ஐந்தில் அடங்குமா :-)

மனித வாழ்வு என்பதே உறவுகளாலும் உணர்வுகளாலும் முன்னும் பின்னும் பிணைக்கப்பட்ட
ஒரு சங்கிலித் தொடர்பயணம்தான். எனவேதான் இந்த வடிவில் வரும் எந்த நிகழ்வும் இயல்பாக நம்மை கவர்ந்துவிடுகிறது.இணையத்திலும் நான்கு, ஆறு , சுடர், Tag என மீண்டும் மீண்டும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் இவைகள் உறவுச் சங்கிலியாக பரிணமித்துவிடுகின்றன. இன்று என்னையும் இந்த விளையாட்டில் தன்னடக்க செம்மல் தம்பியும்,
கிரிக்கெட் தேழர் பாஸ்ட்பவுலரும்,

இணைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. வித்தியாசமான அல்லது கிறுக்குத்தனமான எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு கிறுக்கனாகவும் வெளிப்பார்வைக்கு வித்தியாசமானவனாகவும் காட்சி தருகிறான். என்னைப் பற்றி நான் வித்தியாசமாக உணர்வதை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிழல்கள்-நிஜங்கள்:
சிறுவயதிலிருந்தே நான் உணரும் ஒரு பழக்கம் இது. நிழலான வடிவங்கள் மீதான ஈர்ப்பு. எந்த ஒரு பொருளையும், இடத்தையும், மனிதனையும் கற்பனையாக நான் விரும்பிய வண்ணம் உருவாக்கிக் கொள்வது. பார்க்காத ஒரு மனிதரைப் பற்றி பேசும் போது அவரைப் பற்றி பேசப்படும் செய்திகளை வைத்து அவரது தோற்றம் இப்படி இருக்கும், குரல் இப்படி இருக்கும், குணம் இப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பது. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் இப்படி கற்பித்து கொள்வது எனக்குள் பெரும் மகிழ்ச்சியை தரும். இதே போலத்தான் இடங்களைப் பற்றியான கற்பனை. குறிப்பாக வீடுகளைப் பற்றியான கற்பனை. பலமுறை வீடு பார்த்துவிட்டு அப்பா சொல்லும் குறிப்புகளைக் கொண்டு ஒரு வீட்டை என் விருப்பப்படி வடித்துக் கொள்வேன். அநேகமாக எல்லா தருணங்களிலும் என் கற்பனைக்கு பொருந்தாமலே இருந்திருக்கிறது. எப்போதுமே நிஜமான நிழலை நான் உள்வாங்கவில்லை.

மறதி:
இன்னைக்கு வரைக்கும் இந்த குணம் என்னை விட்டுப் போகவில்லை. எங்க வீட்ல சொல்லுவாங்க உனக்கு கை மறதிடானு. எந்த பொருளானாலும் கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்படியே எங்காவது மறந்துவிடுவேன். அதிகம் நான் மறப்பது சாவிகளே. பள்ளி கூட தருணத்தில் சைக்கிள் சாவியை தொலைத்துவிடுவேன். சைக்கிள் சாவியை சமயலறை, கழிவறை, பீரோ என இடம் பொருள் ஏவல் இல்லாமல் தேடுவேன். எனக்கு தட்டுப்படவே செய்யாது. அம்மா வந்துதான் எடுத்து கொடுப்பார்கள் ஒவ்வொரு முறையும். சில நேரங்களில் கண் எதிரே இருக்கும். அந்த ஒரு இடத்தைவிட்டு மத்த எல்லா இடங்களிலும் தேடும் பார்வை திறன் என்னுடையது. காலம் மாறி இருந்தாலும் பழக்கம் அப்படியே இருக்கிறது. சைக்கிள் சாவிக்கு பதில் சமயங்களில் அறைச்சாவி. கைபேசி, பர்ஸ் என தொடர்கிறது. என்ன ஒரு வசதி கைபேசியை மறந்துவிட்டால் எளிதாக கண்டுபிடித்துவிட முடிகிறது. இன்னொரு கைபேசியிலிருந்து அழைப்பு அனுப்பி:-). அதே போல பர்ஸ்க்கு ஏதேனும் வழி இருந்தால் கண்டறிய வேண்டும்.

