(அண்மையில், மரண தண்டனை குறித்த ஒரு மறுசிந்தனையை, இந்தியாவின் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டுள்ள சூழலில், அது தொடர்பான பல்வேறு விவாதங்கள் நாடெங்கிலும் எழுந்துள்ளன. 5.11.05ஆம் நாளிட்ட டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டில், முன்னாள் இந்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.)
பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பான, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 72ஆவது பிரிவு பற்றி அண்மையில் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கூற்றும், நாடாளுமன்றத்தில் அதற்கான விவாதத்தை அவர் வரவேற்றிருப்பதும், அவருடைய போற்றத்தகுந்த அறிவுத் தேடலையும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளைக் கட்டுக்கு கொண்டுவரும் அவருடைய விருப்பத்தையும் தெளிவாக விளக்குகின்றன. நாடாளுமன்ற விவாதம் என்பது நடைமுறை நெறிமுறைகளை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த வழி இல்லை என்றாலும், பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தின் வரம்புகளையும் உள்ளடக்கங்களையும் தெளிவு படுத்துவதாக அமையும்.
இந்திரா காந்தி கொலைவழக்கு தொடர்பான ஒரு நிகழ்வை இங்கு நாம் நினைவுகூரலாம். அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றிருந்தவர்களில் ஒருவரான கேகர்சிங், தில்லி நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1988 ஆகஸ்ட்டில், தில்லி உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தன. அதன் மீதான ரிட் மனு ஒன்றும், மறு ஆய்வு கோரும் மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இவ்வாறு நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்றபின், அவருடைய மகன் அவருக்கான கருணை மனு ஒன்றை இந்தியக் குடியரசு தலைவரிடம் முன்வைத்தார். அந்த மனு, எந்தச் சாட்சியங்களின் அடிப்படையில், அன்று நீதிமன்றங்களாலும் தண்டனை வழங்கப்பட்டதோ, அந்தச் சாட்சியங்களின் நம்பகத்தன்மை பற்றிப் பகுத்தாய்வு செய்திருந்தது. வேறு பிற காரணங்களைத் தாண்டி, உச்சநீதிமன்றம் வழக்கை ஆராய்வதில் தவறு செய்துவிட்டதென்றும், அத்தவற்றை குடியரசு தலைவர் களையவேண்டும் என்றும் அம்மனு வெளிப்படையாகவே கோரியது.
அம்மனுவை நிராகரித்த குடியரசு தலைவர், ""நாட்டின் மிக உயர்ந்ததான ஒரு நீதிமன்றம் தீர்மானித்த முடிவில் தலையிடவோ, வழக்கின் தன்மைகளை ஆராயவோ தன்னால் இயலாது என்று கருது'வதாகக் கூறிவிட்டார்.
ஆனால் அதே சிக்கல் மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. இம்முறை, அவருடைய மகன், குடியரசு தலைவரின் அதிகார வீச்சு குறித்த மிக முதன்மையான செய்திகளைத் தன் மனுவில் எழுப்பியிருந்தார். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பிற்குக் குடியரசுத்தலைவர் கட்டுப்பட்டவர் இல்லை என்பதோடு, ஒரு வழக்கின் தன்மையை ஆய்ந்தறிந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையிலேயே குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவுக்கு வரவேண்டிய கடமையும் உரிமையும் உடையவர் அவர் என்று அம்மனு கூறியது.
மனுவை எதிர்த்து அரசாங்கத்தின் தலைமை வழக்குரைஞர் அளித்த விளக்கத்தை மறுதலித்த உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவரின்
அதிகாரம் குறித்து மனுதாரர் கொடுத்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.
தலைமை நீதிபதி பாதக் மூலமாக, அந்நீதிமன்றம், அரசின் நிடவடிக்கையால் தனிமனித சுதந்திரமோ, உயிர்வாழும் உரிமையோ மறுக்கப் படுமானால், அது நாகரீகம் மிக்க சமூகத்தில் மிகுந்த கவலையோடு எதிர்கொள்ளப்படும். தனிமனித உரிமையும், வாழும் உரிமையும் மறுக்கப்படும் வேளைகளில், அது மிகத் தேர்ந்த, மிகுந்த அனுபவம் உள்ள மூளையிலிருந்து வெளிப்பட்ட தீர்ப்பாக இருந்தபோதிலும், அதனை மறு ஆய்வுக்காக, கூடுதல் அதிகார மையத்திடம் ஒப்படைத்தல் ஏற்றதே. அவ்வாறு ஒப்படைக்கப்படும் அதிகாரம், மக்களின் சார்பான, தேசத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவரிடம் அளிக்கப்பட வேண்டும்'' என்று தீர்ப்பெழுதியது.
இத்தகைய முடிவுக்கு வருவதற்கு, அமெரிக்க அய்க்கிய நாடுகள் அவையின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றைத் தனக்கு அரணாக அமைத்துக் கொண்டது. எனவே, நியாயமற்ற முறையில் தான் தண்டிக்கப்பட்டதாக மனுதாரர் கருது மிடங்களில், கவனமாகவும் சாய்வுகள் ஏதுமின்றியும் மனுதாரரின் கோரிக்கையை ஆராயவும், நீதிபதிகள் தவறு செய்துள்ளனர் என்று கருதுமிடங்களில் தண்டிக்கப்பட்டவருக்கு சலுகை வழங்கவும் குடியரசு தலைவருக்கு உரிமை உள்ளது. இந்நிடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பாகவோ, நீதிமன்ற நடைமுறைகளில் குறுக்கிடுவதாகவோ ஆகாது.
தமிழில்: சுபவீ.
நன்றி: தென்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment