண்கள் மேல் கீழ்த்தரமான எண்ணம்? உம்மைப் போன்று பேசுவர்களுத்தான் கீழ்த்தரமான எண்ணம்."
முக்கியக் காரணம் என்றுதான் கூறினேன். ஒரே காரணம் என்று கூறவேயில்லை.

மற்றப்படி அக்காலம் இக்காலம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மனித இனம் நாகரிகம் பெற ஆரம்பித்தக் காலத்திலிருந்தே இவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

"எத்தனை உயர்வான பார்வை பெண்கள் மீது
பெண்களை பற்றி உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றே.
இன்று பெண்ணியம் பேசும் பலரின் உண்மை முகம் இதுதான்.."

நான் கூறியது யதார்த்தம். மனித இனத்தில் பாதி அளவில் இருக்கும் பெண்கள் எதிர்க்கொள்ளும் சங்கடங்களையே இங்கு கூறப் புகுந்தேன். பால்ய விவாகங்கள் நடந்ததற்கு முக்கியக் காரணமே நான் கூறியதுதான். பெண் ருதுவாவதற்கு முன்னாலேயே அவளுக்கு திருமணம் முடிக்காது இருந்தால் அவளே தனக்கேற்ற வரனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அன்று மனு சாஸ்திரத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு?
எனக்கா பெண்கள் மேல் கீழ்த்தரமான எண்ணம்? உம்மைப் போன்று பேசுவர்களுத்தான் கீழ்த்தரமான எண்ணம்.

"இந்த வயதில் எந்த சுரப்பிகள் அவர்களது உடலில் அந்த இச்சையைத் தூண்டிவிட்டது என்பதும் அதை அவர்களால் தீர்க்க முடியாத சிரமத்தை களையவே கொண்டுவரப்பட்டதுதான் இந்த விவாகங்கள் என்பதும் சிறுவனான எனக்குத் தெரியவில்லை."
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிறுவன்தான். இது உங்களுக்குப் புரியாதுதான். சிறுவயதிலேயே திருமணம் செய்துவிட்டு, பெண் பருவம் அடையும்போது அவள் கணவன் மட்டுமே அவள் கண்களுக்கு இது சம்பந்தமானத் தேவைக்காகத் தெரிய வேண்டும் என்பதும் பழைய கால ஏற்பாடுகளின் அங்கம். முதலிரவு அறைக்கு வெளியில் நின்று பாட்டுக்கள் பாடுவார்கள். அதைக் கேட்டிருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

முத்துக்குமரன்,
நல்ல பதிவு.

நண்பன் said...

தூய்மை என்ற பெயரில் தீட்டு என்ற ஈனத்தைக் கடைபிடித்து, தலித்துகளையும் பெண்களையும் அவமானப்படுத்தியது மனுதர்மம். மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தர்மமே மனு தர்மம்.

மனித வாழ்க்கைக்கு உதவாது என்று ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு புத்தகமே அது. அதை இன்னும் விடாப்பிடியாக தூக்கிப் பிடித்துக் கொண்டு, அதை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கை நடத்த விரும்புகிறார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அளப்பரிய உரிமைகளைக் கொடுத்து. மனித இனத்தில் ஏற்றத் தாழ்வுகளைக்கொடுத்து, அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், மனித அறிவு விசாலம் பெற்ற இந்தக் காலத்திலும் கூட, மனுவை விரும்புகிறார்கள். இவர்களைத் திருத்துவதென்பது இயலாத காரியம்.

தங்களது கண்மூடித்தனமான பார்வையினால், அடுத்தவர்களை சிறுவர்களாகவும், தங்களை மேதாவிகளாகவும் பாவிப்பதும் அவர்களது பதற்றத்தையே காட்டுகிறது. அறிவுஜீவிகளான சோ, ஞாநி, சுஜாதா போன்றவர்களே இன்னமும் இந்த மனக்குழப்பத்தில் இருந்து வெளியே வர இயலாத மனநிலையில், பிளாக்கர்கள் மட்டும் தெளிவடைந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை தவறானது.

இத்தனை எழுதிய பிறகும், மனுவில் கூறப்பட்டிருக்கும் உரிமை பற்றி பேசுகிறார். அங்கு கூறப்பட்டுள்ள தர்மம் - ருதுவான பின் தனக்கு மணம் செய்விப்பார் தந்தை என்று மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் காத்திருக்க வேண்டும் பெண். அதன்பின், தனக்குத் தேவையானவுடன் அவள் போகலாம். அவ்வாறு செல்லும் பொழுது, அவள் தன் தகப்பன் அணிவித்த நகைகளையோ, இன்ன பிற பொருட்களையோ எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் அது திருட்டாகும்.

அதாவது, கிட்டத்தட்ட ஓடிப் போகச் சொல்கிறார் மனு.

அதை மீறிய உரிமைகள் எல்லாவற்றையும் மறுத்து.

அதை இன்று அவர்களில் பலர் மிகச் சரியாகப் பின்பற்றுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

முத்துகுமரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி கல்ப் தமிழன். ஆனால் நான் அப்படி பொதுவாக கணிப்பதில்லை. பெண்களுக்கு வீரம் உண்டு மானமும் உண்டு என்று மகாபாரதத்தின் பெண்ணடிமை பாகங்களையே பாஞ்சாலி சபதம் என்று வீரஞ்செறிந்த காவியமாக்கிய பாரதியாரும் பிராமணர்தான்.

ramachandranusha(உஷா) said...

குமரன்! "ஒரு விஷயம், பழமையானது என்றால் சரி என்ற எண்ணம் முட்டாள்தனமானது" என்ற கருத்தை சொன்னவர் விவேகானந்தர்.
ஆக, இதை எல்லாம் யாருங்க பார்க்கிறாங்க? டோண்டு சார் பதிவில் நான் போட்ட மறுமொழி," அபத்த களஞ்சியம்" என்று.
"பொம்மனாட்டிகள் வேலைக்குப் போனா கெட்டுப் போயிடுவா" என்று சொல்லப்பட்டது, ஆனா நடைமுறையில் யாருங்க கடைப்பிடிக்கிறாங்க?
பெண்கள் எங்குமே பிற்பட்ட பிரிவுதான். இந்த உளறல்களை, தடைகளை கண்டுக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். மாற்றங்கள் மெல்ல வருகிறதே தவிர, முன்னேற்றத்தை தடுக்க முடியாது.

அன்பு said...

நல்ல பதிவு... விளக்கத்துக்கு நன்றி.

b said...

அன்பின் முத்துக்குமரன்,

தங்களின் விளக்கம் அருமை.

முத்துகுமரன் said...

//"பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். //

//முக்கியக் காரணம் என்றுதான் கூறினேன். ஒரே காரணம் என்று கூறவேயில்லை.//

//சிறுவயதிலேயே திருமணம் செய்துவிட்டு, பெண் பருவம் அடையும்போது அவள் கணவன் மட்டுமே அவள் கண்களுக்கு இது சம்பந்தமானத் தேவைக்காகத் தெரிய வேண்டும் என்பதும் பழைய கால ஏற்பாடுகளின் அங்கம். முதலிரவு அறைக்கு வெளியில் நின்று பாட்டுக்கள் பாடுவார்கள். அதைக் கேட்டிருக்கிறீர்களா?//


வாழ்க்கைப் பாடே பெரும்பாடா இருக்கிறதால இது வரை அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. இதற்கு பிறகு ஒரு முறைதான் கேட்க வாய்ப்பும் இருக்கிறது. அப்பையும் யாராவது பாடுவார்களா என்றும் எனக்குத் தெரியாது....

எனது கேள்விகளுக்கான பதிலைத் தெரிவிக்காமல் வேறு பக்கம் நகர்ந்து கொள்கிறீர்கள். என்னுடைய கேள்வி மிகத் தெளிவானது. வயது வராத பெண்ணிற்கு என்ன விதமான காம உணர்வும் இச்சையும் இருக்க முடியும்? அதற்கு பதில் சொல்லாமல் வயதிற்கு வந்த பிறகு வரும் இச்சைகளை முறைப்படி தீர்த்துக்கொள்வதற்காகவே
செய்யப்பட்டன என்று மழுப்புகிறீர்கள்.

பால்ய விவாகம் சரியா தவறா என்று உங்களுடன் வாதாட வரவில்லை. அது அறிவற்ற செயல் என்று சிந்திக்கும் திறனுள்ள அனைவருக்கும் தெரியும். அந்த மாதிரியான விவாகங்களுக்கு பெண்களின் குணநலன்களை காரணம் காட்டாதீர்கள் என்பதுதான் நான் சொன்னது.....

மற்றபடி எனது வலைப்பதிவிற்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தமைக்கு எனது நன்றி டோண்டு சார்!

முத்துகுமரன் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோ....

முத்துகுமரன் said...

//பெண்கள் எங்குமே பிற்பட்ட பிரிவுதான். இந்த உளறல்களை, தடைகளை கண்டுக் கொள்ளாமல் முன்னேறிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். மாற்றங்கள் மெல்ல வருகிறதே தவிர, முன்னேற்றத்தை தடுக்க முடியாது.//

உண்மையான வார்த்தைகள் உஷா.....
தங்கள் கருத்திற்கு நன்றி

மகேஸ் said...

/**don'do is a brahmin !! so he will write always like this only.!!dont expect more than this from him and all other brahmin bloggers**/
கல்ப் தமிழன் அவர்களே,நீங்கள் ஒரு பக்குவப்பட்ட மனிதர் இல்லை. ஜாதியை பற்றி பொது இடத்தில் பேச கூச்சமக இல்லை?

முத்துகுமரன் said...

கருத்து சொன்ன நண்பர்கள் அன்பு, மூர்த்தி, மகேஸ் அவர்களுக்கு என் நன்றிகள்

பூங்குழலி said...

//கல்ப் தமிழன் அவர்களே,நீங்கள் ஒரு பக்குவப்பட்ட மனிதர் இல்லை. ஜாதியை பற்றி பொது இடத்தில் பேச கூச்சமக இல்லை?//
நான் இந்த சாதியைச் சார்ந்தவன் என்று பொது இடத்தில் அடையாளப்படுத்திக் காட்டிக்கொள்ள வெட்கமாக இல்லை?
நன்றி,
பூங்குழலி.

மகேஸ் said...

/**நான் இந்த சாதியைச் சார்ந்தவன் என்று பொது இடத்தில் அடையாளப்படுத்திக் காட்டிக்கொள்ள வெட்கமாக இல்லை?**/
Thanks,
I wish to update one thing. I am not a brahmin. I have friends in different communities and religion. Don't live with in a small circle.

rv said...