புத்தகங்கள்(வாசிப்பு):
புத்தகங்கள் மீது எப்போதும் எனக்கு மிகுந்த பிரியம். எந்த நேரமானாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். ஆனந்தவிகடன், குமுதம் பொன்றவை எல்லாம் அரைமணி நேரம்தான். விறுவிறுவென வாசித்துமுடித்துவிடுவேன். அடுத்தவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க ரெம்பபிடிக்கும். அவர்கள் இரண்டு பத்தி முடிப்பதற்குள் இரண்டு பக்கங்களை வாசித்திவிட்டு காத்துகிடப்பேன் எப்போ அடுத்த பக்கம் திருப்புவார்கள் என்று. வீட்டில் சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்று வாசிக்க இருக்க வேண்டும். கதைபுத்தகங்கள் எதுவும் இல்லையென்றால் அப்பாவின் சேமிப்பில் இருக்கும் கம்யூனிச புத்தகங்களை வாசிப்பேன். சில நேரம் அப்பாவின் சங்க சம்பந்தமான துண்டறிக்கைகளை வாசித்து கொண்டிருப்பேன். அது பத்துவருட பழையதாக இருந்தாலும். சப்பாட்டு நேரத்தில் புத்தகத்தை பார்த்துகொண்டு தரையில் சோறு உண்ண முயற்சித்த தருணங்களும் உண்டு. என் தலைமாட்டில் புத்தகங்கள் வைத்துக் கொண்டு உறங்குவது மிகப் பிடித்தமான செயல். ஆனாலும் ஒரு சில புத்தகங்கள் தண்ணி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்பு பாட புத்தகங்கள். இப்போது கவிதை புத்தகங்கள்.

காதல்:
அது என்னவோ தெரியாது எனக்கு காதலர்கள் என்றால் என் நெருங்கிய உறவைப் போல நினைத்துக்கொள்வேன். காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களோடு எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று துடிப்பேன். கல்லூரிக்காலத்தில் இந்த கிறுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால் இதனாலேயே அற்புதமான நண்பர்களும் எனக்கு கிடைத்தார்கள். காதலிப்பவர்களிடம் அவர்களின் கதை கேட்பது பிடித்தமான ஒன்று. தாந்தோன்றித்தனமாக சிலநேரம் அறிவுரை சொல்வதும், நான் சொல்வது போலவே நடப்பதும் பின்பு சொன்னவனுடன் இன்னும் நட்பு இறூகுவதும். கல்லூரிகால நினைவுகளை இப்போது நினைக்கும் போது எந்த அழுத்தத்தையும் போக்கும் புன்முறுவல் கிடைப்பது ஒரு சுகம்.

மரணத்திற்கு பின்:
என் மரணத்திற்கு பின் என்ன ஆவேன் என்பதை அறிய மிகுந்த ஆவலுண்டு.பலமுறை கனவாகவும் வரும். நான் இறந்து நாற்காலியில் கிடத்தி வைக்கப்பட்டீருப்பேன். உறவினர்கள் எல்லாம் அழுவார்கள். ஏன் இவர்கள் அழுகிறார்கள் என புரியாது. இறந்த பின்பு மனைவியோடு பேசிக்கொண்டிருப்பேன். நான் போறேன். நீ எல்லாத்தையும் பார்த்துகோ என்று சொல்லுவேன்.அதே சமயம் அப்படி இறந்தால் அதன் பின்பு எங்கு இருப்பேன். இந்த உடம்பு எங்க போகும். பிரபஞ்ச வெளியில் மிதப்பேனே? என்று யோசிக்க ஆரம்பிக்கும் போதே உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். உடனே எப்படியாவது தூங்க வேண்டும் என துடிப்பேன். மிகப்பிரியமானவரை நினைத்துக் கொண்டு அவர் பெயரை தொடர்ச்சியாக உச்சரித்து தூங்கிவிடுவேன்.

அப்பாடா!! எப்படியோ நானும் எழுதிவிட்டேன். சங்கிலித் தொடர் அறுபடாது இருக்க நானும் ஒரு ஐந்து பேரை கோர்த்துவிடுகிறேன்.
சிவபாலன்
குழலி
பாலபாரதி
லக்கிலுக்
பொன்ஸ்

அன்புடன்
முத்துகுமரன்

14 மறுமொழிகள்:

கதிர் said...

//"ஐந்தில் அடங்குமா :-)" //

நாலு
மூணு
ரெண்டு
ஒண்ணு
பூஜ்யம்

இதெல்லாம் ஐந்தில் அடங்கும். :-))

கதிர் said...

