உயிர்கள் கருக்கப்பட்டு
ஆண்டுகளாகிவிட்டது
ஆறு
கர்ப்பப்பைகளின் ரணங்களோ
இன்னும்
ஆறாததாய்த்தான் இருக்கிறது
*
கோவை வேளாண்கல்லூரி மாணவிகள் தர்மபுரி இலக்கியம்பட்டியில் எரித்து கொள்ளப்பட்ட அந்த தருணத்தில் நான் தர்மபுரியில்தான் கல்லூரியில்(சப்தகிரி பொறியியல் கல்லூரி) படித்து வந்தேன். பெரும்பாலும் ஒரு நேரத்தோடு கல்லூரி முடிந்துவிடும். அன்றும் அதே போலத்தான் அன்றும் மதியமே கல்லூரி முடிந்துவிட்டது. நான்கு ரோட்டுக்கருகில் அந்த கல்லூரி பேருந்துகள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மதிய உணவுக்கு சென்றீருந்தார்கள். நாங்களும் அந்த பேருந்தின் வண்ணத்தை கிண்டலடித்து கொண்டு சென்றோம். அப்போது யாருக்கும் தெரியாது, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கொடுர சம்பவம் நடக்கபோகிறதென்றுநாங்கள் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை நான்கு மணி அளவில்தான் விசயம் தெரிந்தது. உடனே எல்லோரும் இலக்கியம்பட்டிக்கு சென்றோம். விவசாயக் கல்லூரி மாணவர்கள் மிகவும் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் இருந்தனர். அங்கிருந்த போலிஸாரும் வெளி மாணவர்கள் யாரையும் அவர்களோடு பேச அனுமதிக்கவில்லை. எப்படியோ ஒரு கட்டத்தில் தர்மபுரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களை நெருங்கிவிட்டோம். பிறகு மாணவர்கள் எல்லோரையும் போலிஸார் அனுமதித்து விட்டனர். யாரும் அறிந்திருக்கவில்லை நாலாபுறமும் காவல்துறை குவிக்கப்பட்டிருப்பது. இருபது நண்பர்கள் மனிதச் சங்கலிபோல எரிக்கப்பட்ட அந்த பேருந்தைச் சுற்றி போலிஸார் நெருங்காவண்ணம் நின்று கொண்டோம்.நேரமாக ஆக பதட்டம் கூடிக்கொண்டே போனது. எல்லோரின் மனதில் அடங்காத கோபம் மட்டும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேண்டும், அப்போதைய முதல்வர்கலைஞர் வரவேண்டும்( அது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இப்போது உணர முடிகிறது), குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்தார், மாணவர்களோடு பேசினார். யாரோ ஒரு மாணவன் ஆட்சித்தலைவரின் மேல் விழ காவல்துறையினர் உடனே மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். எல்லோரும் நாலாபுறமும் சிதறி ஓடினாலும் அவர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. பேருந்தைச் சுற்றி நின்ற நாங்கள் எங்கள் கைகளை இறுகபிடித்துகொண்டுஎன்ன நடந்தாலும் கலையக்கூடாது என்று நின்றோம். ஆனால் ஓடி வருபவர்கள் எங்கள் மீதும் விழ ஆரம்பிக்க அச்சம் வந்துவிட்டது. நாங்கள் தப்பிக்க வேண்டுமானால் அருகிலிருந்த சாக்கடையில் குதித்துதான் தப்ப வேண்டும் என்ற நிலை. போலிசாரும் வேகமாக தாக்கவேறுவழியின்றி குதித்தோடி தப்பினோம். சிலர் மேல் ரப்பர்குண்டுகள் உரசிச் சென்றன. அன்று மாலை அந்தப்பகுதியே போர்க்களம் போல இருந்தது. அரசு மருத்துவமனையை ஒட்டியிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. ஒரு சில தொலைபேசி கடைகளை வலிய திறக்கச் செய்துவீட்டிற்கு தகவல் சொன்னோம். அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் விவாதித்தோம். மறுநாள் நான்கு ரோடு