நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை

தேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது.

இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.

நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,

**
விடைபெறும் முன்

அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

23 மறுமொழிகள்:

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

முத்துக்குமரன்,

//நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல்//

மிகச்சரியாகச் சுட்டியிருக்கிறீர்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இருக்கும் நீராதாரத்தைத் தினமும் காவுகொடுத்துக்கொண்டு மக்களை தண்ணீருக்காகப் பிச்சையெடுக்க வைத்தாகிவிட்டது. பணம் இருப்பவர்கள் தற்போதைக்குப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இயற்கை ஆப்பு வைக்கப் போகிறது. எதிர்காலத்தில் தண்ணீரே எல்லா வன்முறைகளுக்கும் காரணமாகிப் போகும் என்று ஊகிக்கிறேன்.

இரண்டு மாநிலங்களை அணைத்து ஓடும் ஒரு நதியையே அரசியல்வாதிகளால் சுமுகமாக மக்களுக்குப் பங்குபிரித்துத் தர வக்கில்லை. இந்த லட்சணத்தில் வெவ்வேறு நதிகளை இணைப்பார்களாம். நாடுமுழுதும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து எல்லாம் சுபிட்சமாகிவிடுமாம். யார் காதில் பூ சுற்றுகிறார்கள்.

நதிகளை இணைத்தாலும் அந்தந்த மாநில சுயநலவியாதிகள் தடுப்பு அணை கட்ட முயல மாட்டார்களா?

முரண்டுபிடிக்கும் மாநில அரசுகள். வேடிக்கை பார்க்கும் மத்திய அரசுகள். தண்ணீர் கொண்டுவருகிறோம் என்று மக்களை அனுதினமும் வஞ்சிக்கும் ஆளும் கட்சிகள்.

இவர்களை நம்புவதற்குப் பதிலாக நாமெல்லாம் கூடியமர்ந்து தப்புத் தப்பாகவாவது அமிர்தவர்ஷிணி ராகத்தில் Rain Rain Don't Go Away, Come here everyday என்று பாடலாம்!

நம் மக்கள் நிறையவே பாவம் செய்திருக்கிறார்கள்! :-(

அதுசரி, உங்கள் பயணம் நல்லபடியாக அமையட்டும்.

முத்துகுமரன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி சுந்தர்.

//அவர்களுக்கும் இயற்கை ஆப்பு வைக்கப் போகிறது. எதிர்காலத்தில் தண்ணீரே எல்லா வன்முறைகளுக்கும் காரணமாகிப் போகும் என்று ஊகிக்கிறேன்.//

சரியாக சொல்லியிருகிறீர்கள். இதைத்தான் என் பதிவின் இறுதியில் சொல்லியிருந்தேன்
//
நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும்.//
உலகமே நீருக்காக வன்முறையில் இறங்கக்கூடும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தா இவ்விடயத்தில் சந்திக்க போகும் அவலங்கள் நிறைய. வருமுன் காக்க ஒரு சிறுஅடியையாவது எடுத்து வைக்க வேண்டும்.

Anonymous said...

ஆமாங்க.மிகப்பெரிய ஏமாற்று வேலை இது;ஆனா,இதைவிட பிரம்மாண்டமான ஏமாற்றுவேலை இருந்தது/இருக்கிறது.அதற்கு பெயர் திராவிடம்.அதை என்னிக்கு இந்த கேவலமான கும்பல் தூக்கி எறியப் போவுதோ?

சிவகாசி ஸ்ரீனிவாசன் said...

தெரிந்த ரகசியம்தான். முதலில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முடியுமா? காவிரி, பாலாறு, தாமிரபரணி, வைகை, இன்னும் பிற நதிகளை இணைத்தால் டெல்டாகாரர்கள் சும்மா விடுவார்களா?
பிறகு தமிழகத்தை பிரிக்க வேண்டும்.

செல்வேந்திரன் said...

பிரமாதமான பதிவு; சுந்தரின் தரமான பின்னுட்டம். இரண்டுமே அருமை

வெங்கட்ராமன் said...

நானும் இத்தனை காலம் நதி நீர் இணைப்பு சாத்தியம் என்றே நினைத்திருந்தேன். உங்கள் பதிவை பார்த்து தான் உணமையை உணர்ந்து கொண்டேன்.

இதை எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு தானே நம் அரசியல் வாதிகள் நம்மிடம் பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி எனக்கு விளங்க வைத்ததற்கு,

கோவி.கண்ணன் said...

//நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,//

தேசிய நீரோடைக்குத்தான் நடிகர் - நடிகைகள் இருக்கிறார்களே. அப்பறம் ஏன் கவலை ?

:))

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவகாசி ஸ்ரீனிவாசன்
//தெரிந்த ரகசியம்தான். முதலில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முடியுமா? காவிரி, பாலாறு, தாமிரபரணி, வைகை, இன்னும் பிற நதிகளை இணைத்தால் டெல்டாகாரர்கள் சும்மா விடுவார்களா?
பிறகு தமிழகத்தை பிரிக்க வேண்டும். //
பார்த்து பேசுங்க பிரிவினைவாதியாக்கிடப் போறாங்க. :-)

மஞ்சூர் ராசா said...

மிகவும் உண்மை.

உங்கள் கட்டுரையின்படியே அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நடக்கும்.
//அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா//

லக்கிலுக் said...

தயவுசெய்து கூவம் நதியை எங்கள் நதிகளுடன் இணைத்து விடாதீர்கள் என்று அண்டை மாநில அரசு அதிகாரிகள் கதறி கொண்டிருக்கிறார்களாம்!

இப்னு ஹம்துன். said...

முத்துக்குமரன்,
தெளிவான சிந்தனை, தீர்க்கமான பதிவு.
நம் நாட்டின் அழகாக ஜனநாயகம் இருக்கிறதென்றால், அவலமாக அரசியல் இருக்கிறது.

பணமும் தன்னலமுமே பிரதானமாகிப் போக, போகாத ஊருக்கு வழிகாட்டி மறைகிற அரசியல்வாதிகள் பகற்கொள்ளையர்கள்.
நாளை இவர்களுக்குத் தான் 'படம்' திறந்து வைக்கப்படும் மக்கள் மன்றங்களில் - தனக்குத்தானே குழி வெட்டிக்கொள்ளும் 'அசிந்தனை'யர்களால்.

லொடுக்கு said...

தெளிவாக சிந்திக்கிறீர்கள் நண்பரே. நீங்கள் கூறுவதுதான் நடக்கிறது என்பது சிறிது சிறிதாக புரியத்தொடங்குகிறது.

Anonymous said...

//தயவுசெய்து கூவம் நதியை எங்கள் நதிகளுடன் இணைத்து விடாதீர்கள் என்று அண்டை மாநில அரசு அதிகாரிகள் கதறி கொண்டிருக்கிறார்களாம்!//

கூவம் நதி அண்ணா அறிவாலயத்தோடு கலந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.தி மு க கும்பல், கூவம் நதியை மற்ற திராவிடர்களோடு பங்கு போட்டுக்க அனுமதிக்கமாட்டார்கள்.கவலை வேண்டாம் லக்கி.

நாகை சிவா said...

நல்ல பதிவு....

நதி நீர் இணைப்பை விடுவோம். முதலில் கடலில் உபரியாக கலக்கும் நீரை தடுத்து அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினாலே போதும் என்பது என் எண்ணம். கடந்த சில வருடங்களாக தேவைக்கு அதிகமாகவே மழை பெய்கின்றது.

நாகை சிவா said...

//தெரிந்த ரகசியம்தான். முதலில் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முடியுமா? காவிரி, பாலாறு, தாமிரபரணி, வைகை, இன்னும் பிற நதிகளை இணைத்தால் டெல்டாகாரர்கள் சும்மா விடுவார்களா?
பிறகு தமிழகத்தை பிரிக்க வேண்டும். //

இதை டெல்டா மாவட்டக்காரர்கள் ஏன் எதிர்க்க போகின்றார்கள். அதிகமாக நீர் தேவைப்படுவது அவர்களுக்கு தானே.....

குமரன், உப்பு சப்பு இல்லாத காரணத்தை எல்லாம் காட்டி பிரிக்கனும் என்று சொன்னால் பிரிவினைவாதிகள் என்று தான் சொல்லுங்க.... வினையை பிரிப்பவர்கள் என்று எடுத்துப்போம்.. ;-)

பயணம் இனிதே அமையட்டும்...

இளவஞ்சி said...

முத்துகுமரன்,

// நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு.//

இது கருத்து! :)

அருமை! உண்மை!!

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

நம்முடைய அவசரத் தேவை கடல்நீரைக் குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள். நல்லவேளை, கடலில் யாரும் எந்த மாநில அரசும் அணை கட்டப் போவதில்லை.

