காவேரியும் தமிழக விவசாயமும் - அர. செந்தில்குமரன்
காவிரி நடுவர் மன்றத்தை மாறியமைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையின் விளைவாக, காவிரி பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பு இன்னும் இரண்டொரு மாதங்களில் வருகிற நிலையில் கர்நாடக அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கை தமிழக விவசாயிகளையும், கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.காவிரி பிரச்சனை இன்றுநேற்றல்ல... பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை...
அதற்கு முன்பு காவிரி பற்றியும் அதை சுற்றி நடந்த நிகழ்வுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மலைகளும், காடுகளும் நிறைந்தது இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.
மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல... அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.
அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.தமிழக, கர்நாடக நீர்வளம்தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.
தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.
இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் தமிழக கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிருக்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயல்கிறது. தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறுகின்றன. காவிரி: தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள்நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு 'நடுவர்மன்றம்' என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் - டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகிறது. தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது கூட காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள், அரசியல்யர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இதை உணர்ந்து தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைப்பாகி காவிரியை மீட்க முயல்வதோடு தென்னக நதிநீர் இணைப்பை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியானது மத்தியரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துமேயானால் காவிரி தீர்விற்கு அதுவே அச்சாரமாக அமையும்.
நன்றி: ஆறாம்திணை.காம்
Subscribe to:
Post Comments (Atom)
4 மறுமொழிகள்:
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு குறித்து எழுதிய பதிவு சேமிக்கும் முன்பு அழிந்துவிட்டதால் காவிரி நதி நீர் தொடர்பான செய்திகளை உடைய மேற்Kஅண்ட கட்டுரையை பதிவிட்டிருக்கிறேன்.
காவிரி குறீத்து எழுத கேட்டுக்கொண்ட நண்பர் பெனாத்தல் சுரேஷ்ற்கு நன்றி. இந்த பதிவு நமக்கு பல புரிதல்களைத் தரும்
இப்பதிவுக்கு நன்றி முத்துகுமரன்.
தீர்ப்பு பற்றிய எண் விளையாட்டுகள் பற்றிய விரிவான கட்டுரையை நாளை எதிர்பார்க்கலாமா?
பதிவுக்கு நன்றி முத்துகுமரன்!
நேற்று வெளிவந்த காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் சில நுட்பமான 'எண் கணித' விளையாட்டுகள் உள்ளதால் குழப்பம் அதிகரிக்கிறது.
காவிரி நதியில் சராசரியாக 740 ட்.எம்.சி தண்ணீர் உற்பத்தியாவதாக ஒரு கணக்கு வைத்துக் கொண்டு அதற்கேற்ப 4 மாநிலங்களும் பிரித்துக் கொள்ளவேண்டும் என்பதே இந்த இறுதித் தீர்ப்பின் சாராம்சமாகக் கருதப்படுகிறது.
தமிழகத்திற்கு 419 டிஎம்சி, கருநாடகத்திற்கு - 270 டிம்சி, கேரளத்திற்கு - 30, புதுவைக்கு - 7 என பிரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
நடுவர் மன்ற் இறுதித் தீர்ர்பில் தமிழகத்திற்கு - 2055 டிஎம்சி தண்ணீர் அளவைத் தர கருநாடகம் அறிவுறுத்தப்பட்டிருந்த்தாது இதுகாறும் என்பாது தெரிந்ததே.
இப்போது உண்மையில் கருநாடகம் - நமக்கு 192 (+ புதுவைக்கு & ஆக 199) டிஎம்சி-தான் தர வேண்டும்!!
ஆக்க, 205-ஐ விட குரைவான அளவே கருநாடகம் தந்தால் போதுமானது. மிச்சமெல்லாம் தமிழகத்த்டின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்தே காவிரிக்குள் பாய்கிறதாக கணக்கு.
அதேபோல் - முன்பும் 205 டிஎம்சி தரவில்லை; 180 தான் தந்தார்கள்; மிச்சம் 25 டிஎம்சி - நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து காவிரிக்கு வந்தது என்றும் ஒரு விவசாய சங்கத் தலைவர் தொலைக்காட்சிப்[ பேட்டியில் சொல்கிறார்!
யாராவது இந்த எண்ணிக்கை விளையாட்டை என்னைப் போல பாமரனுக்கு்ம் புரிகிறாற் போலச் சொன்னால் புண்ணியம்! :)
>> நடுவர் மன்ற் இறுதித் தீர்ர்பில் தமிழகத்திற்கு - 2055 டிஎம்சி தண்ணீர் >>
- என்பது 205 டிஎம்சி என இருக்கவேண்டும்.
Post a Comment