சந்திப்பில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கூடினோம். ஏறத்தாழ நூறு பேருக்கு மேல், மாணவிகளும் இதில் அடக்கம். அப்பொது அரசியல்வாதிகள் பலரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று வந்தார்கள். இதை மாணவர்களே பார்த்து கொள்கிறோம், அரசியல்வாதிகள் யாரும் தலையிடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்ல அவர்கள் திரும்பி போய்விட்டார்கள். அப்போதுஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் மீதும் கோபம் வந்தது. இவர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆத்திரம். வருவாய்துறை அதிகாரி ஒருவர் தொழிலதிபர் என்று சொல்லிக்கொண்டு மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மாணவர்கள் கேட்டது நேற்று நடந்த சம்பவம் போன்று எங்கள் மீதும் நடக்காது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்கவும் அவர் நகர்ந்து விட்டார். மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டன. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு பெரிய கல் ஒன்று பேருந்து ஒன்றின் கண்ணாடியை பதம் பார்த்தது. எங்களுக்கும் பதட்டம் கூடிப்போனது. மாணவிகள் வேறு எங்களோடு இருந்தது அதை இன்னும் அதிகப்படுத்தியது. காவல்துறை உயரதிகாரி, தயவு செய்து கலைந்து விடுங்கள், சமூக விரோதிகள் மாணவர்கள் போர்வையில் ஏதேனும் செய்து விடக்கூடும் பின்பு நாங்கள் கடுமையான நடவடிக்கைகள்எடுக்க வேண்டியிருக்கும், தேவையில்லாமல் பிரச்சனையை சிக்கலாக்காதீர்கள் என்று மென்மையாக சொன்னார். எங்களுக்கும் வேறு வழி இல்லை. கலைவதுதான் சரியானதாக இருக்கும் என்றுணர்ந்து கலைந்தோம்.
கல்லூரி காலத்தில் எங்கள் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்ட சம்பவம் அது. கைது செய்யப்பட்ட பலரும் ஜாமினில் வெளிவந்த போது எங்களுக்கு நீதித்துறையே இவ்வளவுதானா, குற்றவாளிகளைச் தண்டிக்கமுடியாத நீதித்துறையின் மீதே வெறுப்பு வந்தது.ஆட்சி மாற்றத்திற்கு பின் நீதி கிடைக்கலாம் என்றிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இழுத்து கொண்டிருப்பது இன்னும் வேதனைக்குரிய ஒன்றே. தங்கள் மகள்களை இழந்த அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு பெறுவதை விட வேறெதையும் செய்ய முடியாத கையறுநிலைதான் எல்லோருக்கும்
*
இந்த சம்பவத்தை என் நட்சத்திர வாரத்திலே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாகவும், அவசரகதியில் எழுதக்கூடாது என்பதாலுமே தள்ளிப் போட்டிருந்தேன். மேலே இருப்பது முகமூடியின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம்( சில திருத்தங்களுடன்) .
அரசியல் மரணங்களுக்கும் அரசியலக்கான மரணங்களும் நம் ஜனநாயகத்தில் இரண்டற கலந்துவிட்டன. கொள்கையை வைத்து அரசியல் நடப்பது எல்லாம் தேர்தல் அரசியலில் காலாவதியாகிவிடுகின்றன. தேர்தல்களில் வெற்றி மட்டுமே பிரதானம் என்னும் முடிவுக்கு ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளிம் வந்து விட்டன. அதனால் ஒரு சில கட்சிகளுக்கு வன்முறைச் சாயம் பூசுவதும், சில கட்சிகளுக்கு புனித பூச்சுகள் பூசுவதும் அவரவர் மனதிருப்திக்காக செய்யப்படும் விசயங்களே.
மாணவர் சக்தி உலகில் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கிறது. பிரச்சனைகளின் வீரியத்தை பொறுத்தும் ஒட்டு மொத்தமாக எழக்கூடிய புரிந்துணர்வுகளும் அவ்வகையான போராட்டங்களை வெற்றி கொள்ளச் செய்கின்றன.தமிழகத்தில் மிக முக்கியமான அரசியல் மாற்றத்திற்கு மாணவர் சமுதாயம் காரணமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் எனது இன்றைய புரிந்துணர்வுகள். இது பற்றிய எந்த தெளிவும் இல்லாத மாணவ பருவத்தில் நடந்த நிகழ்வுதான் அந்த துயரச்சம்பவம். இந்த மாணவிகளின் மரணம் மாணவ சமுதாயத்திடைய பெரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் எதிர்ப்புகுரல்கள் அரசு இயந்திரங்களால் நீர்க்கச் செய்யப்பட்டன. மேடைகளில் எதிர்த்து வீராவேசமாகபேசும் அரசியல்வாதிகள் பலர் தொழில்ரீதியாக அனுசரணையான நிலையை மேற்கொண்டிருப்பார்கள். இது எதார்த்தம். அரசியல்வாதிகளை நம்பி நாம் அணி திரண்டால் அவர்கள் மொத்தமாக அழைத்து கொண்டு எதிரியிடமே அடிமைப்படுத்தி விடுவார்கள்.
தலைவர்களுக்கு தொண்டர்களாக இருப்பது ஒரு ரகம். சொரணையற்ற கொத்தடிமைகளாக இருப்பது மற்றொரு ரகம். தலைமைகளை குளிர்விப்பது ஒன்றே அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் என்று இந்த அறிவீலித் தொண்டரவுடிகள் இருக்கும் வரை இது போன்ற துயரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எண்ணிக்கைகளும் நடைபெறும் முறைகளும் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கும். ( குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னாளில் கல்வி மந்திரியாகக்கூட வரலாம்- அரசியலின் மிகக்கோரமான அவலம் அது)
இந்த அரசியல் அக்கிரமங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்தூணான நீதித்துறைக்கு சவாலாகவே அமைகின்ரன. அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கதான் நீதிமன்றங்கள் இருக்கிறதே தவிர காசு இருப்பவனுக்குதான் நீதி என்றால் அது கண்டிக்கப்பட வேண்டும். நீதித்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட துறையாக இருக்கக்கூடாது. தங்கள் அமைப்பு உயர்வானது என்றால் அதன் நேர்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய நீதிமன்றங்கள் சர்க்கஸ் கூடாரம் போன்றுதான் இருக்கிறது. பல எடுத்துகாட்டுகள் நம் கண்முன்னே கிடக்கின்றன.
ஒவ்வொரு வழக்கையும் வேறு மாநிலத்தில் நடத்த வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள்? நீதித்துறை சுதந்திரமாக இயங்க உறுதி செய்ய வேண்டும். தவறிழைக்கும் நீதிபதிகளுக்கும் மிகக்கடுமையயன தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். நீதிபரிபாலனைக்கு அரசுகளால் இன்னல்கள் வரும் போது அவை மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
வேறு மாநிலங்கள் வழக்கு நடத்துவது சீமான்களுக்கு வேண்டுமானலால் இலகுவாக இருக்கலாம். சாமான்யனுக்கு? எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இழந்தவனை மேலும் மேலும் அலைக்கழிப்பது மாதிரியான துயரம் வேறெதுவுமிருக்காது. வேறு மாநிலங்கள் என்றாலும் சாட்சியை மிரட்டுவது போன்ற எல்லா அக்கிரமங்களையும் செய்ய அரசியல்வாதிகளினால் முடியும். ஒன்றுமில்லாத சாமன்யனுக்கு எல்லாமே ஒன்றுதான். ஜெயலலிதா வழக்காகட்டும், ஜெயந்திரர் வழக்காகட்டும் அவர்களிம் கோரிக்கைகள் வேறு மாநிலத்து மாற்றவது மட்டுமா கோரிக்கை. மாற்றுமிடம் தங்களுக்கு சாதகமான இடமாக இருக்க வேண்டும் என்ற அரிப்பு வேறு.