மாநிலம் முழுவதையும் நீரேற்று நிலையங்கள், குழாய்கள் மூலம் நல்லபடியாக இணைத்து, இயற்கை வழங்கிய குடிநீரையும், குடிநீராக நாம் மாற்றும் கடல் நீரையும் ஒழுங்கான முறையில் விநியோகிக்க வேண்டும். எதிலெதிலோ இலவசத்தில் மக்கள் பணத்தைக் கரைப்பதற்குப் பதிலாக இதில் செலவிட்டால் வருங்கால சந்ததிகள் இவர்களை வாழ்த்தும். இதில் மற்ற மாநிலங்களையோ மத்திய அரசையோ நம்பியிருக்கவேண்டியதில்லை.

'கடலைக் குடிநீராக மாற்றினால் திருமாலின் பாற்கடல் கரைந்துவிடும்' என்று யாரும் கிளம்பி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்! :-)

இது தவிரவும், நாமும் தண்ணீரைத் தங்கம் போலப் பாவித்து வீணாக்காமல் உபயோகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். குழாயைத் திறந்து விட்டுச் சோம்பலாகப் பல்துவக்குவதிலிருந்து, பாத் டப்பில் மணிக்கணக்காகப் பன்றிபோல் ஊறாமலும், ஷவரில் கனவு காணாமலும் நீரைச் சிக்கனமாக உபயோகிக்கவேண்டும். எங்கேயாவது குழாயில் நீர் விழும் சத்தம் கேட்டாலே நெஞ்சம் பதறவேண்டும். தெருவில் குழாய் உடைந்து வீணாகிக்கொண்டிருக்கும் குடிநீரைப் பார்த்து மயிராப் போச்சு என்று எட்டி நடக்காமல் உயிர் போகும் அவசரத்தில் உடனடியாக அதைச் சரிசெய்துவிட்டு அடுத்த வேலை பார்க்க வேண்டும்.

சொல்லிச் சொல்லி என் வீட்டில் குழாயைச் சன்னமாகத் திறந்துதான் உபயோகிக்கிறார்கள். Plastic Mug-இல் நீர் பிடித்துத்தான் குழந்தைகள் பல் துலக்குகிறார்கள்.

வீணாகாமல் நீரைச் சேமித்தாலே பெரிய பயன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சமீபத்தில் நான் கண்ட நல்ல காரியம் மழை நீரைச் சேகரிப்பதைக் கட்டாயமாக்கிய திட்டம். அதை இன்னும் விரிவுபடுத்தி வானம் தரும் நீரை சிந்தாது சிதறாது சேமிக்க வேண்டும்.

முடியாதது என்று எதுவுமே இல்லை. தேவைப் படுவது மனம் - ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல - நமக்கும்.

நன்றி.

வவ்வால் said...

வணக்கம் முத்துக்குமரன்,

நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமானதே , ஏமாற்று வேலை அல்ல.சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக நதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஏன் தமிழகத்திலேயே அந்த காலத்தில் சிறிய அளவில் நடைப்பெற்றுள்ளதை அறிவீர்களா? பரம்பிகுளம்-ஆழியாறு திட்டம், காளிங்கராயன் கால்வாய் திட்டம் எல்லாம் இது போன்ற இணைப்புகளின் முன்னோடி தான்!

இந்திரா காந்தி காலத்திலேயே நதி நீர் இணைப்பு திட்டதிற்கான செயல் வடிவம் சி.ஒய்.ராவ் தலைமையில் முன்வரைவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிட வேண்டிய நேரத்தில் தவான் என்ற மூத்த அரசியல்வாதியின் தவறான ஆலோசனையினால் நிராகரிக்கப்பட்டது. அவர் இந்திராவிற்கு சொன்னது இதனால் சில மானிலங்களில் நமக்கு அதிருப்தி ஏற்படும் வாக்கு வங்கிப்பாதிக்கப்படும் என்பதே. அதனாலேயே அத்திட்டம் அப்போது நிராகரிக்கப்பட்டது.

அப்பொழுது 10,000 கோடி ரூபாயே போதுமானது என்றும் சொன்னார்கள்.இந்திரா நினைத்து இருந்தால் அந்த கனவு திட்டம் நிறைவேறி இருந்து இருக்கும்.

வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கி விட்டு தொலை நோக்கு பார்வையுடன் செயல் பட்டால் சாத்தியமே அதிபர் அப்துல் கலாம் கூட நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நதிகளை இணைக்கும் முன்னர் நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படும் என்பதும் அந்த திட்டதில் உள்ள ஒரு அம்சம் எனவே , இப்போது உள்ளது போன்று நதி நீர் பகிர்வில் சச்சரவுகள் வராது.இப்பொழுதே கூட தேசிய மயமாக்கலாம் எல்லாம் பாழைப் போன அரசியல் படுத்தும் பாடு தான்.

சில வெளிநாடு வாழ் இந்தியர்களை கொண்டு துவக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு செலவு அனைத்தையும் அவர்களே செய்து திட்டதை நிறைவேற்றுகிறொம் பின்னர் நீர் பகிர்வின் அடிப்படையில் கட்டணம் வசூலித்து போட்ட பணத்தை திரும்ப எடுத்த்க்கொள்கிறோம் என்று முன் வந்தார்கள் வெளியில் தெரியாத ஏதோ சில காரணங்களால் அத்வும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மற்றபடி தாங்கள் கூறிய்ச்வாறு மணல் சுரண்டல், நீர் ஆதாரங்களை சீர் அழிப்பது எல்லாம் தடுக்கபட வேண்டும்.

வரவனையான் said...

சிலவற்றில் மாற்றுக்கருத்து இருந்தாலும் பெரும்பாலும் உண்மையான வார்த்தைகள் நிறைந்த கட்டுரை முத்து. வாழ்த்துகள்

மீண்டும் நிறைய எழுத முனைவீர்கள் என்று எண்ணுகிறேன். குறைந்த பட்சம் கவிதையேனும்

Anonymous said...

நதி நீர் இணைப்பு சாத்தியம், அதற்காக பெருந்தொகை செலவாகும். எதிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. இணைப்பினால் ஏற்படும் தீய விளைவுகளை குறைக்க முயல்வோம். நதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், நீர் நிர்வாகம் அதன் பொறுப்பிலும் இருந்தால், நீதிமன்றங்கள்,டிரிபியுனல்கள் சொன்னதை நடைமுறைப்படுத்தினால்
இது சாத்தியம். சில இந்திய விரோதிகளுக்கு எதனாலாவது இந்தியா பிளவுபடாதா என்ற ஏக்கம்
இருக்கிறது. நதி நீர் இணைப்பு பிரிவினைக்கு வழி தராது. பாஜக ஆளும் மூன்று மாநிலங்கள்
ம.பி,ராஜஸ்தான், குஜராத் ஒர் ஒப்பந்தம் மூலம் சில நதிகளை இணைக்கும் திட்டத்தினை
நிறைவேற்றி வருகின்றன.வாஜ்பாய் முயற்சியில் செய்யப்பட்ட ஏற்பாடு இது.
நதி நீர் இணைப்பு முறையான நீர்வள நிர்வாகத்திற்கு எதிரானதல்ல. நமக்கு அனைத்து அளவிலும் திட்டங்கள், முயற்சிகள் வேண்டும். சிறிய திட்டங்கள் போதும், சேமிப்பின் மூலம் தேவைகளை சமாளிக்கலாம் என்பது ஏட்டில் நன்றாக இருக்கும். முதலில் தண்ணீர் இருந்தால்தானே சேமிப்பீர்கள்.இந்தியாவில் மக்கள் படும் அவதியினை
அறியாமல் சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும் வசதியாக இருந்து கொண்டு நாட்டு நலனுக்கு அவசியமான இதை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

அனானி

//நதி நீர் இணைப்பு சாத்தியம், அதற்காக பெருந்தொகை செலவாகும். எதிலும் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. இணைப்பினால் ஏற்படும் தீய விளைவுகளை குறைக்க முயல்வோம். நதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், நீர் நிர்வாகம் அதன் பொறுப்பிலும் இருந்தால், நீதிமன்றங்கள்,டிரிபியுனல்கள் சொன்னதை நடைமுறைப்படுத்தினால்
இது சாத்தியம்//

நதிகளை தேசிய மயமாக்கினால்,
முழுக்கட்டுப்பாடும் எந்தக் கூட்டணிக்கும் பயப்படாத, வளைந்துகொடுக்கத் தேவையில்லாத மத்திய அரசிடம் இருந்தால்,
நீதி மன்றங்கள், டிரிப்யூனல்கள் சொன்னதை நடைமுறைப் படுத்தினால்

இது சத்தியமான சாத்தியம்! சந்தேகமேயில்லை.

