அதிகார உரையாடல்களை உடைப்போம்

அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால். உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான மொழியை, உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழி என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைக்கலாம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தியிருக்கிறது, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னுறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கியதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை மட்டும் வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.

ஆகையால் இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.

தேர்தல் பிரசாரம்: பழ. நெடுமாறனுக்கு அனுமதி

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார் பழ. நெடுமாறன். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந் நிலையில் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்ய தான் விரும்புவதாகவும், இதற்கு வசதியாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நெடுமாறனின் கோரிக்கையை ஏற்று அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இருப்பினும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசவோ, பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நிபந்தனை தளர்த்தப்பட்டதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
**நன்றி- தட்ஸ்தமிழ்.காம்**

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ''குடிஅரசில்'' அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே..

''எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை...

நான் சுயநலவாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாக', இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

''--- கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல - ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்''
*
இதுதான் பெரியார்... வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
''ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்''- என்.ராமகிருஷ்ணன்
Related Posts with Thumbnails