பொறியாளர் கணேசன் மீட்பு

விருதுநகர்: அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பொறியாளர் கணேசனை, ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். பொறியாளரான இவர் அஸ்ஸாமில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த டிசம்பர் 22ம் தேதி கணேசன், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். கணேசனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 3 கோடி பணம் கொடுக்க வேண்டும் என கணேசனின் வீட்டுக்குப் போன் செய்து தீவிரவாதிகள் மிரட்டினர்.

கணேசனை மீட்கும் பணியில் முதலில் அலட்சியம் காட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரதிதேவி தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை பார்த்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர் கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உதவியினால் ரதிதேவி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. கணேசனை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்த ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பூடான் எல்லை அருகே கணேசன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்தது.
அங்கு கணேசன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ராணுவம் அப்பகுதியை முற்றுகையிட்டது. உள்ளூர் போலீஸாரும் உடன் வந்தனர். தாங்கள் முற்றுகையிடப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் கணேசனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.இதையடுத்து கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் பூடானில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்திற்கு கணேசன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணேசன் பத்திரமாக மீட்கப்பட்ட விவரத்தை ராணுவ அதிகாரிகள் ரதிதேவிக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.கணேசனும், ரதிதேவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினருடன் பேசினார். இதனால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். விஜய கரிசல்குளம் கிராமமும் மகிழ்ச்சி அடைந்தது. அலுவல் ரீதியான விசாரணைகள் முடிந்த பின்னர் இன்னும் ஒரு வாரத்தில் ஊர் திரும்பவுள்ளதாக கணேசன் தெரிவித்துள்ளார் என ரதிதேவி தெரிவித்தார்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
**
சிறப்பாக செயல்பட்டு பொறியளர் கணேசனை மீட்ட ராணுவத்திற்கு பாராட்டுகள்

4 மறுமொழிகள்:

வெட்டிப்பயல் said...

ரொம்ப சந்தோஷமான விஷயம்...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!

உங்கள் நண்பன்(சரா) said...

நேற்று நானும் இந்தச் செய்தியை தொலைக்காட்டிசியின் வாயிலாக அறிந்து மகிழ்ந்தேன்!

//மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உதவியினால் ரதிதேவி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு //

ஜனவரி-25ல் நாகர்கோவிலில் நடந்த வீரவணக்க நாளில் இதைப் பற்றி வைகோ போசியிருந்தார்.

திரு.கணேசன் மீட்கப்பட்டது மகிழ்ச்சியான செய்தி,
இதற்க்கு முயற்சி எடுத்துக் கொண்ட தலைவர்களுக்கும், பத்திரமாக மீட்ட ராணுவத்திற்க்கும், சாமானிய மனிதனை பற்றி பதிவிட்ட உங்களுக்கும் நன்றி!


அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

யெய்யா நல்ல செய்தி சொன்னீங்கய்யா. ரொம்ப சந்தோசம். இந்த விசயத்துலயோவது கருணாநிதியும் வைகோவும் ஒரு நல்லதச் செஞ்சாங்களே. ராணுவத்துக்கும் அவங்களுக்கும் நன்றி. இதுல உதவியா இருந்த அத்தன பேருக்கும் நன்றி.

Anonymous said...

எனது நாத்தனாருக்கு அஸ்ஸாமில் பணியாற்றும் ஒரு ராணுவ அலுவலரின் வரன் வந்தது. எங்கள் வீட்டில் ரொம்பக் குழம்பி கடைசியில் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். சரியாக 2 மாத்த்தில் இப்படி ஒரு செய்தி வந்ததும் நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.


இப்படிப்பட்ட செய்திகளை பதிவாக்கியது நல்ல விஷயம்!

Related Posts with Thumbnails