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைத் தவிர இவ்விஷயத்தை பற்றி சொல்ல வேறொன்றுமில்லை.

நான் மிகவும் மதிக்கும் சங்கர மடத்தில் சமீபத்தில் என் கண்ணெதிரே ஒரு பால்ய விவாகத்திற்கு indirect ஒப்புதலும், நன்கொடை வழங்குமாறும் ஒருவர் (சங்கராச்சாரியார் அல்ல) வேண்டினார். அதற்கு நான் மறுத்தது மட்டுமன்றி அங்கேயிருந்த என் நண்பர்களும் மறுத்தனர். இதனால் அத்திருமணம் தடைபெற்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆயினும், என் எதிர்ப்பை பதிவு செய்ததில் நிம்மதியே.

பதின்ம வயதினை அடையும் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதே சமயத்தில், பருவ வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் இச்சைகள் பற்றி புதிதாக கூறத்தேவையில்லை. அவை இயற்கையானவை. இதில் பெற்றோர்கள் உறவினர்கள் தலையீட்டால் பிரச்சனைகள் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம். அதற்கு நமது மேற்கத்திய exposure (மோகமில்லை) காரணம்.

திருமணம் என்பது என்னைப் பொருத்தவரை இரு மனங்கள் மட்டும் ஒன்று கூடும் நிகழ்ச்சியன்று. அது இரு குடும்பத்தினரின் உறவு. அதில் முக்கிய உறுப்பினர்களே மணமக்கள். மாறாக அவர்களே முதன்மையானவர்களல்ல. அவ்வாறிருக்கையில், வயதுவந்த என்று சட்டத்தால் (அது நமது tradtions-க்கு எவ்வளவு மாறுபட்டதாயினும், பின்பற்றவேண்டியது நம் கடமை) அங்கீரகரிக்கப்படும் திருமணங்கள தவிர மற்றவை சட்டத்திற்கு புறம்பானவையே.

தாகமெடுத்தால் கோக் குடிப்பதை போன்றதே இது. கோக் குடிப்பதில் சட்டத்திற்கு உடன்பாடும் இல்லை. புறம்பானதும் இல்லை. ஓவ்வொருவரின் constitution உம் மாறுபடுகின்றது. வேண்டுவோர் குடிக்கின்றனர், மற்றவர் மாட்டார். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

b said...

மகேசு,

நான் இன்ன ஜாதி என்று வெளிச் சொல்லித் திரிவது கேவலம் இல்லையா? என் பதிவில் வாறி இருக்கிறேன் படித்துப் பாருங்கள்!

dondu(#11168674346665545885) said...

"எனது கேள்விகளுக்கான பதிலைத் தெரிவிக்காமல் வேறு பக்கம் நகர்ந்து கொள்கிறீர்கள். என்னுடைய கேள்வி மிகத் தெளிவானது. வயது வராத பெண்ணிற்கு என்ன விதமான காம உணர்வும் இச்சையும் இருக்க முடியும்? அதற்கு பதில் சொல்லாமல் வயதிற்கு வந்த பிறகு வரும் இச்சைகளை முறைப்படி தீர்த்துக்கொள்வதற்காகவே
செய்யப்பட்டன என்று மழுப்புகிறீர்கள்."

அதற்கும் பதில் கூறுவேன். அதற்கு முன்னால் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புவேன். நான் பேச வந்தது வயதுக்கு வந்த பெண்களைப் பற்றித்தான்.

பெண்கள் வயதுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் அவளுக்கு திருமணம் நடக்கிறது. இத்தாமதத்திற்கு எவ்வளவோ காரணங்கள். அவற்றில் ஒன்று பெண் வேலைக்குப் போய் சம்பாதிப்பவளாக இருப்பதால் வரும் வேறு வித பிரச்சினை. அவள் சம்பளம் போய்விடுமே என்று கவலைப்படும் பெற்றோர்களும் உண்டு.

பெண்ணுக்கு 27 வயது ஆகும்போது அவளுக்கு ஐந்து வயதில் தங்கையோ தம்பியோ கொடுக்கும் வெட்கம்கெட்டப் பெற்றோரும் உண்டு. அரங்கேற்றம் படம் பார்த்தீர்கள்தானே?

இப்போது வயதுக்கு வராத பெண்களைப் பற்றி நீங்கள் கேட்டக் கேள்விக்கு வருவேன். கண்டிப்பாக அவர்களுக்கும் உடல் இச்சை வரும். இது சிறுவர்களுக்கும் பொருந்தும். மனித உடல் கூற்றின் விந்தை இதுவே. இந்த விஷயத்தைப் பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் வந்துள்ளன.

உங்களுக்கு இது பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது என்று நீங்களே இவ்வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள்: "வாழ்க்கைப் பாடே பெரும்பாடா இருக்கிறதால இது வரை அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. இதற்கு பிறகு ஒரு முறைதான் கேட்க வாய்ப்பும் இருக்கிறது. அப்பையும் யாராவது பாடுவார்களா என்றும் எனக்குத் தெரியாது...."

உங்களுக்கு தெரியாது என்பதால் அவை இல்லாமல் போய்விடாது. ஒரு விஷயத்தைப் பற்றி முழுதும் தெரியாது நீங்கள் எழுதும் பதிவு என்பதாகத்தான் இத் எனக்கு தோன்றுகிறது. ஆகவே இனிமேலும் இப்பதிவில் பின்னூட்டம் இடுவது வீணான வேலை.