//தன்னடக்க செம்மல் தம்பியும், //

நன்றி! நன்றி!! நன்றி!!!

இலவசக்கொத்தனார் said...

மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும் - மீ டூ! :))

Anonymous said...

vanakkam..
Nice natural way of writing..fantastic...i have heared ANUBAVAMAE AATRAL..PAADAM..nice flowering reading i had,Muthu kumar,while reading your words..
hats off..

MOOKAMBIKAA

இராம்/Raam said...

//தன்னடக்க செம்மல் தம்பியும், //

:))))))

சூப்பர் அடைமொழி

//புத்தகங்கள் மீது எப்போதும் எனக்கு மிகுந்த பிரியம். எந்த நேரமானாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். ஆனந்தவிகடன், குமுதம் பொன்றவை எல்லாம் அரைமணி நேரம்தான். விறுவிறுவென வாசித்துமுடித்துவிடுவேன். அடுத்தவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க ரெம்பபிடிக்கும். அவர்கள் இரண்டு பத்தி முடிப்பதற்குள் இரண்டு பக்கங்களை வாசித்திவிட்டு காத்துகிடப்பேன் எப்போ அடுத்த பக்கம் திருப்புவார்கள் என்று. வீட்டில் சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்று வாசிக்க இருக்க வேண்டும். //


குமரன்,

எனக்கும் இந்த தொல்லை இருக்குங்க....

நம்ம ஊரிலே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க வந்ததிலிருந்து தீடிரென்னு சூழுந்துக்கிற தனிமையை இந்த புத்தகங்கள் தான் குறைக்கிது..

ஆனா இன்னும் படிக்கவே எவ்வளோவோ புத்தகங்கள் இருக்கு....

நம்ம மதுரை சர்வோதயாவிலே என்னையே ரெண்டு நாளு அடைச்சு வைச்சிட்டா அதை பூராவும் படிச்சிட்டு வெளியே வந்துருவேன்.. ஹி ஹி

கருப்பு said...

எச்யூஸ்மி மிஸ்டர் முத்து,

//eenpaarvaiyil//

இது ஏன் பார்வையில்!

என் பார்வை என்றால் ஒரு "ஈ" போட்டு இருக்கலாமே?

அபி அப்பா said...

இறந்த பிறகு என்ன நடக்கும்....இதிலே நானும் ஒத்து போகிறேன் தம்பி முத்துகுமரன்!!

Naufal MQ said...

நண்பா,
உங்களின் ஐந்து கிறுக்கு குணங்களும் ரசிக்கத் தகுந்தவையே. :)

மறதி, இந்த நூல் வாசிப்பு எல்லாம் நமக்கும் இருக்குங்க.

Naufal MQ said...

//தன்னடக்க செம்மல் தம்பியும்//

மெய்யாலுமா?

முத்துகுமரன் said...

//இதெல்லாம் ஐந்தில் அடங்கும். :-)) //

எல்லாமே ஆறடி நிலத்துகுள்ள அடங்குறதானப்பா :-).

பட்டத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி

முத்துகுமரன் said...

//மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும் - மீ டூ! :))
//
முதன்முறையாக வீட்டுப்பக்கம் கொத்தனார் வந்திருப்பது என் கிறுக்குத்தனத்தினாலா :-).

இலவசக்கொத்தனார் said...

//முதன்முறையாக வீட்டுப்பக்கம் கொத்தனார் வந்திருப்பது என் கிறுக்குத்தனத்தினாலா :-).//

கிறுக்குன்னு சொல்லிட்டீங்க இல்ல. இனிமே அடிக்கடி வந்திடறேன். :))

முத்துகுமரன் said...

வருக ராம். சர்வோதயாவில் புத்தகங்கள் குறைவு என்றே கருதுகிறேன். முக்கியமான மதுரை போன்ற நகருக்கு அங்கு இருக்கும் புத்தகங்கள் குறைவே. அதே போல அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் முறையும் அலுப்பைத்தருவதாகவே இருக்கிறது.

இந்த முறை மதுரை வரும்போது உங்களை சந்திக்க வேண்டும்.

சிவபாலன் said...

உங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி!

உங்களுடை வித்தியாசமானவைகள் நல்லாத்தான் இருக்கிறது..

Related Posts with Thumbnails