இது போன்ற வழக்குகள் எல்லாம் விரைவு நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால எல்லைக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும், உடனடியாக, கடுமையாக. அதற்கேற்ப சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதற்குண்டான செயல்முறைகளைத்தான் முன்வைக்க வேண்டும். வழக்கமான அரசியல்தனமான முயற்சிகள் சாமான்யனுக்கு எந்த வகையிலும் பயன் தராது. நீதி விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும், விரைவுபடுத்த வேண்டிய , நிர்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இது குறித்தான எந்த ஒரு முயற்ச்சிக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். *
13 மறுமொழிகள்:
முத்துக்குமரன்,
நெஞ்சம் கொதிக்கும் இந்த கொடூரத்தின் நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
இந்த கொடூரத்தை செய்த மாபாவிகள் தண்டிக்கப்படவில்லையெனில் நீதிமன்றங்கள் மட்டுமல்ல ,கடவுள் இருப்பதற்கே அர்த்தமில்லை.
அவசரப்படாதீர்கள் ஜோ. இப்படி அக்கிரமம் நடந்த இடத்திலேயே அதை ஒட்டி வந்த தேர்தலில் கொடுமை செய்த அதே அரசியல் கட்சி வெற்றி பெறுகிறதே, எப்படி?ஏன்?
நான் சொல்ல வந்தது அதல்ல. நேற்று இரவு 'ராமய்யாவின் குடிசை' (கீழ்வெண்மணி நிகழ்வு பற்றிய குறும்படம்)பார்த்தேன்.44பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை நில உரிமையாளர்களும் விடுதலை. ஆனால் அவர்களின் அடியாளைக் கொன்றதாகப் போடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழைகளில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு வெவ்வேறு தண்டனைகளும் செஷன்ஸ் கோர்ட்டில் கொடுக்கப்பட்டு, அவை உயர், உச்ச நீதி மன்றங்களில் உறுதி செய்யப்படுகின்றன! இன்னுமா நீதி மன்றங்களில் உங்களைப் போன்றோர்க்கு நம்பிக்கை?! பாவம்தான் நீங்கள் - இல்லை, நாம்.
முத்துக்குமரன் - நன்றி நல்ல ஒரு பதிவுக்கு.
முத்துக்குமரன்,
மற்றவர்கள் ஏற்கனவே முகமூடியின் பதிவுகளில் சொன்னதைவிட புதிதாக சொல்ல எதுவுமில்லை, நம் நீதிபரிபாலன முறையை நினைத்து விரக்தியடைவதைத் தவிர.
தருமி சார்,
44 பேர்களை கொன்றவர்களுக்கு விடுதலை அளிப்பதற்கு உள்ளூர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரைக்கும் "போதிய ஆதாரமில்லை". இவர்கள் நீதி வழங்க மறுத்த நிலையில் தாங்களே நீதி வழங்கிய பாதிக்கப்பட்டவர்கள் "போதிய ஆதாரத்தோடு" தண்டிக்கப்படுகிறார்கள். மாற்று நீதிபரிபாலன முறையை பின்பற்றுவதற்கு எல்லாம் வல்ல சினிமா நாயகர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு, ஏதிலிகளுக்கல்ல.
மாணவிகள் எரிப்பு வழக்கிலும் "போதிய ஆதாரம்" இல்லை என்று குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு இணையாக "மக்கள் நீதிமன்றத்தில்" அளிக்கப்படும் "மகேசன் தீர்ப்பை" நீங்கள் சுட்டிக்காட்டிவிட்டீர்கள். வாழ்க ஜனநாயகமும், அதன் வலுவான தூண்களும்.
உங்கள் தர்மபுரி அனுபவம் மனதை உறைய செய்வதாய் உள்ளது. சேலம் கோர்ட்டில் நடைபெறும் கேலிக்கூத்து விசாரணை இந்த நாட்டில் சட்டம் என்பது ஒரு பகல்கனவு என்பதை உணர்த்துகிறது.
//ஒவ்வொரு வழக்கையும் வேறு மாநிலத்தில் நடத்த வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள்? //
சரியான கேள்வி.....
மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்பது உண்மைதான்.
ஆனால் இன்றைய மாணவர்களுக்கு என்ன பிரதானமாக இருக்கிறது என்பதை சிறிது சிந்தித்து பார்த்தால் நீங்கள் காணுவதும் பகல்கனவுதான் என்று உணர முடியும்.அவர் அவர்களுக்கு அவரவர் பாடு...தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி என்பது போலத்தான் இது...