You have got the certainty of the very much ignorant.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

நான் முதலிரவில் பாட்டு பாடுவாங்களா இல்லையா என்பதைத்தான் தெரியாது என்று சொல்லியிருந்தேன். அது எல்லாத்துக்கும் சொன்னதாக திரிக்கும் உங்கள் intellectual எனக்கு வராது.

27 வயது பெண்ணுக்கு ஐந்து வயது தங்கையோ தம்பியோ வரக்காரணம் அவர்கள் பெற்றோருக்கு சிறுவயதில் நடந்த திருமணம்தானே.

அப்புறம் ஆய்வுகளின் முடிவுகள் இறுதியானது அல்ல என்பதும் முன்னதன் முடிவுகளை பின் வருபவர்கள் தவறு என்று நீருபிப்பதும் அறிவியல் உலகின் எதார்த்தமான அடிப்படை விதி என்பதை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

நீங்கள் உங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளை தொடருங்கள்....

நன்றி

முத்துகுமரன்

முத்துகுமரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராமநாதன்.

நண்பன் said...

அவையடக்கத்திற்காக ஒருவர் நான் சிறுவன் என்று கூறிக் கொண்டதைப் பிடித்துக் கொண்டு மழுப்புவதும்,

முதலிரவின் போது பாடப்படும் பாடலைக் கேட்கவில்லை என்பதனால்,//You have got the certainty of the very much ignorant.// என்று சொல்லி சொன்னவற்றை மறைக்கப் பார்ப்பதும்

ஒன்று கேட்கத் தோன்றுகிறது - you too, Mr. Dondu என்று.

எத்தனை தான் கவனமாக வாதாடினாலும், குற்றமிழைத்தவரின் கட்சிக்காரனின் வக்கீலுக்கு ஒரு கலக்கம் இருக்கத் தான் செய்யும்.

டோண்டு, ஒத்துக் கொள்ளுங்கள் - பால்ய விவகாம் தவறென்று. பதிவிட்டவரின் அவையடக்கத்தை பரிகசிப்பதில் என்ன ஆதாயம் இருக்கப் போகிறது.

உங்களுடைய பண்பட்ட மனத்தினாலெயே, தவறாக உதிர்த்து விட்ட ஒரு வார்த்தையை சுட்டிக்காட்டி பதிவிட்டதை ஏற்க முடியவில்லை என்றால், தவறான பின்னூட்டமிட்டவர்கள் மட்டும் சொல்லித் திருந்துவார்கள் என்று நாமெல்லாம் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

(அப்புறம் அதென்ன, முதலிரவின் போது எல்லோரும் அறையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பாடுவார்கள்? என் முதலிரவின் போது யாரும் அப்படி பாடவில்லை. நான் சென்ற திருமணங்களில் எந்த இடத்திலும் இப்படியான பாடல்களைக் கேட்டதில்லை. ஒருவேளை அது உங்கள் இல்லத்து திருமண வழக்கமாக இருக்கலாம். எல்லா இடங்களிலும் அப்படி செய்யவில்லை.

நீங்கள் எல்லாம் அதிர்ஷ்டக் காரங்க சார். பாட்டுக் கேட்டுக்கிட்டே முதலிரவைக் கொண்டாடியிருக்கீங்க. நாங்கள்லாம் பாவம் சார். கூக்குரலிட்டால் கூட கேட்காத தொலைவில் மற்றவர்கள் படுத்துறங்க - அடுத்ததெருவைத் தொடும் மூலையில் இருக்கும் அறையில் அமைதியாக முதலிரவைக் கொண்டாடினோம்.

இப்படியெல்லாம் பாட்டுக்கள் உண்டு என்ற ஞானம் அப்போதே இருந்திருந்தால் ஒருவெளை ஏற்பாடு செய்திருக்கலாம். முடிந்தால் இளையராஜா, ரஹ்மான் போன்றவர்களைக் காப்பியடிக்கும் இசையமைப்பாளர்களையும் சேர்த்து ஏற்பாடு செய்திருக்கலாம். இனி இயலாது. வாய்ப்பில்லை. கேட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். என்ன செய்வது? சிலருக்குத் தான் பாட்டு கேட்க கொடுத்து வைத்திருக்கிறது. Ignorance is the bliss.

முத்துகுமரன் said...

அப்புறம் சங்கர மடச் சேதி சில மனங்களில் இன்னும் பழையன கழியவில்லை என்பதைத்தான் நீருபிக்கிறது

aathirai said...

பால்ய வயதில் ஒரு பெண் எப்படி தன் வாழ்க்கைத்துணையை
நிர்ணயிக்க முடியும்? என் ஐந்து வயது பெண்ணால் தினமும் தான்
அணியப் போகும் சாக்சை கூட தேர்ந்தெடுக்க முடிவதில்லை.

பெண்களை அடிமையாக்க இதை விட வேறு சிறந்த வழி
இருக்க முடியாது. படிப்பும் கிடையாது. அல்லது படிக்க முடியாது.
14 வயதிலிருந்து குழந்தை குட்டியென்று வாழும் வாழ்க்கை. இந்த
வட்டத்திலிருந்து வெளியே வராமல் அவர்களை கட்டி போட்டு
நாய்க்குட்டியைப்போல வளர்ப்பதுக்குதான் உதவும்.

முத்துகுமரன் said...

திரு. ஆரோக்கியம் அவர்களின் பின்னூட்டமும், முகமுடி அவர்களின் பின்னூட்டமும் இங்கு பதிக்கப்படவில்லை.

மாற்றுக்கருத்துகளானாலும் அவை நேர்மையான முறையிலும் ஆரோக்கியமாகவும் மட்டுமே விவாதிக்கபட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். அவர்களின் பதிவுகள் இந்த கட்டுரைக்கு பொறுத்தமற்றதாக, தேவையற்ற துவேசங்களை உள்ளடக்கி இருப்பதாலும்தான் இங்கு பதிவிடப்படவில்லை. எனினும் அவைகளை நான் சேமித்து வைத்திருக்கிறேன்.

அவர்களுக்கும் என் நன்றி..

dondu(#11168674346665545885) said...

என்னுடையப் பதிவுகளைச் சரியாகப் படியுங்கள் என்றுதான் நான் கேட்கிறேன். அதைப் படிக்காததால்தான் என்னமோ நான் பால்ய விவாகங்களை ஆதரித்ததாக இப்பதிவாளர் அவராக நினைத்துக் கொண்டு இப்பதிவையே போட்டிருக்கிறார். முதலும் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிட்டது.

நான் பால்ய விவாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு முக்கியக் காரணமே அக்காலத்தில் பெண்கள் தேவையைப் புரிந்து கொண்டு இதைச் செய்தார்கள் என்பதை ஒரு சரித்திர நிகழ்ச்சியாகக் கூறியிருந்தேன் அவ்வளவுதான். அது கூடப் போகிற போக்கில் கூறியது. அதைக் கூறிய கையோடேயே பால்ய விதவைகள் பிரச்சினையையும் எழுதியிருக்கிறேனே. இப்போது கூறுகிறேன். நான் பால்ய விவாகத்தை எங்குமே ஆதரிக்கவில்லை. அது வந்ததற்கான முக்கியக் காரணத்தைத்தான் கூறினேன். மற்ற சரித்திர நிகழ்ச்சிகளால் அது கால வெள்ளத்தில் அடிபட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான். இதில் நான் அளித்ததாகக் கூறும் ஆதரவை என் பதிவுகளிலிருந்து எங்காவது இன்ஃபர் செய்ய முடியுமா?

இன்னொரு விஷயம் தேவதாசிகள் பற்றியது. நான் அதையும் ஆதரித்ததாக இன்னும் சிலர் கூறுகின்றனர். என்ன உளறல் இது.

"இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் settle ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பாவம் பழம் தலைமுறையினாரான அவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்."
அப்படி என்ன ஐயா தலைமுறை இடைவெளியைக் கண்டு விட்டீர்கள்? நீங்கள் கூறுவது நிலைமை அவ்வாறு இருக்க வேண்டும் என்பதே. நானும் அதைத்தான் விரும்புகிறேன். நானும் நீங்களும் விரும்புவதால் மட்டும் அப்படியாகிவிடுமா?

என் பதிவில் கூற வந்ததே வேறு. உடல் இச்சை என்பது பசி, தாகம் போன்ற உணர்வுதான். அதைத் தீர்த்துக் கொள்ள ஆணுக்கு வழிகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இல்லை. அவ்வளவுதான் விஷ்யம். அது பற்றிப் பேசுவதே பாவம் என்று நினைப்பதால்தான் பிரச்சினைகள் வருகின்றன.

மற்றப்படி ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி உடல் இச்சை என்பது வெகு சிறிய வயதிலேயே, பருவமடைவதற்கு முன்னமேயே வந்து விடுகிறது. உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் இதுதான் உண்மை.

"அப்புறம் ஆய்வுகளின் முடிவுகள் இறுதியானது அல்ல என்பதும் முன்னதன் முடிவுகளை பின் வருபவர்கள் தவறு என்று நீருபிப்பதும் அறிவியல் உலகின் எதார்த்தமான அடிப்படை விதி என்பதை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்."

இப்போதைய நிலையைத்தான் நான் கூறினேன். அது தவறு, உடல் இச்சை சிறுவயதில் ஏற்படாது என்று ஆய்வு முடிவுகள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

திரு.முகமுடி பெயரில் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வந்த பின்னூட்டம் அவருடையதாக இருக்காது என்றும் அது போலியின் செயலாக இருக்கும் என்று கருதுகிறேன் இது குறித்து முகமுடி அவர்கள் விளக்குவார்கள் என்றும் நம்புகிறேன். ஒருவேளை அவருடையதாக இல்லாதிருப்பின், அவர் பெயரை தவறாக குறிப்பிட்டதற்காக வருந்துகிறேன்..

நண்பன் said...

//இப்போதைய நிலையைத்தான் நான் கூறினேன். அது தவறு, உடல் இச்சை சிறுவயதில் ஏற்படாது என்று ஆய்வு முடிவுகள் வரும்போது
பார்த்துக் கொள்ளலாம். //

ஒரு பாதியை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.

மறு பாதியில் மறுபடியும் குழப்பம் தான். நீங்கள் கூற வந்தது - sexual awareness என்று நினைக்கிறேன். அதாவது காம இச்சை இல்லை
மாறாக தான் யார் என்று அறியும் ஆர்வம்.