நீங்களே 'னால்.. னால்..' என்று சந்தேகமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இணைப்பது இருக்கட்டும். நதிநீர் பங்கீடுகளையே அலட்சியப்படுத்தி நீதிமன்ற, டிரிப்யூனல் தீர்ப்புகளை எள்ளி நகையாடுகின்றன மாநில அரசுகள். யார் சொன்னாலும், தடுத்தாலும் அணைகட்டுவோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள். பொதுமக்களை, விவசாயிகளைத் தூண்டிவிட்டுப் போராட்டத்தில் குதிக்கச் செய்கிறார்கள். இதெல்லாம் தாண்டி தேசியமயமாக்குவதோ, இணைப்பதோ நல்லபடியாக நடக்குமா?

இப்போதே அடித்துக்கொள்கிறார்கள் - யார் சொல்லும் கேளாமல். இன்னும் வன்முறைகள் அதிகமாகி அடித்துக்கொள்வார்கள் என்றே குறிப்பிட்டேன். பிரிவினையைப் பற்றி எங்கே ஐயா சொன்னேன்?

கடலில் வீணாய்க் கலக்கும் உபரி நீரை ஒன்றும் செய்யவேண்டாமா? பல்வேறு வகைகளில் வீணாகும் நீரைச் சேமிக்கவேண்டாமா? மழை நீரை இன்னும் அதிக அளவில் சேமிக்கவேண்டாமா? கடல்நீரைச் சுத்திகரித்துக் குடிநீராய் மாற்றி மக்களுக்கு வழங்குவதில் என்ன பிரச்சினை?

100 வருடங்களாக நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள். இதை நடைமுறைப் படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள், நூற்றாண்டுகள் பிடிக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் மேற்சொன்ன மாற்றுத் திட்டங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செயல்படுத்த முடியக் கூடியவை என்பதை மறுக்கிறீர்களா?

நான் இன்றைய கஞ்சிக்கு யோசிக்கிறேன். நீங்கள் அடுத்த வாரம் பிரியாணி கிடைப்பதற்கு வழி சொல்கிறீர்கள்.

இதில் அறிவாலயத்தையும், திராவிடத்தையும், தேசத் துரோகத்தையும் காண்பவர்களைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

எந்தத் தீர்வாக இருந்தாலும் சீக்கிரம் செய்யுங்கள் - அவ்வளவுதான்.

பாலாஜி-பாரி said...

அருமையான பதிவு.
மேலும், இராஜஸ்தானில் ஒரு விவசாயி (பெயர் நினைவுக்கு வரவில்லை), தனது பகுதியின் நீராதாரங்களை செப்பனிட்டு, வெற்றிகரமாக விவசாயம் செய்துள்ளார். இத்தகைய நிகழ்வுகள், நம்மிடம் இருக்கும் localized நீராதாரங்கள் சீரான முறையில் நிர்வகிக்கப்டுவதில்லை என்றே காட்டுகின்றது. ஆகையால் முதலில் இத்தகைய பணிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும், நீரிணைப்பு என்பது, நில ஆக்ரமிப்பு மற்றும் அது சார்ந்த மனித உரிமை மீறல்கள் என சிக்கல்களுக்கு வழிவிடுமே அன்றி, ஒரு நிரந்தரமான தீர்வை தருமா என்பது பெரிய கேள்விக்குறி.
இந்த பதிவிற்கு நன்றிகள்

ஜீவி said...

"நதி நீர் இணைப்பு" என்னும் எனது பதிவுக்குப் பின்னூட்டமாக, உங்களது
இந்தப் பதிவின் சுட்டியைக் கொடுத்தமைக்கு நன்றி.
ஒரு நீண்ட விவாதத்தைத் தொடங்கி
வைத்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லா அவலநிலைகளையும் களையத்தான்
'நதி நீர் இணைப்பை' ஒரு ஆரம்பத் திட்டமாகக் கொண்டு, இந்த தேசத்தின் ஒட்டுமொதத அரசியல்
மாற்றத்திற்காக ஒரு உரத்த சிந்தனையைத் தொடங்கி வைத்தேன்.
'அது எவ்வளவு தூரம் வெற்றிகரமாக
செயல்படும்' என்பது காலத்தின் கையில். போக்குக் காட்டி, குரங்கின் கைப் போன மாலையைப் பிடுங்க வேண்டும். இது லேசில் நடக்கக் கூடிய வேலையும் அல்ல.
மாலை பிய்ந்து நார் நாராகப் போவதற்குள் இந்தக் காரியம் நடக்க வேண்டும்.

Related Posts with Thumbnails