ஆறாத அந்த சம்பவமும் அரசியல் களத்தில் பந்தாகி விட, நம்மைப் போன்றவர்களுக்கு வெறுப்பு தான் மிச்சம்.
குறைந்தபட்சம் - போலீஸை, நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும்போது இன,மத, அரசியற் சார்பற்றவர்களாக தேர்ந்தெடுத்தால் ஒரு வேளை இத்தகைய அவலங்களுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அரசியல் சார்பு இருந்தால் தான் மேற்சொன்ன வேலைகள் கிடைக்கவே வாய்ய்பிருக்கிறது என்பது தான் நாட்டில் பெரியதொரு அவலம்.
என்ன இப்னு...நீங்கள் சொல்லும் "இன,மத, அரசியற் சார்பற்றவர்களாக தேர்ந்தெடுத்தால்..." - இதையெல்லாம் விட பெரிய விஷயத்தை விட்டுவிட்டீர்களே. பணம் அய்யா..பணம்..
நன்றி ஜோ, தருமி, சுந்தரமோர்த்து, முத்து தமிழினி, இப்னு ஹ்ம்துன். Middle east Electricity Exibition, Dubai. இல் எனது நிறுவனமும் பங்கெடுத்திருப்பதால் பணிகள் கொஞ்சம் அதிகம். அதனால்தான் பதிலளிக்க இயலவில்லை.
உங்கள் உணர்வு பகிர்வுகளுக்கு மற்றுமொருமுறை எனது நன்றிகள்
முத்து குமரன்
மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது.
அப்போது அந்த இடத்தில் நீங்கள் இருந்து போராடியிருக்கிறீர்கள் என்றால்
உங்கள் மனநிலை புரிந்து கொள்ள முடிகிறது.
முடிந்த வரையில் போராடியிருக்கிறீர்கள்.
ஆறாத ரணமாய் தான் இருக்கும்.
இனி வரும் காலமாவது இது போன்ற நிகழ்வு நிகழாதிருக்கட்டும்.
அரசு செயல்பாடுகள்குறித்தும்,
நீதிமன்றங்கள் குறித்தும்
வேறு எதுவும் சொல்வதற்கில்லை
நன்றி மதுமிதா அக்கா.
டோண்டு பெயரில் வந்து எச்சப் பின்னூட்டம் இட்டிருக்கும் போலியே நான் எங்கு எழுத வேண்டும் என்று உத்தரவு போடும் வேலையைச் செய்யாதே!
போய் உன் பொழப்ப பாரு
முத்துக்குமரா உண்மையில் அந்தச்சம்பவம் என்னை மனதளவிவ் மிகவும் பாதித்துவிட்டது..
நான் கூட "தருமபுரி வாலாபாக் படுகொலை" என்று அரசியலை எதிரித்து ஒரு கவிதையை அவசர அவசரமாய் எழுதி சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பினேன்.
நீங்கள் களத்தில் இருந்து போராடியிருக்கிறீர்கள் அதற்கு ஒரு சல்யூட்..
முத்துகுமரன்
தேவையான பதிவு.
செவிடன் சங்காக இருக்கும் அரசு இயந்திரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல ஒரே சாவி தேர்தலுக்கு நாம் போட வேண்டிய ஓட்டு.
மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த அசம்பாவிதம் ஒரு உதாரணம். வெளிச்சத்துக்கு வராமலிருக்கும் நீதி மறுக்கப்பட்ட நிகழ்வுகள் அனுதினமும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இதைக் கையாளும் பொறுப்பிலிருப்பவர்கள் நிற்கவைத்துக் கேள்வி கேட்கப்பட வேண்டும் - சற்று சத்தமாகவே. செவிடனுக்குக் காது கேட்காவிட்டாலும் பார்ப்பதற்குக் கண்ணிருக்கிறதில்லையா..
விரக்தியாக இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது. தாமதம் செய்பவர்களின் எதிர்பார்ப்பே நமது நம்பிக்கையைக் கைவிடச் செய்வதுதான். அது நிறைவேற அனுமதிக்கக் கூடாது.
U DONT WORRY THE COURT GIVE A SEVERE PUNISHMENT FOR THAT PERSONS
Post a Comment