தன்னைத் தானே தேடித்துழாவி, தான் யார், தன் identity என்ன என்ற அறியும் ஆர்வம். இதனாலேயே, தன் பிறப்புறுப்புகளைத் தடவிப்
பார்ப்பதும், தன் வயதையொத்த மற்ற குழந்தைகள் அனைவரும் தன்னைப் போன்றிருக்கிறார்களா அல்லது வித்தியாசப்படுகிறார்களா என்று
அறியும் ஆவலில் இருக்கின்றன குழந்தைகள். இது மனித வளர்ச்சியின் இயற்கையான ஏற்பாடு தான். இந்த உணர்ச்சிகளை காம இச்சையென
குறிப்பிடுவது தவறு.

இதை வேண்டுமானால் தேடுதல் என்று குறிப்பிடுவோம்.

இந்தத் தேடல், தன்னை அறியும் முயற்சி ஒரு குழந்தை மனிதனின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதாகி விடுகிறது. இந்தப் பருவத்தில்
தன்னை உணரத் தவறிய குழந்தை மனிதன் பின்னர் வளர்ந்ததும் தான் ஆணா, பெண்ணா என்ற மனக்குழப்பத்திற்கு ஆளாவதுடன், இயற்கையான
காமத்தை விட வேறுவகையான காமத்திற்கு விருப்பம் உள்ளவனாகிவிடுகிறான். He / She prefers alternatives rather than the natural
way of having sex. (இந்த சமயத்தில் - ஜூனியர் விகடனில் உயிர் என்ற தொடர் ஒன்று வருகிறது. படியுங்கள். ஆபாசமற்ற ஆனால்
விறுவிறுப்பாக செல்கிறது.)

இப்படியாக குழந்தை தன்னைத் தானே அறிந்து கொள்கிறது. பின்னர் தனக்குத் துணையாக வரக்கூடிய இணையைத் தேடும் முயற்சியில்
இறங்குகிறது. பெற்றவர்கள் துணையுடன் இருப்பதைப் பார்த்து மட்டும் அல்ல - அதன் மரபணுக்களில் குறிக்கப்பட்ட செய்தி - உடலுறவிற்கு
ஆள் ஏற்பாடு செய்து கொள். Darwin கோட்பாடு இதைத் தான் சொல்கிறது. survival of the fittest. வலுவான சந்ததி பிறக்க ஆரோக்கியமான
உடலுறவிற்குத் தகுந்த ஆள் (துணை) தேவை. Darwin-ன் மற்றொரு கோட்பாடு - To survive, every species must re-produce. அதாவது
இனவிருத்தி செய்து கொள்வது. இனவிருத்தி என்பது இங்கு உடலுறவின் மூலம் பெறப்படும் சந்ததி என்பதும் தெளிவு. (ஏன் டெஸ்ட் ட்யூப் பேபி இல்லையா
என்றெல்லாம் விவாதிக்க வேண்டாம். அது ஒரு மாற்று தானே தவிர அதுவே வழியாகி விடாது.)

இங்கு குறிப்பிட்ட தன்னை உணர்தல் என்பது உடல்ரீதியான தேடுதல். ஆனால், இணை தேடுதல் என்பது இன்னமும் sub-conscious mind
என்ற அளவில் தான் நிகழ்கிறதே தவிர, வெளிப்படையாக தெருமுனையில் நின்று கொண்டு சீட்டி அடித்து, கடிதம் கொடுத்து தேடும் வரை
வந்து விடவில்லை.

சரி, இந்த இணை தேடுதல், எங்கிருந்து ஆரம்பிக்கிறது. பெற்றவர்களிடமிருந்து தான். குழந்தை தான் யார் என்ற உணர்வைப் பெற்றதும் - அடுத்து, தனக்கு
எதிர்பாலான பெற்றோரிடம் தனக்கு வரக்கூடிய துணையின் அடையாளங்களைத் தேட ஆரம்பிக்கிறது. இதைத் தான், ஆண் குழந்தைக்கு
தாயிடமும், பெண் குழந்தைக்கு தந்தையிடமும் ஈர்ப்பு ஏற்படுகிறது என கூறுகின்றனர். ஆனால், இந்த ஈர்ப்பின் பின்னணி என்பது, தன்
வருங்காலத் துணையின் ஆளுமைகளைத் தான் குழந்தை தேடுகிறது.

இந்த இரண்டையும் முழுமையாக உணர்ந்து கொள்ளும் காலம் வருவதற்கும், பருவம் என்ற வயதை அடைவதற்கும் சரியாக இருக்கிறது.
அந்த சமயத்தில், காமம் தன் இச்சையைத் துவக்குகிறது. அதுவரையிலும் அது ஒரு தேடுதலிலே இயங்கி வந்தது. இந்த காம இச்சைகள்
வரும் பொழுது - அங்கு இயற்கை நிகழ்த்தும் விளையாட்டு - உறவு கொள் என்று விரட்டுவது. எப்படியாவது கூடி விடு என்று வற்புறுத்துகிறது.
இந்த இயற்கைக்குத் தேவை - ஒரு வாரிசு உண்டாக்கு. அதற்குத் தகுந்தவாறு - இந்த காம உணர்வுகளை மிக அதிகமாக செயல்பட வைக்கிறது.
இச்சை தூண்டும் சுரப்பிகளை உசுப்பி, மிக அதிகமான சுகங்களையும் கற்பனையும் மனதில் உதிக்கச் செய்து ஒரு சொர்க்கபுரியையே உண்டாக்கிக்
காட்டுகிறது அந்தப் பருவமடைந்த வயதில். இங்கு வருவது தான் உண்மையான காமம். இந்த காமக் உறவு கொண்டால் மட்டுமே தீரும்
என்பதும் சரிதான். ஆனால் அந்தப் பருவ வயதில் உடல் தயாரான அளவிற்கு, மனம் தயாராகி இருக்குமா? அப்படி தயாராகி இருக்க வேண்டுமென்பதற்காக
பலவித பயிற்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கலாம். டோண்டு குறிப்பிட்ட முதலிரவு பாடல்களைப் போல. இது ஒரு சமூகப் பயிற்சி. Conditioning the mind.
கற்பிப்பது. கற்பு. அதாவது we continue to get conditioned by knowledge gathered over years of experience. இது தான் கற்பு. மாறாக
ஆண் அடக்குகிறான் என்றோ, பெண் அடங்குகிறாள் என்பதும் அல்ல. இங்கு பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டது காமத்தைக் கண்டவனிடத்தில் தேடாதே. கணவனுக்கு
அதைப் பரிசாகக் கொடு.

திருமணம் என்பது பருவமடைந்ததும் செய்யப் படவேண்டிய ஒன்று. இல்லையென்றால், தவறுகள் நிகழ வாய்ப்புகள் உண்டு. காமத்தை திருட்டுத்தனமாக
தேடத் தொடங்கி விடுவார்கள். அதைத் தான் குஷ்பு சொன்னார் - உறையை மாட்டிக்கொண்டு காமத்தைத் தேடுங்கள் என்று. மேலோட்டமாகப் பார்த்தால்
இது ஒரு உன்னதமான கருத்து என்று தோன்றலாம். ஆனால், இது இயற்கைக்கு எதிரானது. ஏனென்றால் - இயற்கை விதித்தது போய் இச்சை தீர்த்து வா
என்றல்ல. வாரிசு உண்டாக்கு என்பது தான் அதனின் நோக்கம். நீங்கள் வாரிசு உண்டாக்கவில்லையென்றால் அழிந்து போய்விடுவீர்கள். அதனால் வாரிசு உண்டாக்கு.
Be the fittest race. Be the fittest tribe. அவ்வளவு தான். ஒழுக்கம் அல்லது ஒழுக்கக் கேடு என்பது இயற்கையின் நியதிகளுக்கு மாறானது.

ஆனால், குஷ்பு சொல்லும் இந்த free sex பெண்ணுரிமைக்கு வழி கோலுமா? கிடையவே கிடையாது. பாதுகாப்பான உறவில் சுகம் கண்டுவிட்டால், பின்னர்
வாரிசு உண்டாக்கும் முனைப்பு இல்லாது போய்விடும். இயற்கை வகுத்துக் கொடுத்த தீவிர தூண்டுதல்கள் எல்லாம் திருட்டு காமத்தில் போய்விட்டால், பின்னர்
வாரிசு உண்டாக்கும் உறவில் ஆர்வமில்லாது போய்விடும்.

இன்று பல மேலை நாடுகளில் இது தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக Scandinavian Countries என்று சொல்லப்படும், வட ஐரோப்பிய நாடுகளில் இந்த
வாரிசு உண்டாக்கும் ஆர்வமற்றவர்கள் அதிகம். அந்த நாடுகள் கூப்பாடு போடுகின்றன - பிள்ளைகளைப் பெறுங்கள் என்று. நீலப்படங்களை அனுமதிக்கின்றன. \
அப்படியாவாது உணர்ச்சி பெற்று குழந்தைகள் உண்டாக்குங்கள் என்று. ஆனால், ஆண்களும் பெண்களும் உரிமை என்ற பெயரில் தங்கள் அழிவிற்குத் தாங்களே வித்திட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.

டோண்டு இப்பொழுது மீண்டும் சொல்லட்டும் - பால்யத்தில் தோன்றுவது காம இச்சையா? அல்லது self awareness தேடுதலா?

(இந்தப் பின்னூட்டத்தை பின்னர் தனிப்பதிவாகவோ, அல்லது திருத்தப்பட்டு வேறு இதழ்களுக்கோ உபயோகப்படுத்திக் கொள்வேன்.)

aathirai said...

நண்பண் ரொம்ப நல்லா விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

திருமணத்திற்குப்பின்னும்தானே கருத்தடை செய்கிறோம். அப்பொழுதும் இயற்கைக்கு
மாறாக தான் செயல்படுகிறோம். இதை செய்யாவிட்டால், அப்புறம் குழந்தை, அடுப்படி
என்றும் உணவு தேட வழியில்லாமல் போய்விடுகிறது. உணவு தேட வழியில்லாதபோது,
பெண் மேல்மேலும் அடிமை ஆகிப்போகிறாள். இந்த காரணத்தினாலேயே
பெண்கள் முதலில் கருத்தடை உரிமை கேட்டார்கள். ஏராளமான குழந்தைகள் பெற்ற
காலத்தில் பெண்கள் எத்தனை பேர் ஆரோக்கியமில்லாமல் இறந்து போனார்கள்?


இப்ப்ழுது டெமி மூர் திருமணம் செய்யும் பொழுது சொகிறார். we want to make our
own children என்று. ஏற்கெனவே இவருக்கு வளர்ந்த பெண்களும் உள்ளனர்.

free sex இனால் பெண்கள் குழந்தை பெறுவதை முற்றிலும் நிறுத்த மாட்டார்கள்.
ஆனால் ஆண்கள் திருமணம் செய்வதை தள்ளிப் போடுவார்கள். மேல்நாடுகளில்
இப்பொழுதும் அப்படிதான் நடக்கிறது. ஒரு கட்டத்தில் எந்த சின்ன பெண்ணும்
கண்டுகொள்ளாதபோது சரி வயதாகிவிட்டது என்று திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் திருமணமே இல்லாமலும் போகலாம். ஆனால் குழந்தைகள்
பெறுவது நிற்காது.

ஏராளமாக குழந்தைகள் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ற incentive இல்லாமல்
இனி பெண்கள் இந்த தலையாய கடமையை செய்வது சந்தேகந்தான்.

நண்பன் said...

//ஏராளமாக குழந்தைகள் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ற incentive இல்லாமல்
இனி பெண்கள் இந்த தலையாய கடமையை செய்வது சந்தேகந்தான். //

ஆதிரை,

Fantastic.

இப்பொழுது, பெண்கள் தான் சொல்ல வேண்டும் - அந்த incentive என்னவென்று. நான் நினைக்கிறேன் -
The liberation and empowerment of the womanhood depends on defining what this incentive is.! Right?

இந்த incentive ஐ குஷ்பு சொல்கிறார் - திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான பாலுறவு என்று. அவருடைய அனுபவத்திற்கும்
தகுதிக்கும் அவரால் அதற்கு மேல் சிந்திக்க முடிவதில்லை. ஒரு ஆணுடன் உறவு கொள்வதால் மட்டும் தனக்கு உரிமை வந்து விடும்
என்று எதைக் கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒரு நடிகருடன் உண்டான உறவு முறிந்த பொழுது, இவர் குமுறி குமுறி குமுதத்தில்
அளித்த பேட்டியைப் படித்திருக்கிறேன். இன்று அத்தகைய உறவை - அதில் இருக்கும் மன உளைச்சல்களை மறந்து விட்டு, அல்லது துறந்து விட்டு
அந்த உறவு தந்த இன்பத்தை மட்டும் பேசுகிறார். இது தான் பெண்களுக்கான முழுவதுமான சுதந்திரமா?

இருக்காது.

இந்த incentive மற்ற பெண்களால் எடை போடப்பட்டால் எப்படி இருக்கும்?

சிலருக்கு தாங்கள் விரும்பிய வரை கல்வி கற்கும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்கலாம். இன்று பல குடும்பங்களிலும் - நான் பார்த்த வரையிலும் -
பெண்களுக்கு கல்வி ஒரு அளவைத் தாண்டும் பொழுது மறுக்கப்பட்டு விடுகிறது. மிக அதிக கல்வி தகுதி, திருமண சந்தையில் விலை போவதில்லை.


மேலும் சில பெண்களுக்கு அலுவலகத்தில் சாதிக்கும் போராட்டத்தில் இயங்கக் கூடிய சக்தி இல்லையென்று உயர் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
இடமாற்றம் இயலவில்லை என்பதால் பதவி உயர்வைத் துறக்கும் நிலை - ஒரு ஆணைச் சார்ந்து இயங்க வேண்டியிருப்பதால்.

இன்னும் சிலருக்கு குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமை - அல்லது முடிவெடுப்பதில் கலந்தாலோசிக்கப்படுதல் என்ற விருப்பங்கள் இருக்கலாம்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவற்றைப் பெண்கள் தான் சொல்ல வேண்டும்.

அவள் விகடனை தற்செயலாகப் பார்த்தேன் - அதில் ஒரு பெண் கேட்டிருக்கிறார் - வலுக்கட்டாயமாக எதற்காக முறை தவறிய உறவு ஒன்றை
பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.? ஒழுக்கத்துடன் வாழ்வோம் - அந்த ஒழுக்கத்தை ஆண்களுக்கும் கற்பிப்போம்.

பெண்களே சொல்லட்டும் - ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு எது உரிமை என்று. இவருக்காக அவர் பேசுவதும், அவருக்காக இவர் பேசுவதும்
அத்து மீறல் ஆகும்..

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு முத்துகுமரன்,
//இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
//
இந்த வரிகளில் எல்லாவற்றையும் சொல்லிட்டீங்க.. இதுக்கு மேலும் டோண்டு சார் அரைச்ச மாவையே அரைப்பது அவரோட ஈகோவை மட்டும் தான் காட்டுது..

ராபின் ஹூட் said...

டோண்டு அவர்களின் பதிவைப் படித்தேன். பெண்கள் விருப்பப்பட்டால் யாருடனும் பாதுகாப்பாக உடலுறவு கொள்ளலாம் என்கிறார்.

உடலுறவிற்குப் பிறகு பணம் வாங்கிக் கொண்டால் என்ன? கெட்டவிதமாகத் தப்புப் பண்ணியாச்சு. பணத்தை மட்டும் வாங்கிக் கொள்வதால் அதற்கு மேல் என்ன தப்பு வந்து விடப் போகிறது.

டோண்டு அய்யா விளக்கம் சொல்வாரா?

Karthik Jayanth said...

//இன்றைய மாணவ மாணவியர்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களை நிலை நிறுத்து கொள்ள தேவையான கல்வி அறிவை பெறுவதற்கும், அதை முதலீடாக கொண்டு வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் settle ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்கிறதே தவிர எதிர்பாலார் மீது காம இச்சை கொண்டு அதை தீர்த்துக் கொள்ள வழி தேடுவதல்ல வாழ்க்கை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

MuthuKumaran well said.. I agree with you :-)

Related Posts with Thumbnails